Sunday, January 12, 2014

துகூலம்

முச்சந்தியில் பஸ் ஸ்டாப், தொடர்ந்தாற் போல ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடம், பஞ்சாயத்து ஆபீஸ், ஓஎச்டி தொட்டி, குருடன் கடை என்று தொடங்கிய வேகத்திலேயே முடிந்துவிடும் கிராமம். பள்ளிக்கூடத்துக்கு நேர் பின்னால் அழகாத்தாளின் வீடு.  உண்மையில் அவளது காடு, தோட்டத்திற்குள் தான் அந்த ஊரில் பாதி இருக்கின்றது. சாலையைத் தொடும் முனைகளை மட்டும் கிழவியின் கணவன் அவ்வப்போது விற்றுக் குடித்துத் தீர்த்ததால் தான் இன்று இன்னும் சிலருக்கு அவ்வூரில் நிலமும் வீடும் சொந்தம். ஆறேழு வருடங்கள் முன்பு கிழவனும் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.

கிழவிக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சின்னப்பொன்னான். முப்பத்தைந்து வயதிருக்கும். காக்கி ட்ரவுசரும் ஓட்டைகள் விழுந்த எல் எஸ் பனியனும் தான் பாரம்பரிய உடை. பிறந்ததிலிருந்தே முழுக்கிறுக்கன் என்று ஊரும், பள்ளிக்கூடம் போனவன் தலையில் தென்னங்குலை கொத்தோடு விழுந்ததால் கொஞ்சம் பிசகாகிவிட்டதென்று கிழவியும் சொல்லக் கேள்வி. பொண்டு பொடுசுகளோடு விளையாடிக்கொண்டு, போகும் இடத்தில் பொங்குவதைத் தின்றுகொண்டு திரிவான்.
“தண்டுவனாட்டம் வளந்துருக்கியே... நீ பாக்கப் பொறந்ததுக எல்லாம் கல்லெடுத்து அடிக்குதுக... அதுக ஒரு சரிமனுசன்னு கூடச்சேந்து ஆடிட்டு இருக்கியேடா” என்பாள் கிழவி,

எதோ புரிந்தவனாய் கீழே இருந்து ஒரு கல்லை எடுத்து “இந்தக்கல்லு எவந்தலைல உழுகுதோ அவங்காத்தா டுமீலு” என்றுவிட்டு வீசியெறிந்தால் அது கடைசியில் அவன் தலையிலேயே வந்து விழும்.

இரண்டாவது மகன் மணியனுக்கு உள்ளங்கையில் மயிர் முளைக்காதது ஒன்று தான் பாக்கி. ஒருநாளும் உடம்பு வணங்கி வேலை செய்ய மாயாது. பொண்டாட்டி அப்பன் வீட்டுக்கே ஓடி வருசம் ரெண்டாகியிருந்தது. ஒரு முறை கிழவியை ஏய்த்து ரேகை வாங்க முயன்று சட்டுவத்தாலேயே  படர வெளுக்கப்பட்டதிலிருந்து  குண்டி காய்ந்த குதிரை கொள்ளுத் தின்பது போல அடங்கிக் கிடந்தான் மணியன்.  ஆக, கிழவி மண்டையைப் போடும் வரை ஆக்கும் சோத்தைத் தின்று விட்டு அக்கடாவென்று கிடக்க வேண்டியது தான்.

காட்டில் சோளமும் கரும்பும் போட்டிருந்தாள் அழகாத்தா. பத்து பன்னிரண்டு குடித்தனம் தங்கியிருந்தது பள்ளிக்கூடத்துக்கு பின்னால் இருந்த லைன் வீடுகளில். வீட்டு வாடகை, வட்டிக்கு விட்டது போக தோட்டத்து வேலை மாடு கன்னுகளுடன் அழகாத்தாவின் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. அழகாத்தாள்.,உண்மையில் அது ஒரு காரணப்பெயர்.  பருவத்தில் அழகாத்தாளின் வனப்பு குறித்து அந்தப் பகுதி முழுக்க பிரசித்தம். அதைவிடப் பிரசித்தம் அவளது ஆக்கிரகம். இன்றைக்கும் அவளது குரல் சற்று அதிர்ந்தால் போதும்; அந்த ஊரின் ஆண்களே கருக்கு வெறுக்கென்று தான் நிற்பர். ஆணாய்ப் பிறக்க வேண்டியவள் தான் அவள், எங்கேயோ கணக்கு தப்பிவிட்டதென்று கிழவியின் அப்பன் சாகும் வரை சொல்லிக்கொண்டிருந்தானாம்.

நள்ளிரவில் கருநாய் ஒன்று நடு இட்டேரியில் நின்று இருட்டுச் சாலையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. சோடியம் விளக்கின் ஒளியைத் தின்ன நூற்றுக்கணக்கான ஈசல்கள் முயன்று தோற்றுக்கொண்டிருந்தன.  

ரஞ்சிதத்தின் வீட்டு மரக்கதவின் தாழ் திறந்துகொண்ட போது தெருவிளக்கின் ஒளி அந்த வீட்டு வாசலில் விழாமல் பூவரசமரமொன்று நிழல் பரப்பி நின்றது. கொஞ்சமாகத் திறந்து கொண்ட கதவிலிருந்து ஒரு ஜதை கண்கள் சாலையை நோட்டம் விட்டன.

ரஞ்சிதம். அரசாங்க மொழியில் சொல்வதென்றால் ஆதரவற்ற விதவை அந்த ஊர் மொழியில் சத்துணவு டீச்சர். வயது முப்பத்தைந்தைத் தாண்டியிருக்காது. மகனுக்கு 10 வயது, அந்தப்பள்ளியிலேயே ஐந்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.  சொந்த பந்தமெல்லாம் உண்டு; சொல்லியனுப்பினால் சோற்றுக்கு வந்து போகக் கூடிய அளவில். மற்றபடி, கையூனிக் கரணம் பாயும் கதைதான்.

சாலையில் நின்றிருந்த நாய் மெதுவாய் நடந்து சென்று மறைந்தது. கதவு முழுவதுமாய்த் திறந்து கொண்டது. மணியகாரச் சண்முகம் தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு வெளியேறினார். சட்டென கதவு சாத்தப்பட்டது. மணியகாரன் சைக்கிளுக்கு மணியே தேவையில்லை. ஓட்டைப்பானையில் ஈ புகுந்தாற் போல லொடலொடவென்று உருண்டுகொண்டிருந்தது.

திடுமென, எங்கிருந்தோ ஓடிவந்த சின்னப்பொன்னான்  முச்சந்தியில் நின்றுகொண்டு உச்ச ஸ்தாயியில் கத்தத் தொடங்கினான்.

“இரும்பைக்
காய்ச்சி
 உருக்கிடுவீரே!
யந்திரங்கள்
வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே!
கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே!”

இதைச் சற்றும் எதிர்பாராத சண்முகம் வேட்டி கட்டியிருப்பது நினைவில்லாமல் சட்டென பெடல் மீது இடது காலை வைத்து மிதித்து வலது காலை பின்புறமாகத் தூக்கிப் போட முயலவும் வேட்டி தடுக்கி பொதுக்குழாயடி முன்பு படாரென விழுந்தார். சின்னப்பொன்னான் இதெதையும் சட்டை செய்யாதவனாக இழுவையான ராகத்தில் மீண்டும் அந்த நான்கு வரியையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்துக் குடித்தனக்காரர்கள் வெளியே வந்துகொண்டிருக்க, அழகாத்தா பாம்படிக்க வைத்திருக்கும் ரீப்பர் கட்டையை எடுத்துக்கொண்டு வேக வேகமாக வந்தாள்.  சண்முகத்தின் சில்லு முட்டி பெயர்ந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. பதற்றத்தோடே எழுந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு தெருவிளக்கின் ஒளி விழாத தூரம் வரை ஓடினார். விழுந்ததில் ஹேண்டில் பார் வளைந்து விட, அவர் கிழக்கே திருப்பினால் அது வடக்கே சென்றது.

அழகாத்தாள் அங்கு வரவும் சின்னப்பொன்னான் பாட்டை நிறுத்திவிட்டு ‘காசு... காசு..’ என்று கூவத்தொடங்கியிருந்தான். கையிலிருந்த கட்டையால் சின்னப்பொன்னானின் நடுமுதுகில் விளாரென்று இழுத்தாள் கிழவி.  ரீப்பர் கட்டையின் சிலாம்புகள் முதுகில் ஏறின. சரக்கென்று இழுத்ததில் ரத்தம் பீய்ச்சிக்கொண்டு வந்தது. சின்னப்பொன்னான் துடித்துக்கொண்டே வீட்டுக்கு ஓடினான்.  ஊரார் ஆத்தாளையும் மகனையும் பசாரித்துக் கொண்டு  வீடுகளுக்குள் அடைந்தனர்.

கிழவி சண்முகம் போன திசையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சற்று நேரம்.

”ஏண்டா தாயோளி அப்பிடி முச்சந்தில நின்னு கத்துன?”

”கேக்கறனுல்ல… வாயில என்ன வெச்சுருக்குது?”

சின்னப்பொன்னான் திண்ணைக்கு அடியில் சுருண்டு கிடந்தான். அவன் தேம்பும் சத்தம் அந்நேரத்தில் நாராசமாக இருந்தது.

”கெட்டித்தின்னி… வாயில என்ன கொள்ளயா கெடக்குது? பேசறானா பாரு அவன்… தொண்டுபொறுக்கி” என்றவாறே எட்டி மிதிக்கச் சென்றாள் கிழவி.
கிழவி நெருங்குவதையுணர்ந்த சின்னப்பொன்னான்  படாரென்று நிமிர திண்ணை நெற்றில் மோதிப் பொறி கலங்கிப் போனான்.  முன்னிலும் பலமாகக் கேவியழத் தொடங்கினான்.

பதறிய அழகாத்தாள் திண்ணைக்குள்ளிருந்து  அவனை வெளியே இழுத்து நெற்றியைப் பார்த்தாள். சல்லொழுக்கிய வாயுடன் சின்னப்பொன்னான் புறங்கையால் முகத்தை மூடிக்கொண்டான்.

மறுநாள் விடியலில் கிழவி கழனித்தண்ணி எடுக்கப் போகையில் கூடவே ஓடிவந்தான் சின்னப்பொன்னான்.

‘கோனாரய்யா கோனாரு கொக்கு புடிக்க போனாரு நண்டப்புடிச்சாரு
நாளியில போட்டாரு.. சுட்டுத்தின்னாரு சுருங்கிப்போனாரு’

”தே… என்ன பாட்டு மயிரு இது…”

“பாட்டு…” என்றுவிட்டு அஷ்டகோணலாக முகத்தை வைத்துக்கொண்டான்.

“சின்னப்பொன்னா... ஒண்ணு கேட்டா சொல்லுவியா”

“ஓ... சின்னப்பொன்னான் அழைக்கிறான்....” என்று பாடத்தொடங்கினான்.

“ஆமா நேத்து அந்நேரத்துல என்னத்துக்கு முச்சந்தில நின்னுகிட்டு கத்துன”

“எப்போ”

“நேத்து”

“நானா”

“நீதான் பின்ன உங்கொப்பனா”

“அது…. மணியக்காரச் சம்முகம் சிலுவானம் குடுப்பான்னு பாடுனேன்”

“மணியகாரன் என்னத்துக்கு சிலுவானம் குடுக்கறான் உனக்கு?”

“மணியன் தான் சொல்லுச்சு… மணியகாரன் வரையில அந்தப்பாட்டு பாடுனா காசு குடுப்பான்னுட்டு”

“எப்ப சொன்னான்”

“நேத்து திண்ணைல படுத்துட்டு இருந்தனா…”

“ம்ம்ம்”

“மணியன் வந்து எழுப்புச்சு…”

“........”

“ஊன்னு கேளு... அப்பத்தான் சொல்லுவேன்”

“ம்ம்ம்”

“மணியகாரச் சம்முகம் ரஞ்சிதமக்கா ஊட்டுல இருந்து வரையில பாட்டு பாடுனு”

இவ்விசயம் ஊரில் அரசல் புரசலாகத் தெரிந்தது தான். சண்முகத்தின் மீது யாருக்கும் பெரிய அபிமானம் இல்லைதான் என்றாலும், ரஞ்சிதத்தின் நிலையும் குணமும் பொறுத்து சிலவாய்களும் அழகாத்தாளின் சாமியாட்டத்துக்கு பயந்து  பல வாய்களும் கட்டுண்டிருந்தன.

எண்ணூத்திச் சொச்ச ரூபாய் வருமானத்துடன் ரஞ்சிதம் ஒத்தப்புள்ளையாகக் கஷ்டப்படுவதால் அழகாத்தாளுக்கு ரஞ்சிதம் மீது நிரம்பக் கரிசனம். வாடகை, பண்ட பாத்திரம், சோறு துணிமணி முதற்கொண்டு ஒத்தாசை செய்துவந்தாள். மாலைக்குள் ரஞ்சிதம் வந்து மீண்டும் புலம்பப் போவது குறித்து நினைக்கையில் மணியன் மீது பற்றிக்கொண்டு வந்தது கிழவிக்கு.

அர்த்த சாமத்தில் ரஞ்சிதத்தின் வீட்டு ஓட்டின் மீது கல்லெறிந்துவிட்டு காத்திருக்க வேண்டியது.  கதவைத் திறந்தால் முன்னால் நின்று கொண்டு பல்லைக் காட்டுவது. ஊரிலிருக்கும் சில்லறைகள் சிலவற்றுடன் சேர்ந்து ரஞ்சிதத்தின் மகனைக் கூட்டி வைத்துக்கொண்டு ராத்திரியில் மணியகாரன் வந்து போகும் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்பது என்று மணியன் செய்த வேலைகளையெல்லாம் ரஞ்சிதமே பல முறை அழகாத்தாளிடம் அழுது தீர்த்திருந்தாள்.

ஒரு முறை நடுராத்திரியில் வீதியையே எழுப்பிவிட்டு, ரஞ்சிதத்தின் வீட்டுக் கதவிடுக்குக்குள் கண்ணாடி விரியன் புகுந்ததைப் பார்த்ததாய்க் கதை சொல்லி கட்டையுடன் புகுந்து வீடு ஏகமும் சுற்றிவந்து துழாவிய மணியனை அழகாத்தாளே காறித்துப்பித்  துரத்தியிருந்தாள். அன்றைக்கு சண்முகம் அங்கே வரவேயில்லை என்பதால் தப்பியது.

கிழவி அன்றைக்கு நேரடியாகவே கேட்டிருந்தாள்.

“ஏம்புள்ள… சண்முகத்துக்குமென்ன குடும்பமா குட்டியா? அடி.. கட்டாட்டியும் போச்சாது.. ஆம்பளைனு ஒருத்தனிருந்தா இந்தத் தாயோளியெல்லாம் ஊடண்டுவானா ”

ரஞ்சிதம் பதிலொன்றும் பேசவில்லை.

“அடி… நீயொன்னுஞ்சொல்லவேண்டாம்.. நாங்கேக்கறனே அவன… என்னங்குற?”

“சனம் பே…” மெலிதாய்க் குரலெடுக்கவும்.,

“சனம் மசுரப்புடுங்குது…. சோத்துக்கில்லீனு கெடந்தீனா சனமா வந்து நிக்குது உனக்கு? கழுத்து வளையக் கனங்கனமாத் தாலியக் கட்டீட்டு ஊரேகமும் தொடுசு சுத்தீட்டு இருக்காளுக கண்டாரோளிக… எவ உன்னைய பேசுறானு பாக்கறன் நானு…”

ரஞ்சிதம் மெல்ல அழத்தொடங்கிவிட்டாள். அதற்கும் மேல் கட்டாயப் படுத்தவில்லை கிழவி.

மணியனைப் பற்றி ஒவ்வொரு தரம் கேள்விப்படுகையிலும் வேப்பிலையே இல்லாமல் ஆடிவிடவேண்டுமென்றுதான் எண்ணுவாள் அழகாத்தாள். சாக்கடையைக் கிளறி அவள் மீதும் சேற்றையிறைப்பானேன் என்றே அதுமட்டிலும் பொறுத்துக் கொண்டிருந்தாள்.

அன்றைய பொழுதும் விழுந்திருந்தது. காலையிலிருந்தே கண்ணுக்குச் சிக்கவில்லை மணியன். ராச்சோத்துக்கு எப்படியும் வீட்டுக்கு வந்துவிடுவான் என்று அழகாத்தாள் மனதுக்குள் கறுவிக்கொண்டு காத்திருந்தாள். நடுச்சாமமானது; மணியன் உள்ளுக்கு நுழைய நுழையவே பிடித்துக்கொண்டாள்.

”மேஞ்சுட்டு எந்நேரம் வருது பாரு”

“அதேன்… எங்க மேயறதக் கண்ட நீயி…”

”பண்ணுனதுக்கே புழுத்த நாயி குறுக்க பாயாமக் கெடக்குது. எங்க ஒரத்த வாயா இருக்குதுனுட்டு பாவம் முண்டச்சி வாய்ல போயி உழுவற”

”என்னத்துக்கு இப்ப நீயி பொழுதோட பாட ஆரமிச்சிருக்கற?”

“ இந்தாடா.. நானும் போச்சாதெடுனு உட்டா அந்தப்புள்ளைய அரம பாடுபடுத்தீட்டு இருக்குற நீயி..”

“எந்தப்புள்ளைய பாடுபடுத்துனன் நானு… எண்ட்ர வாயப்புடுங்காதியாமாம்..”
“தெரியவே தெரியாதுனக்கு?  அடேய்… சத்தியமாச் சொல்றன் அதுகிட்டல்லாம் வார்த்த வாங்கினீன்னு வையி…”

“ந்தா… சும்மா ஊளு ஊளுங்காத… நடு ஊட்ல  நாய்க இழுத்துட்டு திரிஞ்சாப்பிடி மானங்கெட்டுக் கெடக்குது… ஏழூருக்கு காறித்துப்புறான்… குடிவெச்சிருக்குதாமாம் உங்காத்தா எவளையோன்னு… நீயி அவள ஊன்னும் கேக்கமாட்ட… எங்கிட்ட வந்து ஏறுற?”

“உன்ர நல்ல நாட்டியம் என்னானு எனக்குத் தெரியும்… நீயெல்லாம் நிது பேசிட்டுத் திரியாதயாமாம்… சனம் பொச்சுல சிரிச்சுப்போடும்… உம்பன்னாட்டெல்லாம் கெடக்கட்டும்.. என்ன மயிருக்கு நீயி அந்தப்புள்ள முந்தானையச் சுத்தீட்டு திரியற…”

“இதென்னது புது நாயமா இருக்குது… நாம்பொறகால சுத்துறேன்னு அவ சொன்னாளா? கண்ட நாயெல்லாம் வந்து போறதுக்கா எங்கையன் ஊடு வாசல் கட்டி உட்டுருக்கு… ஒழுக்க மயிரா இருக்கறாப்டினா இருக்கச் சொல்லு.. இல்லாட்டி நீயி ஆகறதப் பாத்துக்க”

”எந்தத் துணியடா அழுக்கில்லாமக் கெடக்குது.. வெள்ளச்சீலைல இருந்தா மட்டும் உம்பட கண்ணுக்கெல்லாம் வெளக்கு வெச்சாப்பிடி தெரியுது … இல்ல.. அவ ஊட்டுக்கு எவன் வந்தா உனக்கெங்கடா கொடையுது? நீயி பண்ற சில்றத்தனத்துல அவன் முறுக்கீட்டு போயிட்டான்னா அந்தப்புள்ளைய நீயி வெச்சுப் பாப்பியா?”

“அவங்கட்டிக் கூட்டிட்டு போனான்னா நானேன் கேக்கறேன்? ஊருல இல்லாத தொடுசுத்தனத்த என்ர ஊட்ல பண்ணுனா கேக்காகம பின்ன?... இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்… அவனில்லீனா ஆகாதா? போனா போய்ச்சாரான் ஏன் நான் வெச்சுப் பாக்கமாட்டனாக்கும்?”

”நீ வெச்சுப்பாத்த பூலவாக்குதான் சந்தி சிரிச்சுருச்சுல்ல… வந்து ஒரு மாசங்கூடியில்ல கட்ன பொண்டாட்டி காறித் துப்பிட்டு போனவதான் போன மக்காநாளே புதுப்புருசன வெச்சிருக்காளாமாம்.. உம்பொழப்பு மணக்குற லச்சணத்துக்கு இதொண்ணுதான் கொறச்சலா இருக்குது பாரு”

”வயசுக்கேத்தாப்டி பழம பேசிப்பழகு நீயி…”

“உன்ர பழக்கமயிரு அந்த லச்சணத்துல இருக்குதுனு நெனச்சுக்க”

ஏற்கனவே குடிவெறியில் வந்தவனை கிழவியும் எரிச்சலூட்ட, பேச்சு முற்றி மணியன் எட்டி உதைத்ததில் கிழவி ஆட்டாங்கல்லில் மோதிவிழுந்தாள். காலை முறித்து கிடையில் கிடத்தியானது.

காயமெல்லாம் ஆறி கிழவி நடமாடத் தொடங்கியபோது ரஞ்சிதத்தின் வீடு காலியாகக் கிடந்தது. மணியகாரனும் மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விட்டதாகச் சொன்னார்கள்.


”அதேங்கேக்குற…. நீயி உழுந்த மக்கா நாளு… ஊரே பாக்கையில நம்ம சின்னப்பொன்னான் முச்சந்தில வெச்சு அந்தப்புள்ள மாரப்புடிச்சு கசக்கிப்புட்டான்னா… ரஞ்சிதத்துக்கு உசுரே இல்ல பாத்துக்க… பாவம்… கட்டையெடுத்து அடிச்சுல்ல வெலக்கி உட்டாங்க அவன… என்னைக்குமில்லாம அவனுக்கு திடீர்னு அப்பிடியென்ன மசப்புடிச்சுதோ தெரில….. இதொண்ணும் ஆவறதில்ல அழகாத்தா... அவனுக்கு எதாச்சும் பண்ணி உடு... வேற ஆராச்சும் பொம்பளையப் புடிச்சிருந்தான்னா உடுவாங்களா? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிராம... அந்தன்னைக்கே ரஞ்சிதம் மூட்ட முடிச்சல்லாம் கட்டிப்புடுச்சு.. ஆனா போகையில அதுக்கு மூஞ்சியே இல்ல.. எனக்குன்னா கண்ணுகொண்டு பாக்க முடியல தெரியுமா...  நல்லதுக்கா வர்றா நாய் மேல சங்கராந்தி” என்றாள் ஆராயக்காள். 

rajan@rajanleaks.com

நன்றி: