Wednesday, December 10, 2014

தேர்க்கால்

‘பொணத்த வெச்சுகிட்டு ராத்திரி முழுக்க காவலிருந்திருக்கா பாரேன் ஒரு சாமர்த்தியம்’

ஒருத்தி புலம்பிக் கொண்டிருந்தாள். அக்கம் பக்கத்திலிருக்கும் வீட்டுப் பெண்களெல்லாம் கூடிவிட்டனர். அத்தனை பேருக்கு அவ்வீட்டில் இடம் போதவில்லை என்றபோதும் நெருக்கிக் கொண்டாவது ஆங்காங்கே அமர்ந்து வராத அழுகையை வரவைத்துக் கொண்டிருந்தனர். இரவெல்லாம் அழுது தேம்பியதில் சுரத்தேயில்லாமல் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. இன்றைக்கு கூடியிருக்கும் பெண்களில் ஓரிருவர் தவிர எவரும் தன் அம்மாவுடன் பேசிப் பார்த்ததில்லை அவள். கொஞ்சம் விபரம் தெரியும் வயதாகியிருந்ததால், எல்லோரும் அழுவதைப் பார்க்கையில் தானும் அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

கூடத்திலிருந்த பொருட்களையெல்லாம் ஒழித்து உள்ளறையில் போட்டுப் பூட்டிவிட்டு, சாந்தியைக் கிடத்தியிருந்தனர். முகம் அடையாளமே மாறிப்போயிருக்கிறது என்றாள் ஒருத்தி. சாந்தி தூக்குப் போட்டுக்கொண்டாள் என்றதும் ஊரே கூடிவிட்டிருந்தது அந்தவீட்டின் முன். புதிதாகப் பார்ப்பவர்கள் எதோ பெரிய குடும்பத்துச் சாவென்றே நினைப்பார்கள். 

விடியக்காலையே இழவுச் சேதி பரவியும் அவுசாரி வீட்டு வாசலில் போய் நிற்க எல்லோருக்கும் தயக்கம். ஊர்ப்பேச்சுக்கு அஞ்சாத ஆண்கள் ஓரிருவர் வந்து நின்றதும், ஆசை மட்டுமே கொண்டிருந்தவர்களும் அறுதியாக ஒருதரம் அவளைப் பார்த்துச் செல்லலாமென்று கூடத் தொடங்கினர். பெண்களுக்கோ பலகாலத்துக்குமான பேசுபொருள் கிடைக்குமென்ற ஆவல். ஊர்ப் பெரியதேர் வேறு முந்தைய நாள் சாமத்தில் தான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. சனங்களெல்லாம் அதைப்பார்க்க கூடவும் போலீஸ் விரட்டிய கூட்டமெல்லாம் அடுத்த தெருவிலிருந்த இழவு வீட்டில் வந்து கூடியது.


‘எப்பா… முருகேசனுக்குச் சொல்லியுட்டாச்சா…நொரண்டு பேசுனான்னா நேர்ல வேணா ஒரெட்டுப் போயி கையோட கூட்டிட்டு வந்துரலாம்.. நாம பாட்டுக்கு எடுத்துச் செஞ்சு கடசில நம்மபொழப்பு நடையேறிராம’

‘போன் பண்டிருக்குதுண்ணோவ்.. கிளம்பிட்டாப்டியாமா… சித்தங்கூறுதான் வந்துருவாப்டி’

சாந்தி புருஷன் வரப்போகிறான் என்றதும் பேச்சரவம் கூடியது. 

‘ஏழுமாசத்துக்கு சீட்டுப்பணம் கட்டிருக்குதப்பா சாந்தி… யாரு எடுத்துப் பண்றீங்களோ சொல்லுங்க இருவத்தொரு ஆயிரம் இருக்குது.. ’ என்றான் சீட்டு நடத்தும் வாத்தியார். எல்லோரும் மணிமேகலையைப் பார்த்தனர். அவளோ ஒன்றும் புரியாமல் விழித்தாள். யாரோ ஒருவர் எழுந்து வந்து பணத்தை வாத்தியாரிடமிருந்து வாங்கிக்கொண்டார்.  அடுத்த கொஞ்ச நேரத்தில் பந்தல் போடவும், சேர்களுக்கும் ஆட்கள் வந்திறங்கினர். 

‘ஆமா, கெழவியெங்க… விடியாலருந்து கண்ணுலயே படல’ யாரோ கேட்கப்போய்தான் சாந்தியின் அம்மாவுடைய நினைவே வந்தது எல்லோருக்கும்.அத்தனை நேரமும் யாருமே தேடியிருக்கவில்லை கிழவியை.  சாந்தியின் மகளிடம் பக்கத்திலிருந்த பெண்கள் விசாரிக்கத் தொடங்கினர்.
‘தேம்புள்ள மணி… ஆத்தாளெங்கபோச்சு…’
தேம்பத் தொடங்கினாள் சிறுமி.

அதற்கு முந்தையநாள் மாலை.

அடிக்கண்டாரோளி முண்ட… எங்கடி ஊருக்கு முன்னால எழுந்து நிக்கற?’

கூடத்தில் கிழவியில்லையென்றுதான் நடைதாண்டியிருந்தாள் சாந்தி; பொடக்காலியிலிருந்து தொண்டையைத் திறந்ததும் ஒரு நொடி பதறிவிட்டாள்.

‘ஊரே பொச்சுல சிரிச்சாலும் உனுக்கு அரிப்பு அடங்கறதில்ல… தண்டுவனாட்டம் இருந்து என்ன புடுங்கறது, தாலியக்கட்டுனதோட சரி ஒலகமே மேஞ்சான் புருசன். நீ ஊரேகமும் மேயி’
புருசன் பேச்செழுந்ததும் சாந்திக்குத் தாங்கவில்லை.

‘ஊர்ல இல்லாத சாமான் வெச்சிருக்கான்னு பாத்துதான நீ கட்டுன… உம்புருசன் வெட்டி முறிச்சுட்டானாக்கும்?’
கிழவி அதற்குள் வாசலுக்கு வந்துவிட்டிருந்தாள்.

‘புழுத்த நாயி குறுக்க போவாம பேசாத… இப்ப எவன் நிக்கறான்னு இப்பிடி கரகாட்டக்காரியாட்டமா வேசம்போட்டுட்டு போற’

‘உங்கொப்பனூட்டு காசுல வேசம்போடலைல்ல. பெத்த புள்ளகிட்ட பேசுற பழமையா இது? கோயிலுக்கு போயிட்டு தேருக்கு வந்தா சரியாருக்கும்னு  நேரத்துல கெளம்புனேன். அதுக்கென்னமோ இந்தத் தொற தொறக்குற…’
கேவத்தொடங்கினாள் சாந்தி. கிழவிக்கு சற்று கோபம் தணிந்திருந்தது. 

‘அழுவாட்டியென்ன… இந்தாடீ இவளே.. உங்காயா தேருக்கு போறாளாம் நீயும் போயிட்டுவா…’ என்று இரைந்தாள் கிழவி. ஏதோ பாடம் எழுதிக்கொண்டிருந்த பெண் கிழவியின் சத்தத்தைக் கேட்டதும் எழுந்துவந்து நின்றாள்; உதட்டுச்சாயமும் காக்காய்ப்பொன் தூவினாற்போல் கன்னமுமாய் சாந்தி நிற்பதை சில நொடிகள் உற்றுப்பார்த்தாள். அம்மாவின் இந்தக்கோலம் புதிதல்லதான் என்றாலும் இன்றைக்கு அவளுடன் செல்வதற்கு என்னவோ போலிருந்தது அவளுக்கு. சாந்தி ஒன்றும் சொல்லாமல் கதவைத்திறந்து வெளியே நடந்தாள். சிறுமி திரும்பி கிழவியை நோக்க, அவள் சைகை செய்ததும் செருப்பைப் போட்டுக்கொண்டு சாந்திக்குப் பின்னால் ஓடினாள். பார்வையிலிருந்து இருவரும் அகன்றபின்னரும் சற்று நேரத்துக்கு அங்கேயே நின்றிருந்தாள் கிழவி.

பருவத்துக்கு வருவதற்கு முன்னரே வயதுக்கு மீறிய உடல் தான் சாந்திக்கு. 18 வயதிற்குள்ளாகவே   ஊரில் அரசல் புரசலாகப் பேசத்தொடங்கியிருந்தனர். முள்ளுக்காட்டில் பார்த்தேன் மலைக்குன்றில் பார்த்தேன் என்று தன் காதுக்கெட்டும் செய்தியெல்லாம் அப்பனுக்குத் தெரிந்தால் வெட்டியெறிந்துவிடுவான் என்பதால் கண்காணாது போயிருக்கட்டும் என யாருக்கும் தெரியாமல் முருகேசனுக்குக் கட்டி வைத்து அனுப்பினாள் கிழவி. முருகேசன் சாந்தியை விட பதினைந்து வருசத்திற்கு மூத்தவன்.

கிழவிக்கு தூரத்துச் சொந்தம்; யாரோ சொன்னார்களென்று நம்பித்தான் கட்டிவைத்தாள். மகள் ஓடிப்போனதன் பிறகு கிடப்பில் விழுந்த கிழவன் இரண்டு வருசத்தில் போய்ச் சேர்ந்துவிட்டான். சாந்தியைக் கூட்டிப்போய் எதோ ஊரில் குடிவைத்தவன் ஆறேழு மாதம் இருந்திருப்பான் அவளுடன். ஆசை தீருமட்டும் இருந்தவன் பிறகு சாக்கும் போக்கும் சொல்லிக்கொண்டு வாரத்துக்கொருதரமென வந்து போவதாயிருக்க, சாந்திக்குப் பொறிதட்டத் தொடங்கியது.பழைய கதை எப்படியோ, இவனுடன் வந்தபிறகு ஒழுக்கமாய்த்தான் இருந்திருந்தாள்; ஆனால் அவனோ முதல் பொண்டாட்டியைக் கொன்றுவிட்டு மூணு நாலு இடத்தில் தொடுப்பு வைத்திருக்கிறான் என்று தெரியவந்தபோது வயிறு முட்டி நிறைந்திருந்தது சாந்திக்கு. அன்றோடு அவனை விரட்டி விட்டவள் தான் ஆண்டு பன்னிரண்டு கழிந்துவிட்டிருந்தது. 

சொந்த ஊர் வந்து பெற்றவளோடு இருக்கவும் மனம் ஒப்பாமல் சோற்றுக்கும் கதியில்லாமல் நின்றவளை வாடகைக்கு வைத்த கிழவன்தான் மகளைப் போலப் பார்த்துக்கொண்டான் பிரசவமாகும் வரை. ஆஸ்பத்திரி செலவு முதற்கொண்டு அத்தனை செய்தவனுக்கு கடைசியில் காலை விரிக்கமாட்டேனென்று சொல்ல அவளுக்கும் மனசாட்சி ஒப்பவில்லை. 
பிறகு அந்த ஊரிலேயே ஆறேழு முறை வீடு மாறியாயிற்று. தெரிந்தே வாடகைக்கு வைக்கவேண்டியது; காரியம் ஆனதும் காலி செய்யச் சொல்லவேண்டியதென கைக்குழந்தையுடன் படாதபாடு பட்டிருந்தாள் சிலகாலம். பிறகு அப்பன் செத்துப்போன இழவுக்கு வந்தவள் கிழவியுடனே தங்கிவிட்டாள். பழகிய ஊர். ஆரம்பத்தில் ஆள் மாற்றி ஆள் வைத்துக் கொண்டிருந்தது போய் அன்றன்றைக்கொரு விலையென்றாகியிருந்தது கடைசியாக.

சாந்தியின் புருசன் இரண்டு வருசம் முன்பு காமாலைகண்டு  நொடித்துப் போய்விட்டான் என்றதும் இரண்டொருமுறை போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்தாள் கிழவி. பழைய தினவெல்லாம் இல்லை. பீத்துணி கசக்கக் கூட ஆளில்லாமல் கிடந்தான். போனதெல்லாம் ஒழியட்டும் இனியாவது சாந்தியைக் கூட்டிவைத்து வாழவேண்டும் என்று கேட்டிருந்தான் முருகேசன். அந்தப்பேச்சையே எடுக்காதே என்று சாந்தி முடித்துவிட்டதால் அவனுக்கு வார்த்தை எதுவும்  தராமல் வந்துவிட்டாள் கிழவி.

சாந்தி மகளின் கையைப் பிடித்துக்கொண்டு  தேர் நின்ற வீதியின் கூட்டத்துக்குள் கலந்தாள். தேர்வடத்தைத் தொட்டுக்கும்பிட்டுக்கொண்டு மகளுக்கும் கண்களில் ஒற்றிவிட்டாள். மத்தளச் சத்தம் வந்த திசை நோக்கிக் கூட்டிச் சென்றபோது  தேர் நிலையிலிருந்தது. மேலே ஏறி சாமிபார்க்கக் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது. பின்புறம் தேர் இழுக்கக் கொண்டுவரப்பட்டிருந்த  இரண்டு யானைகளுக்குக் கவளம் ஊட்டப்பட்டுக்கொண்டிருந்தது. 
பழக்கடைகளெங்கும் கூட்டம் நிரம்பித்தள்ள, பிள்ளையைக் கூட்டிக்கொண்டு  தேர் நிலையின் நேர் பின்னே தட்டிவைத்து வாசல் மறைக்கப்பட்டிருந்த செல்வத்தின் பூக்கடைக்குள் நுழைந்தாள் சாந்தி. உள்ளே  செல்வமும் ஒரு சிறுவனும் மாலை கட்டிக்கொண்டிருந்தனர். 

‘வா புள்ள… இதெங்க பொடுசையும் கூட்டிட்டு வந்துருக்கற’

‘கெழவிக்கு பொறுக்காதுல்ல… கூடயே அனுப்பி உட்டுருக்குது.. இந்தப்புள்ளையும் தேரு பாக்கணும்னு நேத்துலருந்து அழுவாச்சி.. அதான் உங்கடைல உக்காரவெக்கலாம்னுட்டு வந்தேன்’

‘கட சாத்திட்டனே… இந்தா கடசி கட்டு… முடிஞ்சொன்ன நானுங்கெளம்பறேன்’

‘பெஞ்சுல உக்காந்துருக்கட்டும்ணா… நானப்பறம் வந்து கடைய பூட்டிட்டு சாவிய வேணா பக்கத்துல  குடுத்துடறேன்…’

‘இல்ல… பையனிருப்பான்… உக்காரவெச்சுட்டுப்போ… நேரத்தோட வந்துரணும் பாத்துக்க’

‘மணி… இங்க பொட்டாட்டம் உக்காந்துருப்பியாம் என்ன… அம்மா வந்து கூட்டிட்டுப்போறேன் சித்த நேரத்துல… தண்ணி கிண்ணி வேணும்னா அண்ணண்ட்ட சொல்லோணும் என்ன’

அவள் கையில் கொஞ்சம் சில்லறைக்காசைத் திணித்துவிட்டுக் கூட்டத்துக்குள் புகுந்தாள். மணி அவள் போன திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள். தன்னைவிடக் கொஞ்சமே பெரிய பையன் ஒருவன் அம்மாவின் புட்டத்தைப் பிடித்துக் கிள்ளுவதைக் கண்டாள். சாந்தி சட்டென திரும்பிப் பார்த்து  சிரித்தவாறு கூட்டத்துக்குள் இன்னும் கலந்து போனாள்.

மணிமேகலைக்கு இது ஒன்றும் புதிதல்ல.  அவள் கண் முன்னாலேயே எத்தனையோ ஆண்கள் சாந்தியை முந்தானையைப் பிடித்து இழுப்பதும், முலையைப் பிடித்துக் கசக்குவதுமென்று நிறைய நடந்திருக்கின்றன.  லாட்ஜுகளுக்குக் கூட அடிக்கடி கூட்டிச் செல்வாள் சாந்தி. வெளியூர் லாட்ஜுகளில் சென்று தங்கும்போது போலீஸ் வந்தால் கூட குழந்தை இருந்தால் குடும்பம் என்று நம்புவார்கள் என்பதால்.

‘இதாரு சாந்தி மவளா..’
ஒரு போலிஸ்காரன் கடைத் தடுப்பைத் திறந்து உள்ளேயிருக்கும் செல்வத்திடம் கேட்டான்

‘ஆமா சார்… தேர் பாக்குறதுக்கு உக்கார வெச்சுட்டு போச்சு’

‘தடுப்பு வெச்சி மூடிருந்தியா… புள்ளைய காவலுக்கு வெச்சுட்டு ஆத்தாள வேலையுடறயோனு நெனச்சேன்’ 

‘அட நீங்க வேற சார்… கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மனைல வெய்யினு… போயி ரெண்டு டீ வாங்கிட்டு வாடா… இந்தா இரு மூணா வாங்கிட்டு வா’
பையனை அனுப்பி வைத்தான் செல்வம். வெளியே இருந்த பெஞ்சில் மணிமேகலைக்கு அருகில் அமர்ந்தான் போலீஸ்காரன். நாற்பத்தைந்து வயதிருக்கலாம். ஆளைப் பார்த்த மாத்திரத்திலேயே பெண்ணுக்கு பயம் பிடித்துக்கொண்டது. கண்கள் குளம் கட்டி நின்றன.

‘ஏம்பாப்பா.. ஸ்கூலுக்குப் போறியாக்கும்’
தலையசைத்தாள் மணி.

‘ஆமா,  நேத்து ராத்திரி உங்கூட்டுக்கு  பெருசா மீசைய வெச்சுட்டு ஒருத்தன் வந்தானா?’
பேந்தப்பேந்த விழித்தாள் மணி.

‘சார்… சின்னப்புள்ளைட்ட என்ன பேசணும்னு இல்லைங்களா’ செல்வம் எழுந்து பெஞ்சருகே வந்தான்.

‘அட எஸ்.ஐய அந்தப்பக்கம் பாத்தேன்னாங்கப்பா’

‘தூங்கிட்டேன் நானு நேரத்துல’ என்றாள் மெல்லிய குரலில் மணி.

‘அவங்கொரலு ஏழூருக்குக் கேக்குமே… தூங்கிட்டியாக்கும்’

‘கொழந்தைக்கு எப்பிடிசார் தெரியும்.. அதுக தூங்கிருச்சுனா இடி இடிச்சாலும் எந்திரிக்காதுக’

‘இடி இடிச்சிருப்பியாட்டருக்குதே நெறைய..’ என்றுவிட்டு அசிங்கமாகச் சிரித்தான் போலிஸ்காரன்.

‘ஏம்பாப்பா இந்தமாமா வந்து இடி இடிப்பாரா அடிக்கொருக்கா’ 
மணி என்னசொல்வதென்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் டீவாங்கச் சென்றிருந்த சிறுவன் திரும்பியிருந்தான்.

‘கட சாத்திருக்குதுங்கண்ணா’

‘சரி வாங்க சார் ஒரு நட போயிட்டு வந்துரலாம் மூர்த்தி கடைக்கே வண்டில ஏறுங்க’

‘நீ போய்ட்டு வா… எனக்கு இங்க மணியம் பண்ணனும்ல’

மொபட்டை எடுத்துக் கிளப்பினான் செல்வம். போலீஸ்காரனும் கிளம்ப, சிறுவன் மீண்டும் கடைக்குள் சென்றுவிட்டான். யானைகள் பிளிறத் தொடங்கின. ‘அரியபொருளே அவனாசியப்பா’ என்று கூட்டம் கோஷமிடத் தொடங்கியது. பெரிய சக்கரங்களிரண்டின் பின்னும் சண்ணை போட ஆட்கள் ஏறினர். நிலையிலிருந்து வெளியே நகர்த்தி தேரை சாலையில் நிறுத்திவிடுவதோடு இன்றைக்குத் தேரோட்டம் முடிந்துவிடும். அதற்கே இரண்டு மணி நேரம் ஆகலாம். அடுத்து மறு நாள் காலையில் தான் நான்குவீதிகளிலும் தேர் சுற்றிவரத் தொடங்கும். 

எண்ணெய்ப் பிசுக்கேறிய தேர், கோயிலே அசைவது போல அசைந்துகொண்டிருந்தது. மணி பெஞ்சில் அமர்ந்து சண்ணை போடுபவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். பெரிய தேர்க்கால்கள் இரண்டிற்கும் பின்புறம் தடித்த பலகைகளை சாய்ந்த வாக்கில் வைத்து அதன் மேல் பக்கத்துக் பத்து பேர் வரை ஏறி மிதிக்க வேண்டும். ஆட்களின் எடை பலகையின் ஓரத்தில் இறங்க இறங்க சக்கரம் முன்னோக்கி உந்தப்படும். கொட்டுச் சத்தம் ஆரம்பித்து  முழங்கும் போது சரியாக சண்ணை போடும் ஆட்கள் பலகையை மிதிக்கவும் முன்புறம் இரும்பு வடத்தில் பிணைத்த யானைகளை பாகன்கள் இழுக்கச் செய்யவும் தேர் நகர்வது மலையை நகர்த்துவது போலிருக்கும்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே தேருக்கு அருகில் இரு கோஷ்டிக்கிடையே அடிதடி ஏற்பட கூட்டம் சிதறி ஓடியது. சண்ணை மிதிப்பது இந்தப்பகுதியின் இரண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட உரிமையாதலால் வேறு யாரோ ஒருவனை ஏற்றியதற்காகப் பிரச்சனை. அடிதடி முற்றியதில், ஊர்ப்பெரியவர்கள் கூடிச் சமாதானம் பேசிக்கொண்டிருந்தனர். தேர் சாலை ஏறினவரை போதுமென்று நிறுத்தப்பட்டு  கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்துகொண்டிருந்தது.

‘இந்தா பாப்பா… உம்பட பேரு மணி தான’ 
போலீஸ்காரன் திரும்ப வந்திருந்தான். மணி ஆமாம் என்பதாகத் தலையசைத்தாள்.

‘உங்கம்மா கீழ உழுந்துட்டா கொளத்துக்குள்ளார… வா ஊட்டுக்கு கூட்டிட்டுப் போவலாம்’
மணி கடைக்குள்ளே பார்த்தாள்.. செல்வம் இன்னும் வந்திருக்கவில்லை. கடையிலிருந்த பையன் வேலையில் கவனமாக இருந்தான்.

‘அட வா பாப்பா… ரெண்டு பேரையுங் கொண்டி ஊட்ல உட்டுட்டு நாம்போவ வேண்டாமா?’
மணி மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினாள். போலீஸ்காரன் பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டு வேகு வேகென்று குளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். தாமரைக் குளத்தின் மேட்டிலேறி புதருக்குள் இறங்கத் தொடங்கினர். இருளோவென்றிருந்தது. 
இரண்டு பேருடன் குளத்திலிருந்து எதிரில் வந்து கொண்டிருந்தாள் சாந்தி. கூட வந்த இரண்டு விடலைகள் காக்கியைப் பார்த்தவுடன் பயந்து ஓடத் தயாரானார்கள்.

‘சார்… புள்ளைய எங்க சார் கூட்டிட்டு போறீங்க’
சாந்தி அலறினாள்.

‘நீ எங்கடி இங்க மேயற… டேய் நில்லுங்கடா…’
பயல்கள் அப்படியே நின்றனர். சாந்தி போலீஸ்காரன் கையிலிருந்து பிள்ளையை விடுவிக்க முயன்றாள். காதோடு சேர்த்து அறைந்தான் போலீஸ்காரன். மணி ஓவென்று அரற்றத் தொடங்கியிருந்தாள்.

‘உன்ற பூலவாக்க காட்டலாம்னுட்டுதான் புள்ளைய கூட்டியாந்தேன்.. ஏண்டி சாமானம் வெளித்தள்ளாத பசங்கள கூட்டிட்டு வந்துருக்கிறியே உனக்கெதாவது இருக்குதா?’

‘ஏண்டா நீயி ஈபிக்காரம் பையந்தான?’
ஒருவன் தலையசைத்தான்.

‘ங்கொப்பனாத்தாகிட்டச் சொன்னா மெச்சிக்குவாங்கள்ல’ பையன்கள் கிலியடித்து நின்றனர். 

‘சார்… காச வேணாலும் தந்துடறன் புள்ளைய உடுங்க…’

‘உன்ற காசு எனக்கெதுக்குடி கண்டாரோலி… நீயி வா உனக்கிருக்குது இன்னைக்கி’

‘என்னவேணாம் பண்ணிக்கங்க புள்ளைய உடுங்க நானு கொண்டி ஊட்ல உட்டுட்டு வரேன்’

‘நீயி வர்ற வரைக்கும் இவனுகள வெச்சு பூச பண்டச் சொல்றியா?… டேய் புள்ளைய வெச்சுட்டு 
உக்காருங்கடா அந்த மேட்ல… நானு வர்ற வரைக்கும் நகரக்கூடாது ஒருத்தனும்’

‘சார்… ‘ கெஞ்சினாள் சாந்தி

‘நீ வாடி உன்ற புள்ளைய ஒண்ணும் தின்னுர மாட்டானுக’

அவள் கையைப் பற்றி குளத்துக்குள் இழுத்துச் சென்றான் போலிஸ்காரன்.  அவள் திரும்ப வந்து பார்க்கையில் மணி மட்டும் மேட்டில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.சாந்தியின் கால்களை ஓடிவந்து கட்டிக்கொண்டு அழுதாள் மணி. தொடைகளெல்லாம் விளார் விளாராகத் தடித்திருந்தது சாந்திக்கு. வலி பொறுக்கமாட்டாமல் மணியின் பிடியை விலக்கி விட்டுக் கொண்டு முகத்தைத் தூக்கிவைத்துக் கேட்டாள்.

‘இந்தாடி..என்னாச்சு… இருட்டுக்குங்காணும் பயந்துட்டியா?’

‘அந்தண்ணனுக என்னைப்புடிச்சு அரம்பத் தொல்ல பண்டுனானுகம்மா… இங்கெல்லாம் புண்ணு பண்டியுட்டானுக’ என்று தொடையைக் காட்டிக்கொண்டு அழுதாள் மணி. பித்துப் பிடித்தவளைப்போல பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள் சாந்தி.

ஊரே அடங்கியிருந்தது. கிழவி தூங்கியிருந்தாள்.  வீட்டுக்குள்ளே கூட்டிச்சென்று துணியைக் களைந்து பார்த்தாள். எண்ணையை எடுத்துப் பூசிவிட்டுப் படுக்க வைத்தாள்.  மணி தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். சாந்திக்கு ஆங்காரமாய் வந்தது. கிழவி எந்திருக்கும் சப்தம் கேட்டது வீட்டுக்குள்ளே உருட்டும் சத்தம் கேட்டு கிழவி விழித்திருக்கவேண்டும்

‘நாளன்னைக்கு குத்த வெக்கற புள்ளையக் கூட்டிட்டு நடுச்சாமத்துல மேஞ்சுட்டு வரியாடி தொடுசுமுண்ட’

‘இனி அடுத்து அதையுஞ்சேத்துக்க… பொட்டுக்கட்டி உட்டுரலாம் சனத்தையே… எங்கிருந்துதான் வந்து என்ற வகுத்துல பொறந்துச்சோ தேவிடியா முண்ட’ கிழவி ஒப்பாரிவைக்கத் தொடங்கியிருந்தாள். மகளை முத்தங்கொஞ்சிவிட்டு, உள்ளறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள் சாந்தி. 

~~~~~

பாடை பின்னுவதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மணிமேகலை. வெளியே சத்தம் எழும்பவே தலையைத் தூக்கிப் பார்த்தாள். கிழவி ஒருவரை கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அப்பாவாய்த்தானிருக்கவேண்டும் என்று புரிந்தது அவளுக்கு.பார்ப்பதற்கு நோயாளிச்சீவனாய்த் தோன்றியது அவளுக்கு. வீட்டுக்குள்ளிருந்த அனைவரும் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர் முருகேசனை.

‘முருகேசா… எல்லா வேலையும் ஆயிருச்சு… பாட கட்டியாச்சானா ஒடனே எடுத்துரலாம்…ரொம்ப நேரமெல்லாம் இது வெச்சிருக்கக்கூடாது பாத்துக்க’

சரி என்பதாகத் தலையசைத்தான். உள்ளே சென்று பிணத்தைப் பார்க்கக்கூட இல்லை அவன். கிழவி மணியைக் கூட்டிச்சென்று முருகேசன் அருகில் உட்காரவைத்தாள். பிள்ளையை மேலே சாய்த்துக்கொண்டு தலையைக் கோதிக்கொடுத்துக்கொ ண்டிருந்தான் முருகேசன். 
பிணத்தை எடுத்து வந்து வாசலில் இரண்டு பெஞ்சுகளைப் போட்டுக் கிடத்தினார்கள். நாற்புறமும் சேலையை மறைத்துக் கட்டிக் குளிப்பாட்டிக்கொண்டிருக்க காற்றில் சேலைகள் பறந்தன. நடுவீதியில் அம்மணமாய்க் கிடந்தது வெளிறிய உடல்.  

‘அய்யோ பாத்துகிட்டே நிக்கறானுகளே…  புடிச்சுக்கட்டுங்கய்யா ஆம்பளைக’ என்று இரைந்தாள் கிழவி.

‘ஆமா ஆருமே பாக்காததுதான் போ…  தேச்சுக்குளிப்பாட்டுறாளுக இப்பத்தான்… கருக்கல் கட்டிட்டு வருது சட்டுனு முடிங்காயா’ என்றான் ஒருவன்.

அத்தனை நேரமும் தள்ளியிருந்த கண்களெல்லாம் பக்கத்தில் வந்து நின்றுகொண்டன. ஓவென்று அழுதபடியே பிணத்தின் உடலில் சேலையைப் போர்த்தி முகத்தைத் துடைத்துவிட்டாள் கிழவி.
‘பொதச்ச பொணத்தையும் நோண்டி எடுத்து மோந்து பாப்பானுகளே சில்றத்தாயோளிக… இந்த நாய்களுக்கா ஒடம்பத் திங்கக் குடுத்த இத்தன வருசமா’ கிழவி எல்லோரையும் சாபமிடத் தொடங்கினாள். 

‘அம்மாவ பொதச்சுடுவாங்களாப்பா’ என்றாள் மணி…

‘தீயில சுட்டுரலாஞ்சாமி…  கரையானுந்திங்க வேணாம் பாவம்’ என்றான் முருகேசன்.


பெரிய தேர் முழுக்கவும் எரிந்து முடிந்திருந்தது அந்நேரம்.


மடலிட: rajan@rajanleaks.com