Monday, January 6, 2014

விறலி

சாலையைக் கடந்து பேருந்து நிலையத்திற்குள் நுழையும் அவசரத்தில் மூன்றாவது முறையாக அவனுடைய எண்ணுக்கு முயற்சித்துக்கொண்டிருந்தேன்.கிட்டத்தட்ட ஜீவமரணப்போராட்டமே உள்ளுக்குள் நடந்து முடிந்திருந்தது.

இம்முறையும் எடுக்கவில்லை. ஒருவிதத்தில் நிம்மதியாயிருந்தது. அல்லது அவ்விதமாய் நானே கற்பனை செய்துகொண்டேன். ஒரு வேளை அவன் பேசியிருந்தால்? என்னை நினைவு வைத்துக்கொண்டிருப்பானா? அல்லது இதென்னடா சனியன் இத்தனை வருடம் கழித்து முன்னால் வந்து நிற்கிறதென்று திகைப்பானா? இந்தச் சங்கடங்களுக்கெல்லாம் இடங்கொடாமல் இப்படி முடிந்து போனது நல்லதற்கே என்று சமாதானம் அடைந்திருந்தது மனம்.

பாயிண்ட் டு பாயிண்ட், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் எல்லாம் நிலை சேர்ந்து, சோர்ந்து போய் நின்று கொண்டிருந்தன. முதலில் கிளம்புவது எதுவென்று விசாரித்து படிக்கு அருகிலேயிருந்த வரிசையில் அமர்ந்து கொண்டேன்.  மொபைல் அதிர்ந்தது. சரவணன் தான். எடுக்கவேண்டாம் என்றது புத்தி.

”ஹலோ”

நான்கு வருடங்கள் கடந்திருக்கும் கடைசியாய் இந்தக்குரலைக்கேட்டு. உள்ளூர பரவசம் தான்… இருந்தும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டேன். பேருந்து காலியாயிருந்தது.

“ஹலோ… மிஸ்ட் கால் வந்திருந்துச்சு இந்த நம்பர்ல இருந்து.. யாருங்க?”

“இளவரசி” வெகுபிரயத்தனப்பட்டு உதிர்த்துவிட்டேன்

“………..”

மறுமுனையில் அமைதி… நினைவுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது.

”கரூர்….”

“ம்ம்ம்ம் எப்பிடி இருக்க! நியாபகம் இருக்கா என்னையெல்லாம்?”
ஆச்சரியத்துடன் வினவுகிறான்.

“ம்ம்… இங்க வந்துருக்கேன் வேற ஒரு வேலையா.. வேல முடிஞ்சு கிளம்பிகிட்டு இருந்தேனா.. அதான் உன்னைய”

”இங்கனா… கோயம்புத்தூரா?”

“ம்ம்”

“அய்யய்யோ… சாரி… சைலண்ட்ல இருந்ததால கவனிக்கல… சரி இப்ப எங்க இருக்க”

பஸ்ஸிலிருந்து இறங்கியாயிற்று. பேருந்து நிலையத்தின் முகப்பிற்கு வந்து காத்திருந்தேன். அடுத்த சில நிமிடங்களில்  மீண்டும் அழைத்தான்.

”எங்க”

“இங்க முன்னாடி கேட்ல”

“பாத்துட்டேன்”

சாலையின் எதிர்ப்புறமிருந்து பைக்கில் அமர்ந்தவாறே கையசைத்தான். இரண்டு சுற்று உடம்பு போட்டிருக்கிறது. சாலையைச் சுற்றிக்கொண்டு வந்து முன்னால் நிறுத்தினான்.

“போலாம்”

“இல்ல நான் கிளம்பணும்… இங்கயே…”

“ப்ச்… நான் என்ன வேணாம்னா சொல்றேன்… வா வீட்டுக்கு போயிட்டு போலாம்”

அதட்டல் தான்!

சாலையை விழுங்கிக்கொண்டிருந்தது சக்கரம்.

“கல்யாணம் ஆகிடுச்சுனு தெரியும்”
நானே ஆரம்பித்தேன்

“ம்க்கும்.. பொண்ணுக்கு ரெண்டு வயசு ஆகிடுச்சு… இப்ப இன்னும் ரெண்டு மாசத்துல அடுத்த ரிலீஸ்க்கு வெயிட்டிங்”
ஒரு நொடி பின்னால் திரும்பி புன்னகைத்தான்.

“வீட்ல”

“அம்மா வீட்டுக்கு போயிட்டா.. ஆகும் எப்படியும் ஆறேழு மாசம்”

“ஓ”
சாலையில் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

“ஆளு ரொம்ப அமைதியாகிட்ட மாதிரி இருக்கே”
என்றான் சரவணன்.

“அப்பிடி தோணுதா என்ன?”

“அப்பிடியேதான் இருக்கேன்றியா”
பதிலேதும் சொல்லவில்லை நான். அவனும் பதிலை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

வீட்டை நெருங்கியிருந்தோம்.  இருள் கவியத் தொடங்கியிருந்தது.
உள்ள வா என்றுவிட்டு சட சடவென நுழைந்து ஷூ ஸ்டேண்ட் அருகில் குனிந்து சாவியை எடுத்து வீட்டைத்திறந்தான். மெதுவாகப் பின் தொடர்ந்தேன். வீடாவது மாறியிருக்கிறதா என்று நோட்டம் விட்டேன். சமையலறைக்குள்ளிருந்து கவனித்தவனாக,

“உட்காரு… என்ன சாப்பிடற” என்றான்.

“ம்ஹூம்.. லஞ்ச்சே 4.30க்கு தான் ஆச்சு… தண்ணி மட்டும் குடு”

“நிஜமாவா”

“ம்ம்ம்… தண்ணி மட்டும் போதும்”
தண்ணீர் கொண்டு வந்தான்.
சுவர் முழுக்க குழந்தையின் படங்கள் வித விதமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன.

“கல்யாண ஆல்பம் எடேன்”

“அது அவளோட அக்கா ஒருத்தி கொண்டு போனா அதோட சரி.. இப்ப நீ கேக்கப்போய் தான் நியாபகமே வருது”
எதோ கேட்க யத்தனித்தேன். அதற்குள் அவன் புகுந்தான்.,

”இப்ப… ஸாரி.. எதோ கேக்க வந்தியே…”

”இல்ல.. ஒண்ணுமில்ல நீ சொல்லு”

“இல்ல இப்ப வேலை? டாக்டர்ட்டயே தானா?”
டாக்டர்… அந்த முகத்தை சட்டென்று நினைவுக்குக் கொண்டுவரக்கூட முடியவில்லை. நல்லதுதான் அதுவும்.,

“ம்ஹூம் இல்ல., வேற எடம்” என்றேன்

“பரவால்லயா”

“ரொம்பவே”
என்ன பேசுவதென்று தெரியவில்லை. லவ் மேரேஜா? குழந்தை பேரென்ன? என்னை நினைச்சுக்குவியா? ஏன் திடீர்னு பேசறதே நின்னுடுச்சு? நிறைய கேள்விகள் மனதுள்… கேட்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் ஒரு புறம்.

“முகம் கழுவணும்” என்றேன்…

வழிகாட்டினான். குளியலறை முழுக்க அவன் வாசம் நிறைந்திருந்தது. உள்ளாடைகள் சுருண்டு சுருண்டு ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தன. முகத்தைக் கழுவிக்கொண்டேன். கல்யாணத்திற்கெல்லாம் முன்பு ஒருமுறை இதே வீட்டில் சந்தித்த நினைவு மேலிட்டது. அன்றைக்கும் வேறு யாருமில்லை வீட்டில்.
அன்றிரவு தங்க ஆசைப்பட்டு கேட்டபோது அவன் தயங்கி நெளிந்தது.,அதைத் தொடர்ந்து சட்டென, ”பிடிக்கலைன்னா விடு” என்றுவிட்டு நான் விருட்டென்று கிளம்பிச் சென்றது….

“சரி சரவணா நான் கிளம்பறேன்”
என்றேன்.

“என்ன அவசரம்.. இரேன் நாளைக்கு போலாம்”

கீழிமைகள் சற்றே நனையத்தொடங்கியிருந்தன எனக்கு.

“இல்ல.. போகணும்… இன்னொருநாள் கொழந்தை எல்லாம் எடுத்துட்டு வந்துட்டு சொல்லு… பாக்கணும் போல இருக்கு” என்றேன்

”சரி நான் பஸ் ஸ்டாண்ட்ல..”

“எதுக்கு பஸ் ஸ்டாண்ட் மறுபடியும்? இங்க முன்னாடியே நிக்குமே பஸ்…”

“ம்ம்”

“நான் போயிக்கறேன்….”
அமைதியாய் நின்றான்.

“பாத்துக்கோ.. நான் வரேன்…” பொய்யாய் சிரித்துவிட்டுக் கிளம்பினேன்.
அந்தத் தெருமுனை கடக்கும் வரை நிச்சயமாய்த்தெரியும்… எனக்குப் பின்னால் தான் அவன் பார்வை நிலை கொண்டிருக்கிறது என்று. பஸ்ஸுக்கு காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் பதறியது மனம்.
பேருந்து ஏறி இருக்கையை அடைந்ததும் தான் மூச்சு வந்தது.
நினைவு சுழன்று பின்னோக்கிப் பயணித்தது. சன்னலுக்கு வெளியே  நிலைகுத்தியது பார்வை. அவனது முகத்தை துல்லியமாய் நினைவில் கொண்டுவர சில நொடிகள் பிடித்தது. சரவணன்… அதற்கு முன் ஏனோ வாசுவின் நியாபகம் தான் வந்து தொலைத்தது.

நான்கு வருடங்கள் முன்பு க்ளினிக்கில் வேலை செய்துகொண்டிருந்த காலம். வாசு டாக்டரின் மகன்; வார இறுதிகளில் மட்டுமே ஊருக்கு வருவான்.  திருச்சியில் கல்லூரி அருகே வீடு எடுத்துத் தங்கிப் படித்து வந்தான் அப்போது. என் வயதுடையவன். அதுவே போதுமானது தான் எனை ஈர்க்க; அதைத்தாண்டியும் வசீகரம் நிறைந்திருந்தது அவனிடத்தில்

ஆசை தீர்ந்ததாய் உணர்ந்தானோ என்னவோ, அவனாகவே விலகியிருந்தான் கொஞ்ச நாட்கள். அதன் பிறகு ஒரு நாள் கல்லூரி நண்பர்கள் எல்லாரும் ஊருக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லி அந்த வீட்டுக்கு அழைத்திருந்தான்.
எதிர்மறையாக எதையுமே யோசிக்கத் துணியவில்லை நான் அப்போது. எது என்னை இயக்கியதென்றும் இதுகாறும் புலனாகவில்லை.

”வந்துட்டேண்டா… ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி நிக்கறேன்”
என்றேன்.

“அங்க அப்பாக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருப்பாங்க ஸ்ரீனிவாசபுரம் கனரா பேன்க்னு கேட்டு ஆட்டோல வந்துடு அங்கிருந்து நான் கூட்டிப்போறேன்”

எனக்கு முன்பாக அங்கு நின்றிருந்தான் வாசு.

“சேலை.. சொன்னேன்ல”

“கொண்டு வந்துருக்கேன் அங்க போய் கட்டிக்கறேன்”

“சரி ஏறு போலாம்… பின் வாசல் கிட்ட எறக்கி விட்டுடறேன்… கதவ திறந்து உள்ள வந்துடு நான் முன்பக்கமா வரேன் சரியா”

“ம்ம்” என்றேன்.
அது ஒரு பழைய வீட்டின் பின்வாசல். உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு பின்கட்டுக் கதவருகே நின்றேன். கதவு உட்புறமிருந்து திறக்கப்படும் சப்தம் கேட்டது.
வாசு.. உள்ளே அழைத்துச் சென்றான். கும்மிருட்டு… சன்னல்களெல்லாம் திரையிட்டு மறைக்கப்பட்டிருக்க எங்கிருந்தென்று சொல்லமுடியாத படிக்கு ஆங்காங்கே கொஞ்சம் வெளிச்சம் படர்ந்திருந்தது.  ஒரு அறைக்குள் கூட்டிச் சென்றான்.

“டிரஸ் பண்ணிக்கோ… பத்து நிமிசத்துல வந்துடறேன்”

“கரண்ட் இல்லயா? மெழுகு வர்த்தி….”

“கரண்ட் இப்ப வந்துடும் இரு...”
நிற்கக் கூட நேரமின்றி ஓடினான்.

அந்த அறைக்குள்ளேயே குளியலறை இருந்தது. நிதானமாகக் குளித்தேன்.  நனைந்த உடலை அனிச்சையாய்த் தடவிக்கொண்டிருந்தன கைகள். பிளவினூடே விரல் விட்டெடுத்தேன். உயிர்வலி பொறுத்துச் செய்த யோனி விரிந்தடங்கியதாய் ஒரு உணர்வு.

புடவையைக் கட்டிக்கொள்வதன் சுகம் சொல்லி முடியாதது. வாழ்வின் 
மகிழ்ச்சியான தருணம் அதுவாய்த்தானிருந்தது அந்நாளில்.  பொட்டிட்டுக்கொண்டேன். முடியெடுத்துச் சூடிக்கொண்டேன்.
மொபைல் அதிர்ந்தது.

“ரெடியா”

“ம்ம் ஒரு ரெண்டு நிமிஷம்”

“ம்ம்ம் அப்பிடியே வெளிய வந்தீன்னா எதிர்ல ஒரு ரூம் இருக்கும் பாரு… பெட்ல உக்காந்திருக்கேன் வா”

”நீ…” சொல்லத் தொடங்கும் முன் துண்டித்து விட்டான்.

எதிர் அறைக் கதவைத் திறந்தேன். முந்தைய அறையே தேவலாம் என்றிருந்தது. இருளைத்தடவித் தடவி முன்னேறினேன்.  வெண்ணிற மெத்தை விரிப்பு  மறுபக்க மூலையில் அமர்ந்திருந்தான்.
அருகில் சென்று அமர்ந்தேன். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. ம்ஹூம் இனிப் பொறுமையில்லை எனக்கு… அவனை நோக்கித்  திரும்பினேன். அதற்குள் என் தோள்மீது கைவைத்து இழுத்தான். அவனை அணைத்துச் சாய்ந்தேன். முந்தானையை விலக்கி மாரைப்பிடித்துக்கொண்டு முத்தமிட நெருங்கினான்.

சட்டென விளக்குகள் எரிந்தன…. கண்கள் வெளிச்சத்துக்குப் பழகுவதற்குள் நெஞ்சின் மீது வலுவாய் இறங்கி நெட்டித்தள்ளியது ஒரு கை. தரையில் விழுந்து நிமிர்ந்து பார்த்தேன். இது அவனில்லை. எங்கே வாசு? உமிழ் நீர் வழிய எவனோ ஒருவன் கதறியவாறே எனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். கீழே விழுந்ததில் என் சவுரி கழன்று போயிருந்தது.

அழக்கூட சக்தியில்லை எனக்கு.  சுவரோரம் ஒண்டிக்கொண்டேன். வாசுவும்  இன்னும் நான்கைந்து பேரும் ஹேப்பி பர்த் டே டூயூ என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தனர். கையில் ஒரு பெரிய கேக். .

’’கேனப்    களா… சில்றத்தா…..ளி மாதிரி வேல பண்ணாதீங்கடா…” என்று கத்தத் தொடங்கினான் என்னைத் தள்ளி விட்டவன்

”டென்சனாவாத டென்சனாவாத….” வாசு சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

”அலிப்பு…… கொண்டாந்து உட்ருக்க? எச்சக்கலப்….. சோத்தத்திங்கறியா பீயத்திங்கறியா”

”டேய்ய்… சும்மா ஜாலிக்குதான”

”பு………க்கு”

என்னைக்குறித்து அவர்களுக்கு யாதொரு ப்ரக்ஞையும் இல்லை.

அப்போது தன் நண்பர்களை திட்ட சரவணன் ஒவ்வொரு முறை பு---- பு----யெனும்போதும் என் உயிரற்ற யோனி மேலேறிவந்து மார்க்கூட்டருகே  கிழிந்து சிதைவதாய் உணர்ந்தேன். அதுதான் அவனுடனான முதல் சந்திப்பு. அவன் என்னை முதன்முதலில் அழைத்த பெயர் அலிப்பு-----.  இப்போதும் கூட வலிக்கத்தான் செய்கிறது. அங்கிருந்து ஓடி ஊர் திரும்பும் மட்டிலும் சரவணனின் அலறல் எனக்குள் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

”அதன் பெயர் தான் அருவருப்பா? “ இப்போதாவது கேட்டு வந்திருக்கலாம் என்றெண்ணினேன்.
சற்றும் எதிர்பாராத விதமாய் அதற்கு மறுநாள் காலை வாசுவிடம் கேட்டறிந்துகொண்டு என்னைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்டான் சரவணன். பரிதாபம் தொனித்துவிடக்கூடாது என்று ரொம்பவும் மெனக்கெட்டுக் கொண்டிருந்த சரவணனை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தேன் அன்று.

அது தொடங்கி தொடர்ந்து சில மாதங்கள் நேரிலும் ஃபோனிலும் தொடர்பிலிருந்தான். யாரும் என்னிடம் கேட்காத, கேட்க விரும்பாதவற்றைக் கேட்பவன் அவன். அவன் என்பதாலேயே சொல்ல விரும்பாத பலவும் சொல்லியிருந்திருக்கிறேன் நான். சொல்லப்போனால் நாளது வரையில் நினைவு வைத்துக்கொள்ளத் தகுதியான என் வாழ்நாட்கள் அவை தான்.

“நீ ஏன் இப்பிடி ஆசைப்படணும்” என்றான் ஒருநாள்.

“எப்படி”

“சேல கட்டணும்னு… பொம்பளையா இருக்கணும்னு”

“உனக்கு சேலை கட்டி ரோட்டுல நடக்க விட்டா என்ன பண்ணுவ உனக்கு எப்பிடி இருக்கும்”

“ரொம்ப அசிங்கமா இருக்கும்அவுத்து போட்டுருவேன்” என்றான் சட்டென்று.

”எனக்கும் பேண்ட் சர்ட் போடும்போது அப்பிடிதான் இருக்கு.. ஆனா அவுத்து போட்டுர முடியாது”

“…..”
அனேகமாய் சரவணனுடனான உரையாடல்கள் அவனது மெளனத்தோடே தான் முடிவு பெற்றிருக்கின்றன.

“தங்கச்சிக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டா போதும்ல” என்றான்.

“ம்ம் பின்ன.. அதுக்குதான பல்லக் கடிச்சுட்டு இருக்கேன்”

“எங்க போவ அப்பறம்”

“இங்கதான் இருப்பேன்… ஆனா இப்படி இருக்க மாட்டேன்”

“எல்லாரும் ஒரு…”

“எல்லாரும் இப்பவும் அப்பிடிதான் பாக்கறாங்க சரவணா”
கடைசியாய் ஒரு நாள்…

”நேத்து நைட்டு உங்க ஊர் மாரியம்மன் கோயில்ல பூச்சாட்டுங்களே அங்க வந்திருந்தியா”
தீர்க்கமாகக் கேட்கிறான். சரிதான்…. பார்த்துவிட்டான்! என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன்.

“சேலை கட்டிட்டு ஸ்டேஜ்ல…. அது நீதான…”

”ஆமா”

“எதுக்கு அப்பிடி அங்க போயி ஆடுற”

”எனக்கு பிடிச்சிருக்கு போறேன்”

அவன் மார்பையே பார்த்துக்கொண்டிருந்தான்…

அவன் கையைப் பிடித்து என் நெஞ்சில் வைத்தேன். கையெல்லாம் நாடி ஓடியது போல் துடித்தது அவனுக்கு. மெல்ல விடுவித்துக்கொள்ள முயன்றான். நான் அழுத்திப்பிடித்தேன். எனக்குள் இல்லாத ஊற்றிலெல்லாம் அரூப நீர் சுரந்துகொண்டிருந்தது. கையை உதறிவிட்டுச் சென்றான்.
அதுவரை அவனுக்குத் தெரியாத விசயம் அது. அதோடு சரி அதன்பிறகு தவிர்க்கத் தொடங்கிவிட்டான். வலியச் சென்று சங்கடப்படுத்தவும் விருப்பமில்லாததால் நானும் விலகிவிட்டேன்.
இரவுகளை அரித்துக்கொண்டிருந்தான் அதற்கடுத்த பல நாட்களில்; அவனாக வந்தெனைப் புணர்வதற்குண்டான அத்தனை சாத்தியங்களையும் கதைகளாய் விரித்துக்கொண்டிருந்தது மனது. நிச்சயமாய்த் தெரிந்தே இருந்தேன், அவன் எனைக் கருதி ஒரு இம்மியும் யோசித்திருக்க வாய்ப்பில்லை அப்போது.

இந்த நிராகரிப்புகள் எனை நொறுக்கிவிடாதிருந்தமைக்குக் காரணம் நினைவும் நிராகரிப்பும் தருவது இவன் மட்டும் இல்லை என்பதும் இது முதன்முறை இல்லை  என்பதுமே. இதோ நான்கு வருடங்கள் கழித்து அவனைப் பார்த்துவிட்டுத் திரும்புவதாய்த் தோன்றுவது கூட பிரமை போல் தான் இருக்கிறது.
மொபைல் மிளிர்ந்தது


Message from Saravanan         Sorry for everything……


rajan@rajanleaks.com