Wednesday, February 4, 2015

ஆலகாலம்

“வா சாமி ஒரு நட போயிட்டு வந்துரலாம்’’

அப்பாவின் குரல் கேட்டதும் போட்டது போட்டபடி அனிச்சையாய் எழுந்து ஓடினேன். வீட்டினுள் அம்மா ராகம்போட்டு வசை பாடிக்கொண்டிருந்தாள்.

“அவ கெடந்துச்சாரா நீ வா சாமி… ந்தா.. செருப்பு தொட்டுட்டு வா பாக்கலாம்’’

செருப்பைப் போட்டுக்கொண்டு  அப்பாவைத் தொடர்ந்தேன். வெறுங்காலுடன் அப்பா நடக்கும் போது யாரோ போலிருந்தது. சிறுபிராயத்தில் அப்பாவின் தோல் செருப்பின் மீது தீராத பிரேமை உண்டு.  கால்களை ஏகதேசம் மூடியவாறு மரநிறத்தில் மின்னும் செருப்புகள். அப்பாவின் செருப்புகள் போல் வேறெங்கும் கண்டதில்லை நான். வெளியூர் செல்லும்போது இரண்டு மூன்று ஜதைகள் வாங்கிக் கொணர்ந்து வைத்துக்கொள்வார்.அந்தச்செருப்பும் வெள்ளைச் சட்டையும் அப்பாவின் அடையாளங்கள். தும்பை நிறத்தில் சட்டை. நிஜமாகவே தும்பை நிறம்தான்; நீலம் பாய்ந்த வெள்ளைச் சட்டை. 

தெருமுனையில் திரும்பும் போது அப்பாவின் கைகளைத் தாவிக் கட்டிக்கொண்டேன். கடைவீதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். அப்போதெல்லாம் அப்பாவின் தோளேறிச் செல்வதற்கு அவ்வளவு பிரியமாயிருக்கும். எதிர்ப்படுவோரெல்லாம் ‘சரவணம்மவனே’ என்று கன்னத்தை நிமிண்டிவிடுவார்கள். எங்கு சென்றாலும் பிஸ்கெட்டும், மிட்டாயும் கிடைக்கும். தின்னும் பண்டங்களைப் பார்த்தாலே திகட்டிய நாட்கள் அவை. இந்த சில வருடங்களில் எல்லாமுமே மாறிப்போயிருந்தன அப்பாவுடன். 

கொஞ்சம் விவரம் தெரியத்தொடங்கியிருந்தது எனக்கு; அந்த விவரம் அப்பாவுக்கும் புரியத்தொடங்கியிருந்தது. தொழில் நசிந்து பணமுடையும் கடனும் அப்பாவை நெரித்துக்கொண்டிருந்தன. வீடு,தோட்டம், வண்டி வாகனம் என்றிருந்த ஆள் எதோ பிச்சைக்காரனைப் போல் ஆகிவிட்டிருந்தார். ஃபோட்டோவில் இருக்கும் அப்பாவைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கும். அந்த ஃபோட்டோவையும் ஏனோ தூக்கி பரண்மேல் வீசிவிட்டார் கொஞ்ச நாட்கள் முன்பு.

“இந்தல்லையே நில்லு சாமி… அய்யனந்தக்கடை முட்டும் போயிட்டு வந்துர்றேன்”

தலையசைத்தவாறு தண்ணீர்க்குழாய்த் திண்டின் மேல் அமர்ந்து கொண்டேன். சாலையைக் கடந்து மறுபுறமிருந்த சித்தப்பாவின் பாத்திரக்கடையினுள் நுழைந்தார் அப்பா. கல்லாவிலிருந்த சித்தப்பாவிடம் என்னைக் கைகாட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். சித்தப்பாவிடமிருந்து அப்பா கைக்கு பணம் மாறியது.

கதை பேசும் வாக்கில் அப்பாவை சித்தப்பா ஏமாற்றிவிட்டதாகச் சொல்லுவாள் கிழவி. இருட்டு ஊடு என்றால் ஊருக்கே தெரியும். ஜன்னல்கள் அதிகமில்லாமல் இருளோவென்று இருக்கும் சித்தப்பாவின் வீடு. பகலிலேயே விளக்குகள் எரிய வேண்டும். பெரிய வீடு. அப்பா நொடிந்தபிறகு தன்னை மட்டும் வைத்துக்கொண்டு எங்களை வெளியே துரத்திவிட்டதாகக் கிழவி புலம்பியழுவதுண்டு; எனக்கு சித்தப்பாவைப் பிடிக்காது. அவ்வப்போது வீட்டுக்கு வந்துசெல்வார்; அவர் வந்தாலே பின்வழியே வெளியேறி ஓடிவிடுவேன் எப்போதும்.

“ம்ம்ம் போலாம் நட சாமி..”

“கடைக்காப்பா..”

“ஏந்தங்கம்”

“உனியும் குடிச்சா மேலுக்கு ஆவாதுனு ஆசுபத்திரில சொன்னாங்கள்ல”

“அரம்ப குடிக்காம உட்டாலும் ஆவாது சாமி… வகுத்தால போகும்.. அப்பா கொஞ்சூண்டு குடிச்சுப்புட்டு வந்துர்றேன் ஆமா”

எனக்கு மேலே பேச வரவில்லை. கூடவே நடந்தேன். முருகன் கடையின் அடுப்பங்கரை முகட்டில் என்னை உட்காரவைத்துவிட்டு பக்கத்திலிருக்கும் ஒயின்சாப்புக்குள் சென்றார். இரண்டு கடைக்கும் உள்ளேயே தனியாக ஒரு வழி உண்டு. காயம் பட்ட மிருகங்கள் போல பெரிய கிரைண்டர்கள் இரண்டு உறுமிக்கொண்டிருந்தன. எல்லா முகங்களும் என்னைப் பார்ப்பது போலவும் இருந்தன. பார்க்காதது போலவும் இருந்தன. இரண்டு பாட்டில்களுடன் திரும்ப வந்தவர் சுவரை நோக்கித்திரும்பி நின்று ஒரே மிடறில்  ஒன்றைக் காலியாக்கினார். கண்களை இடுக்கிக் கொண்டு அவர் அதைக் குடிப்பது காணச் சகியாதவண்ணமிருந்தது. மெதுவாக என் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டார்.

கடைக்காரர் வெளியிலிருந்து கத்தினார்.

“அதாரு சரவணனா.. கடைக்குள்ள வெச்சுக் குடிக்காதையினு ஒருதடவ சொன்னா ஏறாதா.. இதென்ன பழக்கமிது?”

“ஓவ்… பையனிருக்குறான் மாமோ”

“அவனச்சாக்காட்டிட்டே எல்லா வேலையும் பண்ணுடா நீயி.. அடதேங்கண்ணு அங்க உக்காந்துருக்கற இங்க வா பாக்கலாம்”

“அவனெங்க வரான்.. சனஞ்சேராதவன்” என்றபடி என்னைப்பார்த்துச் சிரித்துக்கொண்டார் அப்பா.

“அப்ப பொழச்சிக்குவாம்போ” என்றார் கடைக்காரர்.

அடுப்படிக்குள் வந்த சமையல்காரக் கிழவன் ஊரே கேளு நாடே கேளென தொண்டையைத் திறந்தான்…

“சரவணா… உன்ற தம்பி வண்டிய நிப்பாட்டிட்டு அடிக்குந்தளைக்கும் நோட்டமுட்டுட்டு இருக்கான் என்ன விசயம்”

“வாசல்ல நிக்கறானா… தாயளி… பொறவுக்கே மோந்துகிட்டு வந்துருப்பான்”

“அவண்ட்டதான சிலுவானம் வாங்கிட்டு வந்துருப்ப… பின்ன வராம வெச்சு மணப்பானாக்கும்?”

“ந்தா… குடுக்கறக்குப் பிரியமிருந்தா குடுக்கோணும்.. நாங்குடிக்கத்தான் கேக்குறேன்னு அவனுக்குத் தெரியாதாமா?… குடுத்தும்புட்டு பொச்சுக்கும் பின்னாடி வந்து நின்னா என்ன அர்த்தமுனு வேண்டாம்? ஒண்ணு சொல்றம்பாரு, குடுக்குற வரைக்குந்தான் உம்பட காசு ஆமா.. அப்பறமேட்டுக்கு வாங்குறவன் வெச்சுப் பாத்தானா வீதில போட்டு ஓத்தானான்றதெல்லாம் தேவையில்லாத பழம… இந்தத்தாயளி என்றகிட்ட வாங்கியழிச்சதுக்கெல்லாம் கணக்கு பண்டுனம்னா நிக்குமா? இத்தனைக்கும் பையனக் கூடக் கூப்புட்டுக்கொண்டி தான் வாங்கியாரேன்… அப்பவும் வந்து சூத்த மேளிச்சுட்டு நிக்கறான் பாரு…”

அப்பாவுக்கு வாய் குழறத் தொடங்கியது. இரண்டாவது பாட்டிலைத் திறந்து வைத்துக்கொண்டார்.

"இவனச் சொல்லி என்ன பண்ணுறது ஊட்ல இருக்கவளே கொளவிக்கல்ல தலைல போட நிக்குறா"

"பேசணும்னு பேசாத சரவணா.. நீ பண்றதுக்கு வேறெவளாவதா இருந்தா பண்ணையம் திண்ணைக்கு வந்துருக்கும்"

"பண்ணையம் பின்ன எங்கிருக்குதுங்குற இப்ப" என்றுவிட்டுத் தன்னைப்போல சிரித்துக்கொண்டார் அப்பா.

“சின்னவெங்காயம் ரெண்டெடு சாமி.. அவடத்தாலைக்கு கூடைல இருக்கும்”

எடுத்துக்கொடுத்தேன்.

“வெளிய சித்தப்பன் நிக்குறானானு ஒரு எட்டு பாத்துட்டு ஒடியா”

“நில்லு சாமி.. சொல்லிட்டேன் உள்றதான் இருக்கறையினு… போயிட்டான் அப்பமே”

கிழவன் அடுப்பிலிருந்து குரல் கொடுத்தான்.

விட்டத்தை வெறித்தவாறே அப்பா முனகினார்.,

“போயிருப்பான்… எச்சக்கலத்தாயளி…”

“ஏஞ்சரவணா, இது நிப்பத்தான் காமாலையினு மாசக்கணக்குல கெடந்த… கொஞ்சம் வெடுக்குனு இருந்தா அடங்காதா? அந்த மூத்திரத்த குடிக்காம இருந்தாத்தான் என்னனு கேக்கறன்! காணாத நாயி கருவாட்டக் கண்டாப்ல அதுல என்னத்தப் போட்டுப் பொதைக்குதுனு தெரில உனக்கு”

கொஞ்ச நேரம் அப்பா எதுவும் பேசவில்லை. இன்னொரு பாட்டிலையும் முடித்துவிட்டு வெளியே வீசினார்.

“இல்ல பெருசு.. எல்லாருஞ்சாவு சாவுனுதான் கேக்குறாங்க… அதெல்லாங் கரெட்டுதான்… இருந்து அஞ்சாறாச்சா? ஆனா அதென்னது இவிங்க சொல்லி நாஞ்சாவறது., இருக்கமுட்டும் ஆடிப்புட்டுப் போவ வேண்டியதுதான். சுருக்குப் போட்டுட்டு தொங்க எத்தன நேரமாவும்ங்கற? ஆனா அப்பிடிப் பண்ட மாட்டன் பாத்துக்க.. இதுகளுக்கெல்லாம் தொக்காப்போயிரும்!” 

“வாயக்கழுவுடா… மவன் நெஞ்சொசரத்துக்கு வந்து நிக்குறான்.. ஊளு ஊளுனுகிட்டுருக்க”

“ஆமாப்போய்..நல்லவேள கடுவனாப் பெத்தேன்!  ஒண்ணுத்துக்கும் பயமில்ல… எப்பிடியும் வேரு புடிச்சுக்கும்.. ஏஞ்சாமி”

என் மோவாயைப் பிடித்துக்கொண்டார் அப்பா. அவர்  தொட்ட இடம் சொர சொரத்தது. எனக்கேனோ அழுகை முட்டிக்கொண்டு நின்றது. அப்பா செத்துவிட்டால் என்னாகும் என்றெல்லாம் அர்த்தமில்லாத யோசனைகள் தோன்றியது. 

“நீ ஏஞ்சாமி அழுவுற… அது நா வாங்கியாந்த வரமுல்ல… போச்சாது எடு… நீயி சித்தங்கூறு போயி வெளையாடிட்டு வா.. அய்யன் சித்தே படுக்கறேன் சரியா”

“ம்ம்ம்”

“ஊட்டுக்கு போவக்கூடாது என்னா.. வெளையாண்டுபுட்டு நேரா இவடத்தைக்கிதான் வரோணும்”

கண்கள் சொருகியிருந்தது அப்பாவுக்கு. அம்மிக்கல்லின் மேல் தலை சாய்த்துவிட்டார்.

“பந்து ஊட்ல இருக்குது”

உள்பக்கப் பாக்கெட்டினுள் கையைவிட்டு சுருண்ட இருபது ரூபாய்த்தாளொன்றை எடுத்து என்கையில் திணித்தார்.

“புதுசே ஒண்ணு வாங்கிட்டுப் போவியாம்…சரியா”

“ம்ம்ம்”

கடையை விட்டு வெளியேறினேன்.  

“சின்னப்பொன்னா.. அடதேங்கெளம்பிட்ட… புரொட்டா இருக்குது வா”

கிழவன் சொன்னது காதில் விழுந்தது; நிற்கத்தோன்றவில்லை. அப்பா தந்த பணத்தை விரித்தேன்.,  நடுமத்தியில் கிழிந்து நைந்திருந்தது. ஆகக்கூடி ஒருபக்கம் நிறமே இல்லை. சராய்ப்பைக்குள் வைத்துக்கொண்டு வீட்டைப் பார்த்து நடக்கத் தொடங்கினேன்.  தெரு நாயொன்று கூடவே வந்தது. வீட்டை நெருங்கியபோது கால் வைத்த இடம் சற்று வழுக்கியது; 

“வானம்பாத்து நடந்து பழகாதே”  அப்பா சொல்வது ஞாபகம் வந்தது. வலதுகால் செருப்பின் அடிப்புறம் முழுக்க மலம் அப்பியிருந்தது.  புழுதி மணலில் தேய்த்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தேன். நாய் மட்டும் நின்று தலை சாய்த்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிசுபிசுப்பு மண்ணோடு போனது. மலம் முழுவதுமாகப் போகவில்லை வரிவரியான கோடுகளில் அப்பிக்கொண்டது. 

வீட்டு வாசலில் சித்தப்பாவின் வண்டி நின்றது.  வீட்டின் கதவு சாத்தியிருந்தது. பக்கத்தில் எங்காவது தான் இருக்கவேண்டும். கண்ணில் அகப்பட்டால் அப்பா எங்கேயெனக் கேட்பாரென்று பின்பக்கம் வழியே சென்றேன். கதவு வெறும் தடுப்புதான். சத்தமில்லாமல் நகர்த்தி வைத்துவிட்டு நுழைந்து கிணற்றடியில் செருப்பைத் திருப்பிப் போட்டேன். உள்ளே அம்மாவின் குரல் வழக்கம் போல் இரைந்தது; இன்னொரு குரல் மட்டுப்படவில்லை. மலம் வீச்சமெடுத்தது. வாளி நிறைய நீரை எடுத்து இறைத்தும் போகவில்லை. செருப்பைக் கையிலெடுக்க மனம் வரவில்லை. விளக்குமாறைத்தேடி உள்ளே நடந்தேன்.

குரல்கள் தெளிவாகக் கேட்டன. 

“நீ ஆடி அசைஞ்சுகிட்டு இருக்காத… வந்துகிந்து தொலைக்கப்போறான்”

“அது அவ்ளோதான் நீங்க உடுங்க…ஊத்தியாச்சானா பொழுதாயிரும்…”

“வெளையாட்டில்ல.. குடிகாரத்தாயளி எந்நேரம் என்னபண்ணுவான்னு தெரியாது சலிச்சா ஒரு புத்தி புளிச்சா ஒரு புத்தி”

“என்ன பண்டிப்போடுவான்… என்னத்துக்கு நீங்க இப்பிடி பயந்து சாவறீங்கனு தெரியல…”

சன்னல் வழியே உருவங்கள் மங்கலாகத் தெரிந்தன. குரல்களில் மற்றொன்று சித்தப்பாவினுடையது. அம்மணமாக நின்றுகொண்டிருந்தாள் அவள்; அவனும் தான். எனக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான் கட்டிலில். உடல் முழுதும் வியர்த்திருந்தது எனக்கு. உள்ளே துடிப்பதைத் தெளிவாக உணர்ந்தேன். 

“என்ன பண்டுவானா? அக்கட்டால தாட்டி உட்ட கையோட ஊரு மேஞ்சுட்டு இருந்தீனா கொஞ்சுவாம்பாரு”

“சோறு போட வக்கிருக்கவனுல்ல நானு ஊருமேயறதக் கேக்கோணும்?”

“அவம் வக்கத்தவன்னங்காட்டியும் நீயி மேயறதெல்லாஞ்சரினு ஆயிராது பாத்துக்க”

“பேசமாட்டீங்க பின்ன பொறந்தவனுல்ல.. அதாம்பாரு விரிச்ச பாவத்துக்கு பேச்சுங்கேக்கோணும்னு எழுதிருக்குது”

தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவனுடைய குறியைச் சப்பத்தொடங்கியிருந்தாள். கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். அழுகை வெடித்துக் கிளம்பியது. 

“ஒண்ணு பண்ணு பேசாத… வந்தான்னா ரவைக்கி அலுங்காப்ல சோத்துல மருந்த வெச்சுப்போடு.. எனக்கு தெனம் தண்டமழுவறதாச்சும் மிஞ்சும்… யாரக்கொண்டு ஆவறது… உன்ற பையனுக்கு மேலு சுடுதுனு காலைல வந்து கடைல நிக்குறான் இன்னைக்கி”

அவளிடமிருந்து பதிலில்லை. கண்களைத் திறந்தேன்; தலை மட்டும் அசைந்துகொண்டிருந்தது. கேவத்தொடங்கியிருந்தேன். விம்மலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கிணற்றடிக்கு ஓடி, செருப்பைக் கையிலெடுத்து வாளி நீரில் முக்கிக் கழுவினேன். நீரை இறைத்துவிட்டு ஓட்டமும் நடையுமாக முருகன் கடைக்குத் திரும்பியபோது அப்பா சற்று நிமிர்ந்து அமர்ந்திருந்தார்.  கழுத்தும் மார்பும்  எச்சிலில் நனைந்திருந்தது. 

நான் அழுவது அவருக்குத் தெரிய நியாயமில்லை. தலை ஒரு கிடையில் நிற்காமல் சுழன்று கொண்டிருந்தது அவருக்கு.

“என்னப்பா…”

“வா சாமி… அது… வாந்தி வருவனாங்குதுய்யா… உள்ளையும்போகாம வெளியையும் வராம கழுத்துலயே நிக்கிது பாத்துக்க.. ”

பெரும் உறுமலுடன் காறி உமிழ்ந்துவிட்டு அம்மியில் மீண்டும் சாய்ந்தார். ஏதேதோ முனகியது வாய். சம்மணமிட்டு அமர்ந்து தலையை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டேன். சற்று நேரம் அப்படியே கிடந்தவர் ஏதோ நினைவு வந்தவராக எழுந்து,

"நேரமென்னாச்சு சாமி... ஊட்டுக்கு போலாமா"

"உன்னும் நேரமிருக்குதுப்பா நீ படு சித்தெ"mail : rajan@rajanleaks.com