Tuesday, September 24, 2013

அறிதுயில்

‘இதுல்லாம் நீங்க நாட்டாம பண்டாதீங்க... டிக்கெட்டு நீங்க எடுக்கறாப்டினா பேசுங்க’  இரைந்தான் கண்டக்டர்.

 அந்தப்பெரியவர் வாயை மூடிக்கொண்டார்.

படிக்கட்டின் ஓரமாக ஒண்டிக்கொண்டாள் அவள். கூட்டம் நெம்பித்தள்ளியது பஸ்ஸில். அந்தக்காசு செல்லாது என்பதைத் தவிர அவன் என்ன சொல்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.திரும்பப் பேச எதுவுமில்லை. பேசினாலும் அவனுக்குப் புரியப்போவதில்லை.  கர்நாடகம் செல்லும் பஸ் அது. ஒரு கடையில் 91 ரூபாய் சில்லறைக்காசுகளைக் கொடுத்து 100 ரூபாய் நோட்டாக வாங்கியிருந்தாள். கடைக்காரன் கொடுத்த நோட்டில் வலது ஓரம் காந்தி காது வரை வெட்டுப்பட்டு இருந்தது. இவளுக்கென்ன தெரியும் வாங்கிக்கொண்டு பஸ் ஏறிவிட்டாள்.  கண்டக்டர் வருவதற்குள் அரைமணிக்கும் மேலாகிவிட அடுத்த ஊரே வந்துவிட்டது.
  
 “இவுளுகளுக்கா ஒண்ணுந்தெரியாது? உட்டா இவளுக விக்கறதுக்கு இந்த ஊரும் பத்தாது பக்கத்தூரும் பத்தாது...”

குழந்தை அழத்தொடங்கியது. அதுவரை அடக்கிக் கொண்டிருந்தவளுக்கும் கண்ணீர் பீறிட்டது. வசவொன்றும் புதிதல்ல. ஆனால் ஏமாந்த ரூபாயோ ஏழெட்டுநாள் சேமிப்பு. முடிந்தது; இனி யாரிடம் நோவதென்று புரியவில்லை. 

 “ புள்ளையோட இருக்குதுப்பா ராத்திரில எறக்கி உடுற”

 “ புள்ள  சாக்காக்கும்.. தெனம் பாத்துட்டு தான இருக்கறோம்’’

பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது அதற்குள். 

 ‘‘எறங்குடி மொதல்ல..’’

கிழிந்த காசையாவது திரும்ப வாங்கலாம் என்ற எண்ணத்தில் அவன் குரல் சம்மட்டியாய் இறங்கியது.  பிள்ளை தேள் கொட்டினாற்போல அழுது அரற்றிக் கொண்டிருந்தான்; இனி பயனில்லை.  இறங்கிவிட்டாள்.

ரேரேரேரே.... நெஞ்சில் சாய்த்துக் கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்தவாறே நடந்தாள்.

வெளிக்காற்று பட்டபிறகு கொஞ்சம் அழுகையை நிறுத்தியிருந்தது குழந்தை. ஒன்றரை வயதிருக்கும் அதற்கு. அங்கொன்றும் இங்கொன்றுமாக மயிர். ஏகதேசம் வழுக்கை. சளியையும் பூலையையும் துடைத்துவிட்டு நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு நடந்தாள் பஸ் ஸ்டாண்டுக்குள்.  மீறிப்போனால் 17 வயதிருக்கலாம் அவளுக்கு. ஒடிசலான உடல், உடலுக்கு மீறிய மார்புகள். சிக்கேறிய செம்பட்டைநிற மயிரும் சிவந்த தேகமுமாய் அந்த ஊருக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத உருவம். குழந்தையின் அழுகை தேம்பலாகி கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்பட்டிருந்தது.

அது பஸ் ஸ்டாண்டின் வாயிற்புறம். உள்ளுக்குள் நடந்து கொஞ்ச தூரம் தள்ளிப்போய் பையிலிருந்த  கம்பளியை விரித்து குழந்தையை உட்கார வைத்தாள். சிறிய குப்பியிலிருந்து எண்ணெயை எடுத்து அவனது தொப்புளில் விட்டு நீவினாள். சிரித்தான். மேலே நான்கு கீழே இரண்டு; கறையேறியிருந்தன பற்கள். 

தாவணியை இறுகக் கட்டிக்கொண்டாள். கைமுழவு ஒன்றை எடுத்து அவள் அடிக்கத் தொடங்கவும் சிறுவன் எழுந்தான். அழுக்கேறிய ஒரு கீழாடை, கையிலும் கழுத்திலும்  தாயத்துகளுடன் இரண்டடி உருவம் மந்திரத்துக்கு மயங்கினாற் போல ஆடத்தொடங்கியது. அந்நேரத்திலும் பேருந்துக்கு நிற்பவர்களில் சிலர் அங்கு சூழத் தொடங்கினர்.  அவளுக்கு பசி வயிற்றைப் பிசைந்தது. பசியின் வெறி முழவில் இறங்கியது.  

சில நொடிகளில் சரசரவென மழை அடித்துப் பெய்யத்தொடங்கவும் கூட்டம் சிதறியது. முழவை நிறுத்தவில்லை; ஊசிபோல் முகத்தில் குத்தியது துளி ஒவ்வொன்றும். ஒரு காசும் விழுந்திருக்கவில்லை.  குழந்தை ஓடிவந்து காலைக்கட்டிக்கொண்டு நின்றது. முழவை நிறுத்தினாள். நெஞ்சு விம்ம மூச்சு வாங்கியது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாய் மூட்டையைக் கட்டினாள். நடை மேடையை நோக்கி ஓடத்தொடங்கினாள். அங்கிருந்த கடைகள் அவசர அவசரமாக சாத்தப்பட்டுக்கொண்டிருந்தன. 

தூணொன்றின் ஓரம் சேர்ந்தாள். கம்பளியால் குழந்தையைத் துவட்டிவிட்டுத் தானும் துடைத்துக்கொண்டு சாய்ந்து  அமர்ந்ததும் வயிற்றைத் தொட்டுக்காட்டி ‘இதிதி..’ என்றது குழந்தை. ரவிக்கையை விலக்கி முலையை இரு விரலிடுக்கில் பிடித்து குழந்தையின் வாயில் திணித்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். சில நிமிடங்களில் அப்படியே தூங்கிப்போனது குழந்தை. காலியானது பஸ் ஸ்டாண்ட். வாயிலோரம் இருந்த ஒரு டீக்கடையில் மட்டும் ஆள் நடமாட்டம் இருந்தது. 

எதிரில் ஒரு சிமெண்டு பெஞ்சில் இவளை நோக்கித்தலையைச் சாய்த்தபடி பக்கவாட்டில் படுத்திருந்த உருவத்தைக் கவனித்தாள். அதன்  விழிகள் அவள் மார்பில் நிலை குத்தியிருந்தன. தாவணியால் மாரை மூடி  பிள்ளையின் வாயிலிருந்து முலையை எடுத்துவிட்டு ரவிக்கையை இழுத்துவிட்டுக்கொண்டாள். மார் தெரிய கூட்டத்தில் குதித்தாடக் கூச்சமில்லை தான் என்றாலும் இப்போது எதுவோ பிடுங்கித்தின்றது அவளை.

இன்னும் பார்வையை நகர்த்தவில்லை அவன். கிழவன் தான்; கரிய உருவம். தோல் சுருங்கி எலும்போடு ஒட்டிப்போயிருந்தது.தலைமாட்டில் ஒரு துணிப்பை வாயைத் திறந்திருந்தது; அதன் மேல்  கும்பிட்டவாறு கைகளைச் சேர்த்து வைத்து, தலைக்குக் கொடுத்துப் படுத்திருந்தான். லுங்கியின் ஒரு ஓரம் பெஞ்சுக்கு கீழே தொங்கிக்கொண்டிருக்க சுருங்கிய ஆண்குறியைக் காட்டிக்கொண்டு படுத்திருந்தான். காணச்சகியவில்லை அவளுக்கு. இருந்தும் நிமிடத்திற்கொரு முறை அவன் பக்கம் பார்வையைச் செலுத்தாமலிருக்க முடியவில்லை அவளால்.அன்றைய நாளின் அத்தனை வெறுப்பையும் அவன் மேல் உமிழ்ந்து கொண்டிருந்தது அவள் விழிகள். நேரம் கரைந்து கொண்டிருந்தது. உறங்குகிறானோ?அவனிடம் அசைவே இல்லை.  உற்று நோக்கினாள், அவனது துணிப்பையிலிருந்த வாழைப்பழச்சீப்பு விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்தது.

பிள்ளையை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து அவனை நெருங்கினாள். கண்களில் புரையோடியிருந்தது அவனுக்கு. கைத்தடியின் வளைவை துணிப்பையின் காதில் விட்டு சுற்றுப்போட்டிருந்தான்.   சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆளரவமேதும் இல்லை.  ஒரே ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு சீப்பை வைத்துவிடவேண்டும்... கேட்டே விடலாம் புரியுமா?.... அவனுக்கு கண் தெரியாதோ?... குழம்பித் தவித்தாள்.

ஏனோ திருட்டை விட பிச்சை மானக்கேடாய்த் தோன்றியது அவளுக்கு. அவனிருந்த கோலத்தில் எழுப்புவதற்கும் மனம் வரவில்லை. வியர்வை முடையும் பால்வாசமும் சேர்ந்து தன் உடலிலிருந்து வீச்சமெடுத்தது வேறு அவளுக்கு பயத்தை உண்டுபண்ணியது. எழுந்துவிட்டானென்றால்? பயமுறுத்தியது மனம். கேட்டு மறுத்துவிட்டாலும் அதே நிலைதான் என்று பதிலும் சொல்லிக்கொண்டது.

பேருந்து ஒன்று வரும் ஒலி கேட்டது. இனி தாமதிக்க நேரமில்லை. பிணம்போல் கிடந்தான் அவன். அருகில் நெருங்கி பழச்சீப்பை எடுக்கப்புகவும் பஸ் உள்ளே நுழைந்து சுற்றிக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. நெஞ்சு படபடத்தது அவளுக்கு. அடுத்த நொடி எடுத்தே விட்டாள்; நினைவு சூன்யமானது. ஓடத்தொடங்கினாள்; தூணோரம் இருந்த பையைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தின் வாசலை நோக்கி ஓடினாள். குழந்தை விழித்துக்கொண்டு அழுதது. திரும்பிப் பார்க்காமல் ஓடி சாலையை அடைந்து இடப்புறம் திரும்பி மறைந்து போனாள்.

அவள் காலடியோசை தூரம் போனதை உணர்ந்ததும் லுங்கியை இழுத்து மூடிக்கொண்டு உறங்கினான் அவன்.


rajan@rajanleaks.com