Friday, February 20, 2015

ஊழ்வலி

சங்கமாங்குளத்தினுள் ஒரு கிளுவை மரத்தினடியில் குட்டியப்பனும் சகாக்களும் அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். உண்மையில் சீட்டுக்கள் எல்லாம் கேட்பாரற்றுச் சிதறிக்கிடந்தன., ஆட்கள் ஆளுக்கொரு திசைக்குத் திரும்பிக்கொண்டு பீடியை ஊதிக்கொண்டிருந்தனர். 

“அட உன்ற சொத்தையா எழுத்திப்புடுங்கி நொட்டிட்டேன்.. வெளையாட்டுதானடா” குட்டியப்பன் கெஞ்சலாகவே ஆரம்பித்தான்.
சரிதானே என்று பட்டது அருளுக்கும் ஏழுமணிக்கும்; அதற்குள் 

“என்ன மசுரு வெளையாட்டு காசு வெச்சு ஆடையில”  ஈசான் ஏறினான். அதுவும் சரியாகப்படவே ஏதும் பேசாமல்  இருந்துவிட்டனர் இருவரும். 

“இந்த வலந்தாயளி இதுக்குத்தான் காசுக்கு ஆடறப்பல்லாம் மூடுன சோக்கர் வையினு தலையால தண்ணிகுடிச்சிருக்கான்… எத்தன விசுக்கா ஏமாத்திருப்ப ஏண்டா! மசுருமாத்திரமாப்போச்சு உனக்கு எங்களயல்லாம் பாத்தா” 

“அட அதான் மன்னிச்சுருனுட்டன்ல அப்பறம் பின்ன”

விசயம் இதுதான். ஒரிஜினல் ரம்மி இருந்து முதலில் ஜோக்கர் பார்ப்பது குட்டியப்பனாக இருக்கும் பட்சத்தில் மீதியிருக்கும் சீட்டுகளில் எந்த நம்பர் சீட்டு இரண்டோ மூன்றோ இருக்கிறதோ அதில் ஒன்றை எடுத்து விரித்துப்பிடித்த சீட்டு வரிசையில் வலப்புற ஓரத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது. ஜோக்கர் சீட்டை மறைப்பாக எடுத்து இடக்கையில் பிடித்திருக்கும் சீட்டு விசிறிக்கு அருகில் கொண்டுபோய் பார்த்துவிட்டு மீண்டும் கட்டிற்கு பக்கத்தில் வைத்துவிடுவான் என்று மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போது, முன்னமே தயாராக ஓரத்திலிருக்கும் அந்தச் சீட்டை ஜோக்கராக்கி ஜோக்கர் என்னவாயிருந்தாலும் அதை தன் சீட்டுகளோடு வைத்துக்கொள்ளவேண்டியது. மூன்றில் இரண்டு ஆட்டம் குட்டியப்பனே ஜெயிப்பது அப்படியே அடுத்தவன் கவிழ்த்தி வைத்தாலும் கூட குட்டியப்பன் பாயிண்டு 20- ஐ த்தாண்டாது நிற்பதன் சூட்சமம் இன்றைக்கு கிழிந்துவிட்டது.

புதிதாக வாங்கிய கட்டில் ஒரிஜினல் ஜோக்கரின் பின்னட்டை சிவப்பு நிறத்தில்  இருக்க குட்டியப்பன் சித்து வேலை செய்த அட்டை கறுப்பாகிப் போனதால் வந்த வினை. சிவப்பு போய் கறுப்பு வந்ததை ஈசான் கணக்காகப் பார்த்துவிட்டான். 

“சரி வெச்சது அப்பிடியே உட்டுர்றேன் காச எடுத்துக்க போதுமா”

“உன்ற காசக்கொண்டி நாய் பொச்சுல திணி”

“இவனார்றா சூத்துல வெக்க வந்தவனாட்டமா மூஞ்சில முள்ளவெச்சுக் கட்டிட்டு உக்காந்துருக்கான்…”

குட்டியப்பன் சலித்துக்கொண்டான். பிறகு சாக்குக்கடியிலிருந்த தன் பணத்தையும் சட்டைப் பையிலிருந்து இன்னுங்கொஞ்சம் காசைச் சேர்த்தும் ஏழுமணியிடம் நீட்டினான்.

“நாலு பாக்கெட்டு வாங்கிக்க… அப்பிடியே கறியிருக்குதானும் பாரு என்ன”

“நாம்போவல… சடவா இருக்குது”

“சரி உடு நானே போவறேன்.. உனக்கு வேணாம் அப்ப”

“இல்ல சேத்து வாங்கு”

“அதுக்கு மட்டுங் கிளு கிளுனு இருக்குதாக்கும்?”

எழுந்து ஏழுமணியை முறைத்துக்கொண்டே சைக்கிள் ஸ்டாண்டை ஓங்கி மிதித்தான் குட்டியப்பன். ஒரு எட்டு வைத்தவன் மேட்டிலே விஜயன் நடந்து போய்க்கொண்டிருந்ததைப் பார்த்தான். 

“விஜீ”

குட்டியப்பனின் குரல் கேட்டதும் வேகவேகமாக இறங்கி அருகே வந்து நின்றான். சில வினாடிகள் அவனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான் குட்டியப்பன். சிமெண்டோ போர்வெல் மண்ணோ சட்டை முழுக்கப் படிந்திருந்தது. லுங்கிக்கு நிறம் என்று ஒன்றில்லை. கந்தலை நன்றாகக் கசக்கி உருட்டி மண்ணில் போட்டுப் பிரட்டிக் கட்டியிருந்தான் என்று தோன்றியது. வாயைக் கிஞ்சிச் சிரித்துக்காட்டினான். முன்புறம் மேலே இரண்டும் கீழே ஒன்றும் பற்கள் மிச்சமிருந்தன. கடைவாய்ப்பக்கமெல்லாம் இருட்டுதான் தெரிந்தது. ஆளை மிகவேகமாக உருக்கிக்கொண்டிருந்தது காலம்.  

“வெள்ளிங்கிரி ஊடு தெரியும்ல”

தலையை ஆட்டினான் விஜயன்.

“கிழிஞ்சு போச்சு… உன்ற மல்ல நீயே குடி எனக்கு வேணாம்.. நல்ல ஆளு புடிச்சாம்பாரு வாங்கியாரதுக்கு! ஏன் நடமாடிட்டு இருக்குறது பொறுக்கலையாக்கும்”

அருளின் குரல் கேட்டுத் திரும்பினான் குட்டியப்பன். விஜயனைக் குத்திப் பேசினால் ஏனோ பொறுப்பதில்லை அவனுக்கு.  

“ஏன் அவன் வாங்கிட்டு வந்தா என்ன கேடுனக்கு?”

“பேசாத இரு குட்டியப்பா… நீ போய்ட்டு வரதானா பாரு.. இல்லாட்டி வேணாம்; சித்த சும்மா இரு” ஈசானும் சேர்ந்துகொண்டான்.  பதில் சொல்ல வாயெடுத்தவன் ஏதோ நினைத்தவனாக விஜயனிடம் திரும்பி

“நாலு பாக்கெட்டு வேணும்னு கேளு.. இந்தா காசு… இங்கபாரு.. நாஞ்சொன்னேன்னு கேக்கணும்”

“ம்ம்ம்”

“நானு ஆரு?”

“குட்டி”

குட்டியப்பன் சிரித்துக்கொண்டான். விஜயன் சைக்கிளைப் பார்த்தான். 

“எடுத்துட்டுப் போ”

சைக்கிளைத் தள்ளிக்கொண்டு மேட்டை ஏறி, பின்னர் ஓட்டிக்கொண்டு போனான்.

“ஊறுகாயி….”

பின்பக்கம் திரும்பாமலே கையை வேகமாக ஆட்டிக்காட்டிக்கொண்டு போனான்.

அடி மரத்தில் குத்தவைத்து அமர்ந்துகொண்டான் குட்டியப்பன். மூன்றுபேரும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தனர். 

“குடிக்கறது பட்ட.. இதுல தொட்டா ஒட்டிக்குதா அவம் நோவு.. ஏண்டா அக்கிரும்பத்துக்கு பேசிப்பழகறீங்க”

பீடியொன்றை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான்.

“தொட்டா ஒட்டுறதுக்கில்ல குட்டியப்பா… எப்பிடி இருந்தவன் நஞ்சு நாசமாக்கெடக்குறான்;  நாம கெட்ட கேட்டுக்கு அவனுக்கு இன்னைக்கி வேல சொல்றோம். போடா வாடாங்குறோம்,  ஒரு துளி ரத்தத்த கலந்து குடுத்துப்போட்டான்னு வையி”

“அட டாக்குட்டரு! ம்ம்ம் அப்பறம்… ஏண்டா அவனே புத்தி திருகிப்போய்ச் சுத்துறான்.. இவம்பேசுறத நெனச்சுகிட்டு ஊசி எடுத்து ஒரு துளி ரத்தம்புடிச்சி இவஞ்சாராயத்துல கலந்து நொட்டறானாம்”

“கிறுக்கந்தான் இல்லேங்கல.. ஆனா எந்தக்கிறுக்கனும் முச்சூடும் கிறுக்கனில்ல பாத்துக்க..”

“அதுக்கு அவனைய நோண்டாம இருக்கணும் மனுசன்னு மதிச்சுப் பேசணும்.,  பண்டுறதெல்லாம் பண்டீட்டு ஒதுக்கி வெச்சுட்டா ஆச்சாமா? நீயி டேய்ன்றப்ப எட்டி வந்து ஒரு கடி வெறு வெறுனு கடிச்சுப்போட்டான்னா என்ன பண்டுவ? பேசறதுனா என்ன வேணாம்பேசலாம் ஈசா”

“தேவையில்லாத வேலைனு சொல்றோம் வேறென்ன”

“சரி அது தொலையுது… என்ன அவனுக்குப் பொம்பள சீக்குனு முடிவு பண்டீட்டிங்களா? நீங்க கண்டீங்களாடா அவனுக்கு  என்ன சீக்குனு?”

“வேறென்ன நீதாஞ்சொல்லேன்” 

“நாஞ்சொல்றது கெடக்குது… இன்னைக்கில்ல பத்துநுப்பது வருசமாப் பாத்துகிட்டு இருக்கேன் எனக்குத் தெரியாதா… பீடி சிகெரெட்டு மட்டுந்தான். அதேன் அப்பல்லாம் குடிக்கவே மாட்டாப்ல; சும்மா எவனோ கெளப்பி உட்டுருக்கான்; அதையப்புடிச்சுட்டு தொங்குது ஊரு…காமாலைய முத்த உட்டாப்பின்ன ஒடம்பு உருகாம… வெச்சுப்பாக்க ஆளில்ல இல்லாட்டி ஒரு மாசத்துல ஆள ரெடி பண்ணிப்போடலாம் பாத்துக்க.. மேயறவனுக்கெல்லாம் வராதது தான் இவனுக்கு வந்து புடுங்குதா”

ஏதோ சொல்லிவிட்டானே ஒழிய விஜயனின் பழக்கம் ஊரறிந்ததுதான்.

“அடே சாமி…விஜயன் தங்கமப்போ… பின்ன அந்தப்புள்ள சாந்தி என்னத்துக்கு….”

“அவளையெல்லாம் பேசாதடா நாக்கு புளுத்துப்போகும்” ஈசானின் பேச்சை இடையிலேயே வெட்டினான் குட்டியப்பன்.  எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டே திடீரென அவன் கத்தியது பேச்சை மொத்தமாக நிறுத்திவிட்டிருந்தது.

“அது செரி… அப்பறம் உம்பிரியம்.. நாங்கெளம்பறேன்”

ஈசான் எழுந்துவிட்டான். அருளும் ஏழுமணியும் ஏனோ சிரித்தார்கள்; அதைக் கவனித்தமாதிரிக் காட்டிக்கொள்ளவில்லை குட்டியப்பன். அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை மெளனமாயிருந்தான். மற்றிருவரும் கூட அவன் பின்னே நடக்கத்தொடங்கிவிட்டனர். வெயில் முகத்திலறைந்தது. இறங்கிக் கொஞ்சம் கீழே உட்கார்ந்துகொண்டான். 

“உம்பேரென்ன” 

“குட்டியப்பன்” 

“ம்ம்ம்… சின்னச்சாமி பையனா”

“இல்லைங்கண்ணா அவரு பெரியப்பாங்க… முருகேசன் பையன்”

ஒப்பித்தான். விஜியண்ணன் கூப்புடுறார் என்றதுமே உதறத் தொடங்கியிருந்தது அவனுக்கு. மீசை முளைப்பேனா பார் என்று புருவக்குட்டியாய் போக்குக் காட்டிக்கொண்டிருந்த பருவம். விஜயனின் ஒரு கை தடிமன் இருப்போமா என்று ஒரு யோசனை போய்க்கொண்டிருந்தது. தனியாக உட்கார்ந்து கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருந்தான் விஜயன்.

எப்படியும் விஜயன் அடிக்கப்போகிறான்; அப்படி நடந்தால் என்ன செய்வது. அவன் அடிப்பதைத் தடுக்கமுடியாது. யாராவது பார்க்காமல் இருக்க வேண்டுமே. காலை நேரம். நல்லவேளையாக கட்சி ஆபிசில் வேறு யாருமில்லை. அடியைக் கூட வாங்கிக்கொள்ளலாம் அதன்பின் அப்பனிடம் போய்ச் சொல்லலாமா? ஏன் எதற்கு என்று கேள்வி வருமே… பலவாறாக யோசித்துக்கொண்டிருந்தான் குட்டியப்பன். விஜயன் போர்டிலேயே கவனமாக இருந்தான் சில நிமிடங்கள்.

“ம்ம்ம். பூக்கடக்காரம்புள்ளயத் தெரியுமா?”  

“தெரியாதுங்க”

வட்டத்துக்குள் எல்லா காயினையும் அடுக்கிமுடித்து இரண்டு உள்ளங்கையையும் சேர்த்து  அப்படியே திருப்பி ஒரு நிலையில் வைத்தான் விஜி.

“சாந்தினு பேரு”

“இல்லங்க தெரியாது சத்தியமா”

“என்னையவாச்சும் தெரியுமா”

அவன் வலக்கைப் பக்கமிருந்த குழி தவிர மூன்றிலும் காயின்கள் விழுந்தன.

“அது தெரியுங்க”

“ஆமா… உன்னைய அந்தப்பக்கம் பாக்கக்கூடாது நானு என்ன?”

வேகவேகமாகத் தலையாட்டிக்கொண்டான்.  அப்போதைக்கு முடிந்தது சாந்தியோடான பழக்கம். சாந்தி அவன் ஈடு இருப்பாள். ஒரே தெரு என்பதால் நல்ல பழக்கம். அவளுக்கும் அவன் மேலே பிரியமிருந்தது. அசந்தர்ப்பமாகவன்றி மேலே விரல் பட்டால் கூட அது காதலுக்குக் கறை எனுமளவில் இருந்தது அந்த வயதின் காதல்.  நிறைய கனவுகள் கண்டிருந்தான். எழுந்தபிறகு நியாபகம் இருக்காது என்பார்களல்லவா இவனோ கனவையெல்லாம் இம்மி பிசகாமல் அவளிடம் ஒப்பிப்பான்.  இனி அதைப் பேசியென்ன… அத்தனையும் நாசமாகிப்போனபிறகு. இதோ ஒரே பேச்சாகச் சொல்லிவிட்டானே. 

பிறகு குட்டியப்பன் வீட்டுத் தெருவிலே விஜயனின் யெஸ்டியின் உறுமல் நாள்முழுக்கக் கேட்டுக்கொண்டிருந்தது. விஜியை அன்றைக்கு குட்டியப்பன் எதிர்ப்பதெல்லாம் ஒருபுறம். சாந்தியின் அப்பனாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. பிரெசிடெண்டோ சேர்மனோ யாரைப் பார்க்கவும் விஜியைத் தாண்டித்தான் போகவேண்டும். போலீஸ் ஸ்டேசனா? அங்கே விஜி தொப்பி போடாத போலீஸ்காரன். ரவுடி, முரடன் என்பதைத் தாண்டியும் நல்லவன் என்றொரு பெயரும் சேர்ந்து ஒட்டிக்கொண்டிருந்தது விஜயனுக்கு.

அப்பன்காரனின் வேலைகள் ஒன்றும் செல்லுபடியாகவில்லை. சாந்தியும் அவனுடன் நின்று பேசத்தொடங்கியிருந்தாள். ஒரு நாள் சாந்தியைக் கல்யாணம் செய்து கூட்டிப்போய் தனியே குடிவைத்தான் விஜயன். சாந்தியே வம்படியாக நின்று அவனைக் கட்டிக்கொண்டாள் என்றும் கேள்வி. வீட்டில் அவளைக் கைகழுவிவிட்டு சொந்த ஊருக்கே பொட்டிகட்டிவிட்டார்கள். அதன் பின் விஜி ஆளே மாறிப்போய்விட்டதாகச் சொன்னார்கள். வந்தவளைத் தங்கம் தங்கமாக வைத்துத் தாங்குகிறான் என்றார்கள்.  இப்படியாகக் கொஞ்ச காலம் கழிந்தது.

இருவரும் ஜோடியாகப் போவதும் வருவதும் குட்டியப்பனுக்கு இதென்ன தேவிடியாத்தனம் என்று தோன்றும். எப்படி நின்றது நிற்க மனசை மாற்றிக்கொள்ள முடிகிறது பெண்பிள்ளைகளால்… கொஞ்சமும் தயக்கமில்லாமல் நேராகப் பார்த்துச் சிரித்துக் கடந்து போகும் அவள் தோரணையோ ‘உன் பேடித்தனத்தை விடவா என்னுடையது தரங்கெட்டுவிட்டது’ என்று கேட்பது போலிருக்கும்.

ஐந்தரை அடிக்கும் சற்றுக் குறைவுதான் உயரம்; ஆனால் அது ஒரு குறையாகவே படாது அவன் தோற்றம். அரிவாளுக்குப் பதம் பார்க்கலாம் போலிருந்த உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக நலியத் தொடங்கியது. எதோ தகராறில் கூட இருந்தவர்களே ஐந்தாறு பேர் சேர்ந்து அடித்துப் போட்டுவிட்டதாக ஒரு பேச்சு. “வந்ததுல இருந்து அந்த முண்ட பார்வையே சரியில்ல கீழ்முழி முழிக்கறா எம்புள்ளைக்கு சோத்துல என்னமோ கலந்து வெச்சிட்டா போலருக்கு”  என்றாள் விஜியின் ஆத்தா. ஏகப்பட்ட கதைகள் கிளம்பின விஜயன் உருக்குலைந்து போனதற்கு. ஆகக்கூடி அவனது அந்திமம் அது என்பது மட்டிலும் தெளிவாயிருந்தது. ஆஸ்பத்திரி மாற்றிக் கோயிலென்று சாந்தி விஜயனோடு அலைந்து கொண்டிருந்தாள் சிலகாலம்.

ஏதோ இழவிற்காய் பாடை பின்னே நடந்துகொண்டிருந்தான் குட்டியப்பன். 

“குட்டியப்பனா அது… பீடி இருந்தா குடேன்”

விஜியா? கன்னமெல்லாம் ஒட்டிப்போய், முடியுதிர்ந்து,  கைகால்களெல்லாம் குச்சி குச்சியாய்… குட்டியப்பனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டிருந்தது.  பீடியைக் கட்டோடு கொடுத்தான்.  இவன் திரும்பக் கேட்காததற்கு ஒரு காரணமும் அவனாகத் தராததற்கு ஒரு காரணமும் இருந்தன.

“எனக்கு ஒண்ணுமில்ல குட்டி… நல்லாத்தான் இருக்கேன். பைத்தியம்னு சொன்னாங்கன்னா நம்பாத என்ன..”

பார்ப்பவர்களிடமெல்லாம் தான் பைத்தியமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான் விஜி. அது ஒன்று போதுமாயிருந்தது ஊருக்கு அதை உறுதிசெய்துகொள்ள. வீழ்ந்த நாட்டு ராணியின் ருசியோ என்னவோ சாந்தியை வேட்டையாடிக்கொண்டிருந்தது வளவில் ஒரு கூட்டம். குட்டியப்பனுக்கும் ரெண்டொருநாள் வாய்க்கத்தான் செய்தது. அவனளவுக்கு அதில் ஒரு நியாயம் வைத்திருந்தான். முதல் காதலியல்லவா.

“இதென்னத்துக்குக் கண்டவனும் ஊடேற உடற நீயி”

“என்ன பண்ணச் சொல்ற… நீ வேணா கொண்டி வெச்சுக்கறயா எவனும் வரமாட்டான்”

“ஆகுறதப் பேசு சாந்தி… நல்லதுக்கு ஒரு பழம சொன்னா”

“அதாஞ்சொல்றேன் நானும் ஆகுறதப் பேசுவம்… நெருப்புல உழுந்த பொணமாட்டம் இது.. எழுந்தமானா நெஞ்சுல அடிச்சுக் கெடத்தும் சனம்”

“சோத்துக்குஞ்சாத்துக்குந்தான்னா அதுக்கு நாம்பொறுப்பு… இங்கயே இரு ஆனா எவனும்..”

“ ச்சை.. சோத்துக்கு இல்லைனா செத்தழியறேன்.. மாடிகட்டிப் பொழைக்கத்தான் இப்பிடிச்சீப்படறேன்னு நெனச்சியாக்கும்.. எம்புருசன் வேருபுடிச்சாப் போதுமெனக்கு… வைத்தியம்பாக்கக் காசு வேண்டாமா? நாங்கெடந்துச்சாரேன் எப்புடியோ”
கடைசியாக சாந்தியிடம் பேசியது நினைவுக்கு வந்தழுத்தியது குட்டியப்பனுக்கு. மாசமாயிருப்பதாகக் கூடச் சொன்னாள் அன்றைக்கு.  அது முடிந்து ஒருவாரம் கூட இருக்காது; சாந்தி ரயில் தடத்தில் விழுந்து  ஒரு பர்லாங்குக்கு இழுத்துச் சென்றுவிட்டதாகச் சேதி வந்தது.  போய்ப்பார்க்கக்கூட இல்லை அவன். அப்போதும் கூட இதே பேச்சுத்தான் வந்தது. குட்டியப்பனுக்கு சோறு தூக்கம் கெட்டிருந்தது ஒரு வாரத்திற்கு. மணிக்கொருதரம் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நிற்பான். அர்த்தமில்லாத கனவுகளாக வரும். விஜயனின் முகம் நினைப்பிலிருந்து மறைவதே இல்லை. இது நடந்து நான்கைந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனது ஆகட்டுமென்றோ என்னவோ இப்போது சகஜமாகியிருந்தான் குட்டியப்பன். 

இத்தனை நாள் கழித்து இன்றைக்குக் கிளறிவிட்டு விட்டார்கள் தாயோளிகள் என்று கருவிக்கொண்டான்.  அருளும் ஏழுமணியும் சிரித்தது ஞாபகத்துக்கு வந்தது. எதை நினைத்துச் சிரித்திருப்பார்கள்… விஜயனுக்குத்தான் பரிந்து பேசுகிறோமா அல்லது பயம் தன்னைப்போல உளறவைக்கிறதா என்று யோசித்துக்கொண்டிருந்தான் குட்டியப்பன்.


 மேட்டிலிருந்து குட்டியப்பன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்திறங்கினான். 

“லேட்டாயிப்போச்சுது குட்டி”  இருந்த ஆட்களைக் காணாமல் தேடிவிட்டுக் கள்ளமில்லாமல் சிரித்தான் விஜயன்.

“போச்சாதெடு நாம குடிப்பமாமாம்”

ஒரு மிடறிலேயே தொண்டை கமறியது.  ஒரேமூச்சில் குடித்துப் பாக்கெட்டை தூக்கியெறிந்தான் விஜி. ஊறுகாய்ப் பட்டையை விரித்து முன்னே வைத்தான். குட்டியப்பனுக்கு விஜயனைப் பார்க்க அழுகையாக வந்தது. 

“விஜி நானொன்னு கேட்டாச் சொல்லுவியா”

நிமிர்ந்து பார்க்காமலே மெதுவாகத் தலையைசைத்தான். 

“ சாந்தி என்னத்துக்கு ரயிலு முன்னப் போயிப் பாஞ்சா…”

விஜி ஒன்றும் பேசவில்லை.  இன்னொரு பாக்கெட்டிலும் அடிப்புறம் பொத்தலாக்கிக் குடிக்கத் தொடங்கினான். 

“எனத்துக்குன்னா… அதுக்கு ஒரு ரெண்டு நா முந்திங்கூட நாம்பேசுனனப்பா… நல்லாத்தான் பேசிட்டு இருந்துச்சு”

குட்டியப்பனுக்கு உள்ளுக்குள் படபடத்தது.  விஜியின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். ரொம்ப நேரத்திற்கு விஜி எதுவுமே பேசவில்லை. தன் பங்கை எடுத்துக் குடிக்கத் தொடங்கினான் குட்டியப்பன். நிதானம் தவறிக்கொண்டிருந்தது அவனுக்கு.  உச்சி ஏறியிருந்தது; பசி மயக்கம் வேறு. சாக்கை இழுத்துப்போட்டு மல்லாந்து கிடந்தான். விஜி எழுந்து நிற்பது மங்கலாகத் தெரிந்தது. என்றாலும் கண்களை அகல விரித்துப் பார்க்க முடியவில்லை. கண்ணீர் வேறு தளும்பி நிறைந்திருந்தது.

“தெரியல குட்டி… தெரிஞ்சா சொல்லிப்போடுவேன்”  

அதற்குப் பிறகும் ஏதேதோ சொல்லிக்கொண்டே நடந்தான் விஜயன். குட்டியப்பனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. கண்களை மூடிக்கொண்டு படுத்தான். வெயில் உடல் முழுக்கப் படர்ந்திருந்தது. விஜயனின் குரல் சன்னமாகிக்கொண்டிருந்தது. மேட்டில் ஏறிப்போய்க்கொண்டிருந்தான்.
rajan@rajanleaks.com