Saturday, May 11, 2013

அப்பா...


துருவேறிக்கிடந்த பழைய ட்ரங்குப் பெட்டியொன்றை பரணிலிருந்து இறக்கித் துழாவிக் கொண்டிருந்த போது அப்பாவின் எச்எம்டி ஒன்று அகப்பட்டது. டயல் மின்னல் பாய்ந்தது போல் சில்லு சில்லாய். அப்பாவின் பதின்ம வயதில் எடுத்த புகைப்படங்கள் ஒரு பையிலிருந்து கொட்டின. பெல்ஸ் தெரிய வேண்டுமென்பதற்காகவே ஃபுல் சைஸில் எடுக்கப்பட்டவை அவை. கோடு போட்டாற்போல் மீசையுடன் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள். அதனுடன் அந்தக்காலத்து லைசன்ஸ் அட்டை. எல்லாவற்றுக்கும் அடியில் நைந்து போன அந்த கரை வேஷ்டி கிடைத்தது. அதுவும் அப்பாவினுடையது தான். எனக்குத் தெரிய அதுபோல இரண்டு வேஷ்டிகள் வைத்திருப்பார் அப்பா. வேலைக்குப் போவது தவிர்த்து வேறெங்கு செல்வதானாலும் வேஷ்டி தான். அழுக்கேறிய வேஷ்டி. அடிப்பக்கம் அழுக்கேறினால் அதை இடுப்புக்கு வைத்து அழுக்கு குறைந்ததும் கசங்கியதுமான பக்கத்தை கீழ்ப்புறம் வைத்துக் கட்டிக் கொள்வார் அப்பா.

லேத்தில் வேலை செய்ய காக்கி பேண்ட், அதில் காக்கியைத் தேடவேண்டும் கறுப்புக்கு நடுவில். சின்னதும் பெரியதுமாகக் கட்டம்போட்ட சட்டைகள் நான்கு இருந்திருக்கலாம். வேஷ்டி கட்டும் போது போடுவதற்கென்றே வெள்ளைச் சட்டைகள் இரண்டு. எடுக்கும் போது என்ன நிறமிருக்கிறதோ அந்தப் பெயரே கடைசி வரை தங்கிவிடும் அப்பாவின் உடைகளுக்கு.

அப்பா வேஷ்டி கட்டினால் எனக்கு அவ்வளவு இஷ்டம். அதில் இருக்கும் கரை களின் மேல் அலாதி பிரியம். அப்படியும் முழுமையாகச் சொல்லமுடியாது. அதிலிருக்கும் கறுப்புக் கரை மேல் பிரியம். சிவப்பு ஏனோ கண்களை உறுத்துவதாகத் தோன்றும் எனக்கு. வேஷ்டி அணிந்தால் மொந்தமாக ஒரு துண்டு ஒன்றை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்வார் அப்பா. அதிலும் அதே இரண்டு வர்ணக் கரைகள் உண்டு வேஷ்டியின் கரையைவிட இன்னும் சற்று பெரியதாக. அழுக்கு வெள்ளை உடைதான் என்றாலும் அப்பாவை அதில் பார்க்கத்தான் எனக்கு சந்தோசமாயிருந்திருக்கிறது. வெளியே கூட்டிப்போக மறுத்தாலும் தெருமுனை வரையாவது அப்பாவின் மணிக்கட்டைப் பிடித்துத் தொங்கியபடியே சென்று திரும்புவதுண்டு.

அப்படித்தான் ஒருநாள்… டவுசர் போட்டுத்திரிந்த நாட்கள். அரைப்பரிச்சை முடிந்த 12 நாள் லீவின் முதல் நாள் . வழக்கமாக முன்பெல்லாம் ஸ்கூல் விட்டு வந்தால் நீல டவுசரையும் வெள்ளைச் சட்டையையும் உருவி விட்டு வேறு உடை போடச் சொல்லிவிடுவாள் அம்மா. கொஞ்ச நாளாய் அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை. தினமும் நான்கைந்து பேரிடமாவது சொல்லிச் சொல்லி பழக்கமாகிவிட்டது இதை. ’அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை’. நானாகச் சொல்லமாட்டேன். டீச்சர்கள் சட்டையின் அழுக்கு பற்றி கேட்டாலும், முக்குக் கடைக்காரன் மீதி தொகை கேட்டாலும், பையன்கள் விளையாட வரச்சொல்லிக் கேட்டாலும் இதையேதான் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறேன். ’அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை’.
உடம்புக்கு என்ன என்று கேட்டால் எனக்குச் சொல்லத்தெரியாது. 

உண்மையில் அம்மா உடம்புக்கு என்னவென்று எனக்கே தெரியாது. நாள் முழுவதும் படுத்துக்கொண்டிருக்கிறாள் எப்போது சாப்பிடுகிறாள் குளிக்கிறாள் எதுவும் தெரியாது. நான் பார்க்கும் போதெல்லாம் சுவற்றுக்கு முகத்தைக் காட்டி கேள்விக்குறி போல் சுருண்டு படுத்திருக்கிறாள். எனக்கு அவள் சோறு ஊட்டி விட்டு மாதக்கணக்காகி விட்டது. என்னோடு விளையாடுவதில்லை. பாடம் படிக்கச் சொல்லுவதில்லை. உடைமாற்றச் சொல்வதில்லை. திட்டுவதுமில்லை. நானும் அவளிடம் ஏனென்று கேட்கிறதுமில்லை.

முன் போல் இருந்தன இரவுகள் மட்டும் தான். தினமும் இரவில் அம்மாவோடு படுத்துக் கொள்வேன். தட்டிக்கொடுப்பாள். தலையை வருடுவாள். அம்மாவின் காதுக்கு பின்னால் ஒரு கற்றை முடியைப் பிடித்துக்கொண்டு ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டே தூங்கிப் போவேன்.

அப்பா காலையிலும் இரவிலும் அம்மாவுக்குக் கஞ்சி வைத்துக் கொடுப்பார். எனக்கு காலையில் இட்லி வாங்கக் காசுகொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார். இரவில் லேத்துக்கு வரச்சொல்லி அங்கேயே எதாவது வாங்கிக் கொடுத்துக் கூட்டி வருவார்.
வீட்டை இரண்டாய்ப் பிரிப்பது போல் ஒரு கொடி தொங்கும். கொடியே தெரியாத அளவுக்கு மூன்று பேருடைய ஆடைகளும் அதில்தான் தொங்கும். அன்றைக்கு காலையில் அந்தக் கொடியிலிருந்து கரை வேஷ்டியை உருவினார் அப்பா. எனக்கு ஆர்வம் கூடிக்கொண்டது. அம்மாவின் காதில் போய் கிசுகிசுத்தேன்.
’ம்மா அப்பா கட்சி ஆப்பீஸ்க்கு போகுதாம்மா என்னையும் கூட்டிப்போகச்சொல்லும்மா’

அம்மா நெளிந்துவிட்டு படுத்துக்கொண்டாள். உண்மையில் அப்பா கட்சி ஆபீஸுக்கு போவதென்றால் என்னைக் கூட்டிப்போக மாட்டார். கல்யாண மண்டபங்களில் நடக்கும் கூட்டங்களுக்குத்தான் கூட்டிப்போவார். அங்கேயும் மதியம் வரைதான் என்னைக் கூட வைத்துக் கொள்வார். சாப்பாட்டு நேரமானதும் சாப்பாட்டுப் பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.
’சட்டையப் போடுடா நீயும் வருவியாம்’ என்றது மெதுவாய் ஒரு குரல் பின்னாலிருந்து.
அப்பா என்னையும் கூட்டிப்போவதாகச் சொல்லிவிட்டார். சட்டையை உருவிக்கொண்டேன் கொடியிலிருந்து. இன்னும் சில கந்தல்களும் சேர்ந்தே விழுந்தன. பட்டன்கள் இரண்டு இருந்தன. அதை மட்டும் போட்டுக்கொண்டேன். அம்மா கழுத்தில் மஞ்சக்கயிறில் கோர்த்திருந்த பின் ஊசிகள் இரண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வெளியே தாவினேன். அப்பாவின் தோல் செருப்புகளைக் காணவில்லை. தெருவில் நின்று பீடியைப் பற்றவைத்துக் கொண்டிருந்தார். அம்மாவைப்பார்த்தேன் அவள் விழித்திருப்பதாய்த் தோன்றவில்லை. தடுக்குக் கதவை மூடினாற்போல் வைத்துவிட்டு ஓடினேன்.

அப்பா கையை நீட்டினார். பின்னூசிகளைக் கொடுத்தேன்.. முட்டி போட்டு உக்கார்ந்தார் எனக்கெதிரில்.  பீடியை உதட்டில் கவ்விக் கொண்டு சட்டையின் பட்டன் பிய்ந்த இடத்தையும் பின் பக்க பட்டியையும் சேர்த்துப்பிடித்து உட்புறமாக பின்னூசியை விட்டு மாட்டிவிட்டார். சட்டைக்குள் கீழிருந்து அப்பாவின் கை நுழைந்ததில் கிச்சு கிச்சு மூட்டினாற் போலிருந்தது. கூச்சத்தில் சிரித்தேன். பீடியின் புகை முகங்களுக்கிடையில் நிறைந்திருந்தது. நான் சிரித்தை அவர் பார்த்தாரா தெரியவில்லை. இரண்டு பின்னூசிகளையும் குத்திவிட்டு தனது பாக்கெட்டிலிருந்து 5 ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
’3 இட்லி வாங்கிக் கொண்டு போய் அம்மா கிட்ட வெச்சிட்டு வா’ என்றார். இரண்டு வீடு தள்ளித்தான் கடை இருந்தது. வாங்கிக்கொண்டு திரும்பினேன். அப்பா அங்கேயே நின்று அடுத்த பீடியைப் பற்றவைத்துக்கொண்டிருந்தார்.

‘அப்பா மீதிக்காசு குடுக்கலப்பா.. கேட்டா மொறைக்கறாம்ப்பா’
‘சரி நீ போயி அம்மாட்ட வெச்சுட்டு வந்துடு’
நான்போய் அம்மா தலை மாட்டில் அந்தப் பொட்டலத்தை வைத்துவிட்டு ஓடிவந்து அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு நடக்கத்தொடங்கினேன்.
‘நாம சாப்பிடலாம்ப்பா’
அப்பா சட்டென்று நின்றுவிட்டார். எதிரிலிருந்த சைக்கிள் கடைக்குப் போனார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். வாடகைக்கு சைக்கிள் எடுக்கக் காசு கொடுப்பார் முன்பெல்லாம். 7ம் நம்பர் சைக்கிள் எனக்குச் சரியாக இருக்கும். சிவப்பு நிற சைக்கிள். சைக்கிள் ஓட்டி வெகு நாட்களாகிவிட்டன. அப்பா சைக்கிள் கடையிலிருந்து வந்து என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.

மளிகைக் கடையில் இரண்டு பழங்கள் வாங்கி என் கையில் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு கடைப்பெண்ணிடம் ஒரு சொம்பில் தண்ணி வாங்கிக் குடித்தார். மீதமிருந்ததை எனக்காக கையில் வைத்து நின்றார்.
அப்பா காத்திருக்கிறார் என்றாலும் வேகமாக விழுங்கமுடியவில்லை. நல்ல பசி. காலையில் மட்டும் தான் பசி தெரிகிறது. மதியமும் இரவும் பசி என்ற நினைப்பே இருப்பதில்லை. மேலண்ணத்தில் பிசுபிசுபாய் ஒட்டிக்கொண்டது வாழைப்பழம். தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு எழுந்தேன். மீண்டும் நடக்கத் தொடங்கினோம்.

பள்ளிக்கூடத்தைத் தாண்டி மாரியம்மன் கோயில் முக்கைத்திரும்பினால் கட்சி ஆபீஸ். நிறையக் கூட்டமிருந்தது. மாரியம்மன் கோயில் வாசலில் உட்கார வைத்துவிட்டு அப்பா கூட்டத்திற்குள் கலந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பின் கார்கள் கிளம்பின. அப்பா கூட்டத்திலிருந்து ஓடி வந்து என்னைத் தூக்கிக் கொண்டு அப்போதுதான் கிளம்பிய டெம்போவை மறித்து ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார். டெம்போவில் நிறையப் பேர் நின்றுகொண்டிருந்தோம். அப்பா போலவே வேஷ்டி கட்டியிருந்தார்கள் எல்லோரும். என்னை யாரும் எதுவும் கேட்கவே இல்லை. என்ன படிக்கறனு ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கேட்கும் மீசைக்கார மாமாவையும் காணவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றேன் எல்லாக் கடைகளும் சரசரவெனப் பின்னால் சென்றன எங்களை விட்டு.

டெம்போ நின்ற இடம் புதிதாக இருந்தது எனக்கு. கோர்ட் இருந்தது அந்த வளாகத்தில். போலீஸ் ஸ்டேசனும் இன்னும் நிறைய கவர்மெண்ட் ஆபீஸ்களுமாய் இருந்தது. எல்லோரும் இறங்கினார்கள். அப்பா முதலில் டெம்போவிலிருந்து குதித்தார் பின்னர் என் இடுப்பைப் பிடித்து தூக்கி கீழே வைத்தார்.
ஒரு வேன் பூவரச மரத்தடியில் நின்றது. அதற்கு அருகில் கூட்டிப்போனார் அப்பா. உள்ளே எட்டிப்பார்த்தேன். நிறைய பொட்டலங்கள். தக்காளி சோறாப்பா என்றேன் அப்பாவிடம். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. இப்படித்தான் அப்பா நான் கேட்பவை பலவற்றிற்கு ஒன்றுமே சொல்ல மாட்டார்.
சாப்பாட்டு வேனின் நிழல் விழுந்த பக்கம் ஒரு கல்லை உருட்டிப் போட்டு என்னை உக்காரச் சொன்னார். உருட்டிப்போட்டதில் சேறான பக்கம் மேலே வந்து விட்டது. என் டவுசரில் சேறாகிவிட்டது. கொஞ்சம் காய்ந்த சேறுதான்; ஜல்லிக் கல் ஒன்றை எடுத்து சுரண்டி சுரண்டி எடுத்தேன். அப்பா இங்கேயே இரு என்பதாகக் கையமர்த்திச் சைகை செய்துவிட்டு கூட்டத்துக்குள் மீண்டும் புகுந்து கொண்டார்.

டீவிஎஸ் 50 ஒன்று வந்து அருகில் நின்றது. அதற்குப் பின் பக்கம் மட்டுமே மூன்று சக்கரங்கள். காலே ஊனத்தேவையில்லை. சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம் போலிருந்தது. எனக்கு டீவிஎஸ் 50 ஓட்டிப்பழகவேண்டும் என்று ஆசை. பெரிய சைக்கிள் அதுவும் தண்டு வைத்த சைக்கிள் என்றால்தான் குரங்கு பெடல். சின்ன சைக்கிளெல்லாம் சீட்டிலேயே உக்கார்ந்து ஓட்டமுடியும் அப்போது என்னால்.
அதிலிருந்த அண்ணன் கருப்பாக இருந்தது. ரொம்பக் கருப்பு. நான் அவ்வளவு கருப்பான ஆளைப் பார்த்ததே இல்லை. இடுப்பு வரை குண்டாகவும் இடுப்புக்குக் கீழே தொடை காலெல்லாம் சின்னதாக சூப்பிப்போயும் இருந்தன. ஒரு ரவுண்டு ஓட்டிப்பழக்கி விடச் சொல்லி கேட்கலாம் என்று நினைத்து பேசாமல் இருந்து கொண்டேன்.
பைக்குள் இருந்து ஒரு பரிட்சை அட்டையும் பேப்பர்களும் பேனாவும் எடுத்து கொண்டு ஒரு மூங்கில் தடியைப் பிடித்து இறங்கி இன்னொரு கல்லின் மேல் உட்கார்ந்தது அந்த அண்ணன்.
நான் அதையே பார்த்துக்கொண்டிருந்ததால் அந்த அண்ணன் என்னைப்பார்த்து ரொம்பவும் முறைத்தது நான் குனிந்து கொண்டேன். மீண்டும் பார்த்தபோது சிரித்துக் கொண்டிருந்தது. கிட்ட வா என்றது மெதுவாக.
அருகில் போய் நின்றேன்.
உன் பேர் என்ன என்றது அந்த அண்ணன்.
சொன்னேன்.
நான் அது பேரை கேட்கவில்லை.  ’என் பேரு என்னதெரியுமா’ என்று கேட்டது தலையசைத்தேன் குறுக்காக.
‘ம்ம்??’
‘தெரியாது’
அந்த அண்ணனுக்கு ஒரு கண் மாறுகண்ணாக இருந்தது. கொஞ்சம் தள்ளி வெறும் மண்ணைப் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசுவது போலிருந்தது
’எதுக்கு இந்த பேப்பர்’? என்றேன்.
’எழுதத்தெரியாதவங்கல்லாம் வருவாங்கல்ல. அவங்களுக்காக மனு எழுதிக்குடுக்க’
‘காசு குடுப்பாங்களா’
‘ம்ம்ம்’
’மனுன்னா என்ன லெட்டரா’
‘ம்ம்ம் ஆமா’
என்றுவிட்டு ‘நீ எதுக்கு வந்தே’ என்றது
’அப்பா கூட.. அப்பா உள்ள போயிருக்கார்… ஆமா உள்ள என்ன நடக்குது எதுக்கு கூட்டமா இருக்கு’
‘எலக்சன்ல நிக்கறதுக்கு இன்னைக்கு பேர் குடுப்பாங்க அதுக்குதான்.’
’ அப்பா கூட எலக்சன்ல ஓட்டு போடுவார்’ என்றேன்.
‘யாருக்கு’
‘அவருக்கு’ என்றேன் சுவரிலிருந்த போஸ்டர் ஒன்றைக் காட்டி. அதில் சிரித்துக் கொண்டிருந்த ஆளை அப்பா அண்ணன்னு கூப்பிடுவார். அவர் தான் அப்பா கட்சிக்கு தலைவர்னு நினைச்சுட்டு இருந்தேன் முதலில். அப்புறம் ஒருநாள் அப்பா சொன்னார் அவர் எங்க ஊருக்கு மட்டும் தலைவராம் எல்லா ஊருக்கும் தலைவர் இன்னொருத்தர் இருக்காராம் என்று.
’ம்ம் அவருதான் இப்ப எலக்சன்ல நிக்கப்போறாரு.. பேர் குடுக்கறதுக்காக எல்லாரும் வந்துருக்காங்க… உங்கப்பா கட்சில இருக்காரா?’
‘ம்ம்ம் ஆமாம் கட்சில இருக்காரு ரொம்ப நாளா இருக்காரு’
அந்த அண்ணன் ஒன்றும் பேசவில்லை. கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த அண்ணனிடம் சில கிழவிகள் வந்து பேர் ஊரெல்லாம் ஒப்பித்து ஒரு பேப்பரில் எழுதி வாங்கிப் போய்க்கொண்டிருந்தனர்.
வெயில் நான் உட்கார்ந்திருந்த இடத்தைத் தொடத்தொடங்கியது. எழுந்து போய் நின்றுகொண்டேன் நிழலில். கூட்டத்தைப் பிளந்துகொண்டு  வெளியே வந்தார். ஒருவர். அப்பா ஓட்டுப்போடும் தலைவர். ஒரு கார் அவருக்கு அருகில் போய் நின்றது. ஏறிக்கொண்டார். கூட்டம் காரைச் சூழந்துகொண்டது. கூச்சலில் ஒன்றும் விளங்கவில்லை. அந்தக்கார் மெதுவாகக் கிளம்பத்தொடங்கியது. அவசர அவசரமாக சிலர் ஓடினர் கார்களிடம். இன்னும் சில கார்களும் தலைவரின் காரின் பின்னே சென்று காம்பவுண்டை விட்டு வெளியேறத் தொடங்கின. சாப்பாட்டு வேனையும் எடுக்க ஒருத்தன் வந்தான். அப்பா வேக வேகமாக என்னிடம் வந்து என்னைப்பிடித்து இடுப்போடு சேர்த்து நிற்க வைத்துக் கொண்டார். சாப்பாட்டு வேனும் கிளம்பியது.  சில டெம்போக்கள் மட்டும் நின்றன. 
எங்களைப்போலவே,டெம்போக்களில் வந்தவர்களெல்லாம் பூவரச நிழலில் ஒதுங்கினர். நான் ஒவ்வொருவராக எண்ணத்தொடங்கினேன். எல்லோரும் அப்பாவிடம் கூச்சலிட்டார்கள். அப்பா அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

கடைசியாகப் புறப்பட்ட கார் மரத்தினருகே வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆள் இறங்கினார். அப்பாவின்  தலைவர் போலவே இருந்தார். ஆனால் இவர் வேஷ்டி அல்ல பேண்ட் போட்டிருந்தார். அவரது விரல் ஒன்றில் கலர் கலராக கல்வைத்த மோதிரம் இருந்தது. கல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். கை போன பக்கமெல்லாம் என் கண்ணும் போனது. ரொம்பப் பெரிய மோதிரம். நானென்றால் மூன்று விரல்களை விடலாம் அதில்.
‘தலைவரே 3 டெம்போங்க எப்பிடியும் 100 பேர் இருப்போம்ங்க’ என்றார் அப்பா
அப்பாவின் தொடையைச்சுரண்டி ‘107 பேருப்பா’ என்றேன். அப்பா ஒன்றும் சொல்லவில்லை
‘அட நாமினேசன் பண்றது தான்யா இன்னைக்கி வேணாம்ன்றாங்க… நாளைக்கோ நாளைன்னைக்கோ மறுபடி வந்து பண்ணிக்கலாம்’ என்றார் காரிலிந்து இறங்கியவர்
‘அது சரிங்க எப்ப வேணாலும் பண்ணிக்கலாம்… இன்னைக்கி வந்ததுக்கு எதாச்சும் கவனிச்சு உடுங்க’
’அண்ணன் ஒண்ணும் சொல்லல. இப்ப கேட்டா நல்லாருக்காது. நீங்க சாப்புட்டு கெளம்புங்க.. சாய்ங்காலம் ஆபீஸ்ல வெச்சு கேட்டுட்டு சொல்றேன்’
‘இப்பிடி சொன்னா எப்பிடிங்க’
‘அட இருக்கற பிரச்சனைல நீங்க வேற ஏன்யா உயிர வாங்கறீங்க சாப்புட்டு கெளம்புங்கய்யா சாய்ந்தரம் பாக்கலாம்’
‘சாப்புடு சாப்புடுன்னா மண்ணையும் கல்லையுமாங்க திங்கறது.. சோத்து பொட்டலம் இருந்த வேன்காரன் என்னமோ அவங்கப்பனூட்டு சொத்து மாதிரி மொத ஆளா கெளம்பிட்டான் இப்ப நாங்க என்னத்த தான் திங்கறதுன்றீங்க… பொழப்பக் கெடுத்துட்டு வந்தமில்லீங்க எங்களச் சொல்லோணும்’
’பேச்சக் கொறச்சுக்க சின்னப்பொன்னா.. இப்ப என்ன இங்க சோத்துக்கா இல்லாமக் கெடக்குது. போ வெளில இருக்கற ஹோட்டலுக்குக் கூட்டியா எல்லாத்தையும் நான் முன்னாடி போறேன்’
எல்லோரும் நடக்கத்தொடங்கினார்கள்.
’தூக்கிக்கிட்டுமாய்யா’
‘வேணாம்ப்பா நடக்குறேன்’
‘செருப்பு போட்டுட்டு வர்றதுக்கென்னய்யா… பொடி சுடுல உனக்கு?’
‘இல்லப்பா’
பொடி சுட்டது ஆனால். அப்பாவின் நிழலில் தேடித்தேடிக் கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன் அப்போதும் சுட்டது. அந்த காம்பவுண்டுக்கு வெளியே ஒரு ஹோட்டல் இருந்தது. ஒரு கிழவன் பணம் வாங்குமிடத்தில் உட்கார்ந்திருந்தார் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் மோதிரக்காரர். அந்தக் கிழவனுக்குப் பின்னால் ஒரு முருகன் படம் இருந்ததைப் பார்த்தேன். அதற்குக் கீழே ஒரு விளக்கு செம்புத்தகட்டிலிருந்து மினுக் மினுக் என ஆரஞ்சு நிறத்தில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. பிரேம் போட்ட கண்ணாடிச்சட்டத்துக்குள் விளக்கு எரிவதைப் பார்த்துக்கொண்டே உள்ளே போனேன். அப்பா கை கழுவுமிடத்திலிருந்து என்னைப் பேர் சொல்லிக்கூப்பிட்டார்.

நான்குபேர் உட்காரக்கூடிய மேசையில் ஒரு சேரில் என்னை உட்கார சொல்லிவிட்டு சப்ளை செய்யும் ஆசாமியைத் தேடினார் அப்பா. நானும் பின்னாலேயே ஓடினேன். எனக்கு பூரி வேண்டுமென்று சொல்வதற்காக. அப்பா என்னைக் கவனிக்கவில்லை. சப்ளை ஆள் சின்ன வயதாக இருந்தான். சாந்தி டீச்சர் பையன் போல. டீச்சர் பையன் 10 வது படிக்கிறான்.
‘தம்பீ சாப்பாடு ஒண்ணு பார்சல் பண்ணீரு தலைவர் பணங்குடுப்பாரு’
‘சாப்புடுங்கண்ணா 100 சாப்பாட்டுக்கு பணம் குடுத்துருக்காப்டி… மீதி இருந்துச்சுண்ணா பார்சல் பண்ணி அத்தனையும் உங்ககிட்டயே குடுத்துடறேன்’
‘அட அதுக்கில்ல… எனக்கு குடுக்கற சாப்பாட பார்சல் பண்ணிரு நான் வீட்டுக்குப் போயி சாப்புட்டுக்கறேன்.’
‘மொதல்ல இருக்கவங்க எத்தனபேருனு  பாக்கறேண்ணா அதுபோக இருந்தா பார்சல் போட்டுத்தரேன். நீங்க மொதல்ல போயி உக்காருங்க’
‘ஆள் 100க்கு மேல இருக்குய்யா நீ என் சாப்பாட்ட பார்சல் பண்ணிடு நான் சொல்லிக்கறேன்’
‘இருங்க அவர்ட்டயே சொல்லிரலாம் வாங்க’
‘ஏய்ய் என்னப்பா நீயி…. சரி போ வேணாம்.’
அப்பா திரும்பினார் பின்னால் நின்றிருந்த என்மீது அவரது முழங்கை யை இடித்துக்கொண்டார்
என் மோவாயில் அடிபட்டது.
 ‘ப்ச்… உன்னைய உக்காரச்சொன்னேன்ல’
அதற்குள் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தது. எங்களைப்போலவே நிறையபேர் ஆங்காங்கே நின்றபடி காத்திருந்தனர்.
‘எல்லாரும் சாப்புட்டுக் கெளம்புங்க சாய்ங்காலம் பாக்கலாம்’ என்றவாறு கிளம்பினார் மோதிரக்காரர்.
அப்பா வேகவேகமாக அவர் பின்னாலேயே சென்று வாசலோடு நின்றுவிட்டார். கார் கிளம்பியதும் திரும்பிவந்தார். கைகழுவ எழுந்து போகத் தொடங்கினர் சிலர். நானும் அப்பாவும் போய் உட்கார்ந்தோம்.
‘அப்பா பூரி வேணும்ப்பா’
‘இந்நேரத்துல பூரி இருக்காது சாப்பாடு சாப்பிடுவியாமாம் சரியா’
நான் ஒன்றும் சொல்லவில்லை.
இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. சாப்பாட்டை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படி இலைநிறைய சாப்பாடும் பொரியல்களுமாய் நான் சாப்பிட்டதில்லை. மேசை வேறு என் கழுத்து உயரத்திற்கு இருந்தது. அப்பா எனக்கு ஊட்டி விடத்தொடங்கினார். அவர் இலையில் இருந்தவை அப்படியே இருந்தன. அம்மாவைப்போல மசியப் பிசைந்து ஊட்டத்தெரியவில்லை அப்பாவுக்கு. வயிறு நிறைந்ததும் போதும் என்றேன். 
‘ஒரு வாய்ப்பா கடசீ வாய்’
‘இல்லப்பா முடியல’

 கடைசியாய் பிசைந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டார். கூஜாவிலிருந்த  தண்ணீரை சட்டையெல்லாம் நனையக் குடித்துவிட்டு தன் இலையை அப்படியே மூடிவிட்டார். அப்பா.