Friday, March 14, 2014

மரண செளகர்யம்

இது ஒரு மங்கலான உலகம். அங்குமிங்கும் இன்னதென்று மட்டுப்படாத மெலிதான சப்தங்கள். இதோ உடலுக்கு மேலே அதன் பாரமின்றி மிதந்துகொண்டிருக்கிறேன்.  என்னிலிருந்து தோன்றுகிறதா என்னில் வந்தொடுங்குகிறதா என்று புரிபடாது அலைகிறது நினைவு. புலன்களனைத்தும் எதையோ தேடிச் சோர்ந்திருக்கின்றன. தொடர்ந்து அலைபாய்கிறது நோக்கம். கிடைபொருள் தானோ என்றெண்ணியகணம்
கீழிருந்து கேட்கிறது ஒரு குரல்; நான் கேட்டிராத என் குரல். எண்ணத்தின் ஓசை உயிர்ப்பு.

“யாரைத்தேடுகிறாய்? எதற்கு?”

தீர்க்கமாய் ஒலித்தது.

”நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லத் தேடுகிறேன்… அவளை”

என்றேன்...

“ஆக, உன்னால் பேசமுடிகிறது…”

“உன்னால் கேட்கமுடிகையில் என்னால் பேசமுடிகிறது.”

”எனக்கு உன்னைத்தெரியுமாதலால் கேட்கிறேன்.”

“அதிலேயே என் பதிலும் அல்லது கேள்வியுமிருக்கிறது. சரி அவளைத் தேடுகிறேன் என்று சொன்னேன். அவளை நீ கண்…”

”உன்னைப்போலவேதான் தேடிக்கொண்டிருக்கக் கூடும் அவளும்., அவளுக்குச் சொல்ல உனக்கு என்ன இருக்கிறது?”

“ஏதுமில்லை. நான் இங்கிருந்தேன்.. அவள் சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைச் சொன்னால் போதும்.”

”யாரவள்?”

”அவள் சொன்னவற்றிலிருப்பதுதான் என்னளவில் அவள்…”

”உன்னிடம் அவள் சொன்னது என்ன?”

”ஜென்மவைரி எதிர்ப்படுகையில் அனிச்சையாய் விலகியோடுதல் போலே கண்ணாடியைக் கண்டு அஞ்சியவள் அவள் என்றாள்.”

“குரங்கினைப் போல் அவளது முகம் இருந்ததாகச் சொல்வார்களென்று சொன்னாள்.”

”கொஞ்ச ஆளின்றி வளர்ந்த குழந்தையவள்; ஆதலின் குழந்தைகள் அவளைக் கண்டு பயந்து ஓடுவது குறித்து ரொம்பவும் விசனப்பட்டாள். அவள் சொன்னாள் அவளுக்குப் பிள்ளைகளென்றால் பிடிக்குமென்று. பிள்ளைகளின் பீ மூத்திர மணம் மிகப்பிடிக்குமென்று. பொம்மைப்பிள்ளைகளின் பிளாஸ்டிக் மணம் பிடிக்காதென்றும் அவள் சொன்னாள்.”

”என்றோ அங்கொரு வீட்டின் புழக்கடையிலிருந்து சிறுபிள்ளையொன்றின் மலம் அப்பிய துணியை எடுத்துவந்து துவைத்துத் தந்ததற்கு தன்னை அடித்தார்களென்றும் அதுமுதலே தனக்கு இப்படியானது என்றும் சொன்னாள் அவள்.”

“பிராயத்தில் தூமை வெளியேறும் போதெல்லாம் தன் பிள்ளை சிதைந்து கூழாகிப்போனதாக எண்ணியழுததைச் சொன்னாள். அதுமுதல் கருஞ்செந்நிறம் படிந்த துணிகளைக் காலமெல்லாம் சேகரித்து வைத்திருப்பதாகச் சொன்னாள். நீயாவது என்னைச் சேர்ந்து ஒரு பிள்ளை பெறச் செய் என்று கோயிலில் நிற்கும் குரங்குச் சிலையை வேண்டியழுததைச் சொன்னாள். ஒரு முறை நாயைப்புணர முயன்று கடிபட்டதையும் சொன்னாள்.”

”அவள் சொன்னாள்… அவளுக்குப் பையித்தியமென்றும்.”

”அவளைப் பொறுத்தமட்டிலும் மாதத்திற்கொருமுறை மகவைப் பறிகொடுத்தாலும் ஏதேனுமொரு தேவநாளில் நிச்சயம் கருக்கட்டுமென்று காத்திருந்த வருடங்களைச் சொல்லியழுதாள். பின்னொருநாள் மூப்பெய்தி தூமையும் நின்றபிறகு இனி தனக்கு பிள்ளை பிறக்காதென உடலைத் தீயிலிட்டுப் பொசுக்கிக் கொண்டதைச் சொன்னபோது அழமறந்து விக்கித்திருந்தாள். வெந்தததினால் பொலிவடையாவிடிலும் கோரம் அழிந்ததில் நிம்மதி என்று சொன்னாள்.”

”அவளை அப்போதெலாம் ஆற்றுப்படுத்த முயன்றேன். அவள் சொல்லி முடிக்கும் மட்டும் என்னால் எழமுடியவில்லை. நானும் இல்லை நீயும் இல்லை. ஆனால் அவள் சொல்வது மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.”

”நான் எழுந்து நீ பிரிந்ததும் அவளைக் காணவில்லை. இதோ இடப்பக்கமிருந்து தான் அவள் அரற்றிக்கொண்டிருந்தாள். நீயாவது பார் அவள் இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாளா என்று?”

”அவளும் உன்னைப் போல் எழமுடியாமலிருக்கக் கூடும். ஆனால் கேட்டுக்கொண்டிருக்கலாம். யார் கண்டது? அவளிலிருந்தும் என் போல் ஒருத்தி பிரிந்து அவளிடம் கதை கேட்கக் கூடும். ஆக நீ சொல்வதைச் சொல்லிக்கொண்டிரு… அவள் சொன்னதைச் சொல்லிக்கொண்டிரு.”

”ம்ம்ம் அவள் நிறையக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள் என்னை…”

”என்னென்று?”

”பசி நேரத்தில் அல்லாடும் உனக்கு கொதிக்கக் கொதிக்க உணவு தந்துவிட்டு ஆறும் மட்டும் நீ பொறுமையின்றி தவிப்பதைக் கண்டு யாரோ ரசிப்பதாய்த் தோன்றியிருக்கிறதா?”

“அவதியோடு அள்ளிப்போட்ட கவளங்களுடன் கீழுதட்டையும் கடித்துக்கொண்டு துடித்திருக்கிறாயா?”

”பாதாளத்திற்குள் விழும்பொழுது ஒரு மரக்கிளையோ, பாறையிடுக்கோ கைக்குச் சிக்கித் தொங்கிக்கொண்டிருப்பதான கனவுகள் பிடி தவறி விழும்போது கலையும் நொடியுடன் ஒவ்வொரு நாளும் விடிந்ததுண்டா?”

”குடம், தொட்டி, கிணறு குழி என எதற்குள்ளும் ஒரு பூனைக் குழந்தை இறந்து கிடப்பது தெரிவதுண்டா உனக்கு? ஒரு பிராணியின் உடலில் கண்கள் இருக்கவேண்டிய இடத்தில் வெற்றுக் குழிகள் மட்டும் கண்டிருக்கிறாயா? அதன் வதங்கிய உடலிருந்து எடுக்கும் வீச்சத்தை உணர்ந்திருக்கிறாயா?”

”உறங்கும் போதெல்லாம் உடையைத் தாண்டித் தெரியும் அங்கங்களிலே சூடு பட்டிருக்கிறாயா? தழும்புகளே உடையாகக் கொண்டதுண்டா? கொண்டவளைக் கண்டிருக்கிறாயா? அது பொருட்டு உறங்காது வெறித்திருந்து மயங்கி மயங்கியே தினம் விழுந்ததுண்டா?”

என்று பலவும் கேட்டுக்கொண்டிருந்தாள் அவள்.

”சிறுவயதிலேயே அனாதரவாய் விடப்பட்டு கோயில் ஒன்றில் அண்டி வளர்ந்து, பிள்ளைப்பைத்தியமென்று ஊராரால் ஒதுக்கித் தள்ளப்பட்டவள். உள்ளூரக் குமைந்தே காலமெல்லாம் வதைபட்டு, இனி வலிபொறுப்பதில் அர்த்தமில்லையென்று உணர்ந்த ஒரு இரவில்  கருவறைக்குள்ளேயே தனக்கு நெருப்பு வைத்துக்கொண்டு மாய்ந்து போனவள் அவள்.”

என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில் அருவறுக்கத்தக்க ஒலியுடன் அந்தப்பிணவறையின் கதவு திறக்கப்பட்டது. கீழிருந்தவளின் குரல் எந்த நொடியில் நின்று போனதென்று தெரியவில்லை. வெளியிலிருந்து இரண்டு மூன்று குரல்களினூடே அப்பாவின் குரல். கொஞ்சம் முயன்று பார்த்தேன் ஏனோ அவர்கள் பேசுவது புரிபடவில்லை.

அப்பா. பாதிப்பிணத்தைச் சுமந்தலையப் பிடிக்காமல் பெற்றவள் எங்கோ ஓடிப்போனது முதல் எனைத் தனியனாய்ச் சுமந்திருக்கிறார். சிலுவை போலத்தான் நான். நாச்சுழலவில்லை என்பதால் காண்பதோடு கதைப்பதையும் கண்களையே செய்யப்பழக்கியிருந்தவள் நான். நாசியும் செவிகளும் செயல்படக்கூடியவை; சிந்திக்கத் தெரிந்தும் பிரயோசனமற்ற மூளை. அவைபோக கைகால்கள் பிணத்தோடொப்பவை. இம்மியும் நகரமுடியாத உடல். ஆக அவள் ஓடிப்போனதைக் குறித்து வருந்த எனக்கு யோக்யதையில்லை என்றே தோன்றியது.

அப்பா சொல்லிக்கொண்டிருப்பார் எனைத் தூங்கவைக்கும் போதெல்லாம்…தங்கச் சிலை போல் மகள் பிறந்திருக்கிறாள் என்றார்களாம் அப்போது. உண்மையிலேயே சிலைதானென்று சீக்கிரமே தெரிந்து போயிருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். பருவம் வரும் வரையாவது என்னுடலின் பாரம் மட்டும்தான் அவர் சுமக்கத்தேவையாயிருந்தது., அதன்பின்னர், அசைய முடியாப் பிண்டத்திற்கு அழகெதற்கு வந்ததென்று நொந்துகொள்ளும் நிலை.

முழு மனுசியானவளை மலமும் நீரும் கழிக்கச் செய்வதிலிருந்து குளிப்பாட்டி, உடைமாற்றி, செல்லுமிடமெலாம் தோளோடு சேர்த்துத் தூக்கிச் சென்று அவர் அனுபவித்த துயர் என் பொருட்டென்கையில் தான் உள்ளுக்குள் நைந்து போகும்.

நான் இறந்துவிட்டாலாவது அவருக்குப் பெருஞ்சுமை குறையும். சாகவும் மறுக்கப்பட்டவளாயிற்றே நான். தன்னுயிரை மாய்த்துக்கொள்ளக் கூட தயை நோக்கியிருப்பதன் கொடுமையை நினைவு தெரிந்த நாள் தொட்டு அனுபவித்தேயிருக்கிறேன்.

நானிருக்கிறேன் நீ சென்றுவா என்று அப்பாவை அனுப்பிவிட்டுக் கிழவனொருவன் என் முலை தடவியதைக் கண்டுகொண்ட பின்பு யாரை நம்பியும் என்னை விடத்தயாரில்லை அவர். தூக்கிச் சுமந்தார் காலச்சாலை நெடுகிலும்.

அந்த அருவியில் குளிக்கச் செய்தால் குணமாகிவிடுமென்று யாரோ சொல்லக் கேட்டு எனைத் தூக்கிச் சென்றார். நீர் வந்து நனைக்கவும் என் உடல் தன்னை உடை மீறிக் காட்ட, ஆண்குறிக் கண்கள் சூழ்ந்து நின்று தின்னத் தொடங்கின. நெஞ்சு விம்ம என்னையள்ளியெடுத்துக்கொண்டு ஓடிய பொழுதில் தான், பாசம் வழுக்கியென் பலநாள் கனவு வசப்பட்டது. பாறையொன்றின் மீது போய் விழுந்தேன்.”

பொற்சிலை உடலில் எந்தக் காயமுமில்லை. பின்னந்தலையில் பாறை மோதி சட்டெனப் பிரிந்திருந்தது சீவன். எனக்கோ நான் பிணம் என்பதை அவருக்கும் உணர்த்துமொரு நிகழ்வு என்ற திருப்தி. இப்போதும் கூட பிணவறைக் கதவின் வெளியே கேட்கும் அவரது குரல் உடலைக் கிழித்துக் குதறாமல் தந்துவிடச் சொல்லித்தான் கதறிக்கொண்டிருக்கக்கூடும்.

போதும்… இனிமேலும் இதை நீங்கள் தூக்கிச் சுமக்கத்தேவையில்லை. இனிமேலும் நீங்கள் இதன் புனிதத்தைக் காத்து நிற்கத் தேவையிருக்காது. எப்போதுமே ஜடம் தானேயொழிய எந்தத் தீண்டலினாலும் கிளர்ந்துவிடப்போவதில்லையிது.

இதோ ஒவ்வொரு பிணமாய்ச் சோதித்து வந்த இருவர் என் தொடையிடுக்கில் விரல் நுழைக்கின்றனர். பொன்னிறச் சுருள் முடியை நுகர்ந்துபார்க்கின்றனர். இதோ என் முலையைத் திருகிச் சோதிக்கிறது ஒரு கை. பிணமென்று தெரியாமல் பார்த்த விழிகளையும் வருடிய விரல்களையுமே அகற்றிட முனைந்த உங்களுக்கு இவர்களின் கண்களைக் கண்டால் கொஞ்சம் நிஜம் புரியலாம். இதோ ஒரு நாக்கு என்னுள் நுழைகிறது. எனக்கோ யாதொரு சிரமமும் இல்லை இதில்.


இச்சாக்காட்டின் நிம்மதியை நீங்கள் உணராது போகலாம்….என்னால் பரிபூரணாக அனுபவிக்க முடிகிறது. இதோ இடப்பக்கமிருக்கும் அவளுக்கும் அப்படியே. இது செளகர்யமாயிருக்கிறது. மரண செளகர்யம். 

mail : rajan@rajanleaks.com