Tuesday, September 24, 2013

அறிதுயில்

‘இதுல்லாம் நீங்க நாட்டாம பண்டாதீங்க... டிக்கெட்டு நீங்க எடுக்கறாப்டினா பேசுங்க’  இரைந்தான் கண்டக்டர்.

 அந்தப்பெரியவர் வாயை மூடிக்கொண்டார்.

படிக்கட்டின் ஓரமாக ஒண்டிக்கொண்டாள் அவள். கூட்டம் நெம்பித்தள்ளியது பஸ்ஸில். அந்தக்காசு செல்லாது என்பதைத் தவிர அவன் என்ன சொல்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை.திரும்பப் பேச எதுவுமில்லை. பேசினாலும் அவனுக்குப் புரியப்போவதில்லை.  கர்நாடகம் செல்லும் பஸ் அது. ஒரு கடையில் 91 ரூபாய் சில்லறைக்காசுகளைக் கொடுத்து 100 ரூபாய் நோட்டாக வாங்கியிருந்தாள். கடைக்காரன் கொடுத்த நோட்டில் வலது ஓரம் காந்தி காது வரை வெட்டுப்பட்டு இருந்தது. இவளுக்கென்ன தெரியும் வாங்கிக்கொண்டு பஸ் ஏறிவிட்டாள்.  கண்டக்டர் வருவதற்குள் அரைமணிக்கும் மேலாகிவிட அடுத்த ஊரே வந்துவிட்டது.
  
 “இவுளுகளுக்கா ஒண்ணுந்தெரியாது? உட்டா இவளுக விக்கறதுக்கு இந்த ஊரும் பத்தாது பக்கத்தூரும் பத்தாது...”

குழந்தை அழத்தொடங்கியது. அதுவரை அடக்கிக் கொண்டிருந்தவளுக்கும் கண்ணீர் பீறிட்டது. வசவொன்றும் புதிதல்ல. ஆனால் ஏமாந்த ரூபாயோ ஏழெட்டுநாள் சேமிப்பு. முடிந்தது; இனி யாரிடம் நோவதென்று புரியவில்லை. 

 “ புள்ளையோட இருக்குதுப்பா ராத்திரில எறக்கி உடுற”

 “ புள்ள  சாக்காக்கும்.. தெனம் பாத்துட்டு தான இருக்கறோம்’’

பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது அதற்குள். 

 ‘‘எறங்குடி மொதல்ல..’’

கிழிந்த காசையாவது திரும்ப வாங்கலாம் என்ற எண்ணத்தில் அவன் குரல் சம்மட்டியாய் இறங்கியது.  பிள்ளை தேள் கொட்டினாற்போல அழுது அரற்றிக் கொண்டிருந்தான்; இனி பயனில்லை.  இறங்கிவிட்டாள்.

ரேரேரேரே.... நெஞ்சில் சாய்த்துக் கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்தவாறே நடந்தாள்.

வெளிக்காற்று பட்டபிறகு கொஞ்சம் அழுகையை நிறுத்தியிருந்தது குழந்தை. ஒன்றரை வயதிருக்கும் அதற்கு. அங்கொன்றும் இங்கொன்றுமாக மயிர். ஏகதேசம் வழுக்கை. சளியையும் பூலையையும் துடைத்துவிட்டு நெஞ்சோடு சாய்த்துக்கொண்டு நடந்தாள் பஸ் ஸ்டாண்டுக்குள்.  மீறிப்போனால் 17 வயதிருக்கலாம் அவளுக்கு. ஒடிசலான உடல், உடலுக்கு மீறிய மார்புகள். சிக்கேறிய செம்பட்டைநிற மயிரும் சிவந்த தேகமுமாய் அந்த ஊருக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத உருவம். குழந்தையின் அழுகை தேம்பலாகி கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்பட்டிருந்தது.

அது பஸ் ஸ்டாண்டின் வாயிற்புறம். உள்ளுக்குள் நடந்து கொஞ்ச தூரம் தள்ளிப்போய் பையிலிருந்த  கம்பளியை விரித்து குழந்தையை உட்கார வைத்தாள். சிறிய குப்பியிலிருந்து எண்ணெயை எடுத்து அவனது தொப்புளில் விட்டு நீவினாள். சிரித்தான். மேலே நான்கு கீழே இரண்டு; கறையேறியிருந்தன பற்கள். 

தாவணியை இறுகக் கட்டிக்கொண்டாள். கைமுழவு ஒன்றை எடுத்து அவள் அடிக்கத் தொடங்கவும் சிறுவன் எழுந்தான். அழுக்கேறிய ஒரு கீழாடை, கையிலும் கழுத்திலும்  தாயத்துகளுடன் இரண்டடி உருவம் மந்திரத்துக்கு மயங்கினாற் போல ஆடத்தொடங்கியது. அந்நேரத்திலும் பேருந்துக்கு நிற்பவர்களில் சிலர் அங்கு சூழத் தொடங்கினர்.  அவளுக்கு பசி வயிற்றைப் பிசைந்தது. பசியின் வெறி முழவில் இறங்கியது.  

சில நொடிகளில் சரசரவென மழை அடித்துப் பெய்யத்தொடங்கவும் கூட்டம் சிதறியது. முழவை நிறுத்தவில்லை; ஊசிபோல் முகத்தில் குத்தியது துளி ஒவ்வொன்றும். ஒரு காசும் விழுந்திருக்கவில்லை.  குழந்தை ஓடிவந்து காலைக்கட்டிக்கொண்டு நின்றது. முழவை நிறுத்தினாள். நெஞ்சு விம்ம மூச்சு வாங்கியது. குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாய் மூட்டையைக் கட்டினாள். நடை மேடையை நோக்கி ஓடத்தொடங்கினாள். அங்கிருந்த கடைகள் அவசர அவசரமாக சாத்தப்பட்டுக்கொண்டிருந்தன. 

தூணொன்றின் ஓரம் சேர்ந்தாள். கம்பளியால் குழந்தையைத் துவட்டிவிட்டுத் தானும் துடைத்துக்கொண்டு சாய்ந்து  அமர்ந்ததும் வயிற்றைத் தொட்டுக்காட்டி ‘இதிதி..’ என்றது குழந்தை. ரவிக்கையை விலக்கி முலையை இரு விரலிடுக்கில் பிடித்து குழந்தையின் வாயில் திணித்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். சில நிமிடங்களில் அப்படியே தூங்கிப்போனது குழந்தை. காலியானது பஸ் ஸ்டாண்ட். வாயிலோரம் இருந்த ஒரு டீக்கடையில் மட்டும் ஆள் நடமாட்டம் இருந்தது. 

எதிரில் ஒரு சிமெண்டு பெஞ்சில் இவளை நோக்கித்தலையைச் சாய்த்தபடி பக்கவாட்டில் படுத்திருந்த உருவத்தைக் கவனித்தாள். அதன்  விழிகள் அவள் மார்பில் நிலை குத்தியிருந்தன. தாவணியால் மாரை மூடி  பிள்ளையின் வாயிலிருந்து முலையை எடுத்துவிட்டு ரவிக்கையை இழுத்துவிட்டுக்கொண்டாள். மார் தெரிய கூட்டத்தில் குதித்தாடக் கூச்சமில்லை தான் என்றாலும் இப்போது எதுவோ பிடுங்கித்தின்றது அவளை.

இன்னும் பார்வையை நகர்த்தவில்லை அவன். கிழவன் தான்; கரிய உருவம். தோல் சுருங்கி எலும்போடு ஒட்டிப்போயிருந்தது.தலைமாட்டில் ஒரு துணிப்பை வாயைத் திறந்திருந்தது; அதன் மேல்  கும்பிட்டவாறு கைகளைச் சேர்த்து வைத்து, தலைக்குக் கொடுத்துப் படுத்திருந்தான். லுங்கியின் ஒரு ஓரம் பெஞ்சுக்கு கீழே தொங்கிக்கொண்டிருக்க சுருங்கிய ஆண்குறியைக் காட்டிக்கொண்டு படுத்திருந்தான். காணச்சகியவில்லை அவளுக்கு. இருந்தும் நிமிடத்திற்கொரு முறை அவன் பக்கம் பார்வையைச் செலுத்தாமலிருக்க முடியவில்லை அவளால்.அன்றைய நாளின் அத்தனை வெறுப்பையும் அவன் மேல் உமிழ்ந்து கொண்டிருந்தது அவள் விழிகள். நேரம் கரைந்து கொண்டிருந்தது. உறங்குகிறானோ?அவனிடம் அசைவே இல்லை.  உற்று நோக்கினாள், அவனது துணிப்பையிலிருந்த வாழைப்பழச்சீப்பு விளிம்பில் தொங்கிக்கொண்டிருந்தது.

பிள்ளையை எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து அவனை நெருங்கினாள். கண்களில் புரையோடியிருந்தது அவனுக்கு. கைத்தடியின் வளைவை துணிப்பையின் காதில் விட்டு சுற்றுப்போட்டிருந்தான்.   சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆளரவமேதும் இல்லை.  ஒரே ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு சீப்பை வைத்துவிடவேண்டும்... கேட்டே விடலாம் புரியுமா?.... அவனுக்கு கண் தெரியாதோ?... குழம்பித் தவித்தாள்.

ஏனோ திருட்டை விட பிச்சை மானக்கேடாய்த் தோன்றியது அவளுக்கு. அவனிருந்த கோலத்தில் எழுப்புவதற்கும் மனம் வரவில்லை. வியர்வை முடையும் பால்வாசமும் சேர்ந்து தன் உடலிலிருந்து வீச்சமெடுத்தது வேறு அவளுக்கு பயத்தை உண்டுபண்ணியது. எழுந்துவிட்டானென்றால்? பயமுறுத்தியது மனம். கேட்டு மறுத்துவிட்டாலும் அதே நிலைதான் என்று பதிலும் சொல்லிக்கொண்டது.

பேருந்து ஒன்று வரும் ஒலி கேட்டது. இனி தாமதிக்க நேரமில்லை. பிணம்போல் கிடந்தான் அவன். அருகில் நெருங்கி பழச்சீப்பை எடுக்கப்புகவும் பஸ் உள்ளே நுழைந்து சுற்றிக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. நெஞ்சு படபடத்தது அவளுக்கு. அடுத்த நொடி எடுத்தே விட்டாள்; நினைவு சூன்யமானது. ஓடத்தொடங்கினாள்; தூணோரம் இருந்த பையைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தின் வாசலை நோக்கி ஓடினாள். குழந்தை விழித்துக்கொண்டு அழுதது. திரும்பிப் பார்க்காமல் ஓடி சாலையை அடைந்து இடப்புறம் திரும்பி மறைந்து போனாள்.

அவள் காலடியோசை தூரம் போனதை உணர்ந்ததும் லுங்கியை இழுத்து மூடிக்கொண்டு உறங்கினான் அவன்.


rajan@rajanleaks.com

Friday, August 30, 2013

ஊமச்சி போசி

பேரென்னவோ வெசாழக்கிழமைச் சந்தைதான். அவளுக்கோ வருசம்       முன்னூத்தி அறுவத்தஞ்சு நாளும் வியாபாரம் உண்டு. சந்தை மேட்டுக்கு பொறவால ஏரி. தண்ணீரெல்லாம் வத்தி வருசக்கணக்காச்சு. ஆக இப்போது ஏரிப்பள்ளம். சந்தைத் திடல் முடிந்து ஏரிக்கு நடக்கும் ஒத்தயடிப்பாதை தொடங்குமிடத்தில் சாலை போட்டு வேலை நடந்தது அவளுக்கு.

உள்ளூர் குடியானவ வலுசல்களுக்கு ஓசிச்சோறு என்றால் ஒரு கிறக்கம். அந்தச் சந்தையில் ஆண்களுக்கு ஆசையான பண்டம் அவள். தொட்டு மை வைத்துக்கொள்ளலாம். அப்படி யொரு மின்னும் கருப்பு. அரை மப்பென்பது போல் மயங்கி நிற்கும் கண் ரெண்டும் . உடம்பு வாகுக்குப் பொருந்தாமல் குத்திட்டு நிற்கும் கனத்த முலைகளை பக்கவாட்டிலிருந்து பார்த்தாலே போதுமாம்.

எல்லாவற்றையும் விட,  படுத்து எழுந்தால் காசு கொடுக்கத்தேவையில்லை. என்னவும் செய்யலாம், இழுத்த இழுப்புக்கு வருவாள். வெறி தீரச் சுமை இறக்க அந்த சுத்து வட்டாரத்தில் இது போல் இளிச்சவாய்த் தொடுசு அகப்படாது. சமயத்தில் சேக்காளிகள் சேர்ந்து இருவர் மூவரெனப் புணர்ந்து ரணமாக்கிவிடுவர். அப்போதும் கூட மயங்காத்தாளிடமும் செருப்படி வாங்கிக்கொள்வாளே ஒழிய யாரையும் நொந்து கொள்வதில்லை. முயங்க முயங்கவே கழட்டி வைத்த டவுசரிலிருந்து சில்லறை திருடுவதெல்லாம் அவளுக்குத் தெரியாது. வர்றவன் இவள் கொலுசை, கம்மலை கழட்டிச் செல்லாமலிருந்தால் சரி.

ஒரே விசயம் அவங்காத்தாள் கண்ணுக்குச் சிக்காமல் இழுத்துப் போய் விட வேண்டும்வரமறுப்பவளுமில்லை வம்பில் கையைப் பிடித்து  
இழுப்பாளுமில்லை. அது ஒரு தனிரகம்.  பாவமென்று சொன்னாலும் பத்தாதுமீறி மயங்காத்தாள் கண்ணில்  
அகப்பட்டால் போச்சுகுடியானவனென்றால் வாய்வரைக்கும் வந்தாலும் அடக்கிக்கொண்டு,  மனசுக்குள் வார்த்தை பேசியவாறே ஊமச்சியை அடித்து இழுத்துச் சென்றுவிடுவாள்பலவட்ட சாதியென்றால் முடிந்தது  சோளி.. 
ஊட்டு  வாசலேறி ஆத்தாள்   அப்பனையெல்லாம் இழுத்துக்   காசைப்பிடுங்காமல் விடமாட்டாள் மயங்காத்தா.

மயங்காத்தாள் கண்பார்வையிலிருந்து இவள் அங்குமிங்கும் நகர்வதே கடுசு.கிழவி நகரும் நேரம் வாய்த்தாலும் அந்தக்குடிசைக்குள் புகுந்து சோளி 
பார்க்கவும்,பயல்களுக்கு சாதி கவுரவம் இடங்கொடுக்காது. ஆக அவள்
குப்பை  கொட்டவோ காடு கரைக்கு பேளப்போகையிலோ ஏரியோரம்  
இழுத்துச்  சென்றால் தானுண்டு.

அப்படியும் புதரோரம் வைத்துப் புணர்க்கையில் கிழவி பின்னாலேயே   மோப்பம்   பிடித்து வந்து அவளை அடித்து இழுத்துப்போவதுண்டு.
.
கழுத முண்டஒட்டனூட்டு நாயி ஓலுக்குக் காத்தாப்பிடி அரிப்பெடுத்தே   அலையுறாகூப்புட்டான்னா பொறவுக்கே போயிருவியா?’
காசுதராட்டியும் போச்சாதுன்னு உட்டாசில்றத்தாயோளிக கொலுசு மொதக்கொண்டு உருவ மட்டும் விரிச்சுட்டு மல்லாந்துருக்கா பாரேன்

எட்டுக்குத்துக்கு எளையவனெல்லாம் ஏமாத்தி இழுத்துட்டுப்போறான் தட்டுவாணி  முண்டைக்கு எப்ப புத்தி மசுரு வந்து புளுதண்ணி குடிக்கப்போறானு தெரியல

வார்த்தை வாங்காத நாளென்று எதுவுமில்லைஇருந்தும் இவை எதுவும் என்றேனும் அவள் செவிப்பறையில் ஏறியதுண்டா என்றால் கிடையாதுபிரமை பிடித்தாற் போலொரு இருப்புஇன்னும்  மீறிப்போனால் நாலைந்து  வருசமிருக்குமா உடம்புக்கட்டு.,  அதுக்குள்ளாரயுமே  எந்தக்குடிகார  நாயிகிட்டயாச்சும்  சீப்பாரத்து சீலபரி வாங்கி நாசமாப்போய் விடுவாளோ என்பதுதான்  கிழவி   கவலையெல்லாம்.
சொல்லப்போனால்,இவள் இப்படியே பிறவியல்லவயசுக்கு வந்திருந்த 
காலத்தில்  வம்படியாய்த் தூக்கிப்போய் ஏரியோரம் வைத்துப் புணர முயன்ற  பொரிக்காரன் ஒருவனின் உறுப்பை வெங்கச்செங்கல்லால் நசுக்கித்  துரத்தினாள் என்றொரு பேச்சு உண்டு ஊருக்குள்.  அதிலிருந்துதான் புத்தி பிசகென்று கதை கிளம்பியது.
ஆத்திரத்தில் செய்வதற்கு அர்த்தம் சொல்லாது போனால் புத்தி   பிசகென்றுதானே பொருள்அதைத்தான் அவளும் நினைத்தாளோ என்னவோஅப்படியே இருந்துவிட்டாள்அர்த்தம் சொல்லாததால் அர்த்தமில்லாமலில்லை என்பதொருபுறம்.

ஊர் மேயும் ஆட்களுக்கு இந்த ஊமைக்கோட்டான் வசதிதான்  என்றாலும்  கொஞ்ச நாள் பயந்து   போய் ஒரு பயலும் கிட்டே நெருங்காதிருந்தான்அதுவும் கல்லால் நசுக்கிய கதை கேள்விப்பட்டவெனெல்லாம் உனக்கொன்று உன் சாமானத்திற் கொன்று என பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு ஓடினான்.

அதுபோக,அந்தச்சந்தைக்கு அவள் வந்து சேர்ந்த கதை ஒன்று இருக்கிறது. ஏழெட்டு பிராயம் தானிருக்கும். வெய்யில் சாயும் நேரமாய் வந்து சந்தை நடுவே கூட்டத்தில்  கையுதறிச்   சென்றிருக்கிறான் அப்பங்காரன்பொழுது போனதும் கடையெல்லாம்   
சுருட்டிக்கொண்டு  ஆளாளுக்கு நடையைக் கட்டிக்கொண்டிருக்க, போறவன் எவனும் புழங்க வருவானா என்று காத்திருந்த மயங்காத்தா  கண்ணில்  
இந்தப் பொடிமனுசி விழுந்தாள்கண்ணீர் வழிந்து,  மூக்குச்சளியொடு கலந்து கொண்டிருக்க நின்றவளின் அருகில் போனாள் மயங்காத்தா.

யாரு புள்ளடி நீயி...இதேன் நின்னுட்டு அழுவற… ஆரு கூட வந்த

கேட்கப்பட்ட தொனியிலேயே மிரண்டாள் சிறுமி
இன்னொரு மூச்சு அதற்கே அழுவாள் போல் தெரிந்ததும், மூக்கைச்சிந்திவிட்டு முந்தானையில் முகந்துடைத்துவிட்டு 
சந்தை முழுவதும்   அவளைத்தூக்கிக் கொண்டு ஒரு நடை போனாள் மயங்காத்தா
கேட்பாராரும் இல்லை. பிறகு மீண்டும் தன் சாலைக்கு உள்ளே கூட்டிப்போய் அமர்த்தித் தண்ணீர் கொடுத்தாள்.  அடுத்தடுத்து கேட்டகேள்வியெதற்கும்  பதிலில்லை. மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரெனக் . கட்டைக்குரலில் கரைந்தாள்ஊமச்சியென்பது தெளிவானதுஆக தொலைப்பதற்காகவே   சந்தைக்கு   கொண்டு வரப்பட்ட பண்டமிது.

பொட்டப்புள்ள, பாக்கவும் நொட்டையில்ல., தொப்ப தள்ளி மாரும் வயிறும் தொங்கத்தொடங்கியிருந்த மயங்காத்தாளுக்கு ஊமச்சியை கூடவே வைத்துக்கொள்ள பிரியம் தான். பின்னும் சில வாரங்களுக்கு பொத்திப்பொத்தி வைத்தாள் குடிசைக்குள்ளேயே… தேடி யாரும் வரவில்லை என்று உறுதியாகும் வரை நெஞ்சு படபடத்துத்தானிருந்தாள் அவள்.

அதற்கடுத்த வருசங்களில் கண்ணைத்தின்னவனெவனும் சாராய 
மயக்கத்தில் வந்தால் தான்   உண்டு, என்றானது கிழவி பிழைப்புபழையபடிக்கு போக்கும் வரவுமில்லைவருமானம்   போதாமல் முறுக்கு சுட்டு விற்கத்தொடங்கினாள்ஊமச்சியை வைத்து 
சீவக்கட்டை  முடையச் செய்தாள்பேருக்கு எதோ சீவனம் 
ஓடிக்கொண்டிருந்தது.  

வருடம் போகப் போகபருவம் வந்த ஊமச்சியை பக்குவம் சொல்லிப் பண்டமாக்கினாள் கிழவி.  வெசாழக்கிழமையென்றால் அந்த ஜில்லா முழுவதுமிருந்து 
சந்தைக்காரர் கூட்டம் குழுமிவிடும்.வாரத்தில் ஒரு நாள் பொருள் வித்த களைப்பிலும் காசுமூட்டை நிறைந்த திருப்தியிலும் வரும் கடைக்காரர்களில் ஒருவருக்கேனும் மயங்காத்தா மகளுக்கு காசிறைப்பதற்கு  கசக்காது தான். மீதமிருக்கும் ஆறு நாளும் உள்ளூரில் ஓசிச்சோறாகாமல் பொத்தி வைக்கவேண்டியிருக்கும் ஊமச்சியை.

அரிசிக்காரக் கிழவனுக்கு எழுபதைத் தொடுகிறது வயது. மயங்காத்தாள் மடியில் வந்து கிடப்பது பல வருடப் பழக்கம். இப்போது நாடி செத்துவிட்டது; நாக்கைக் கூட நீட்ட முடியாதுதான் என்றாலும் அம்மணத்தைப் பார்ப்பதில் அவனுக்கு ஆசை கொஞ்சம் தணிந்துவிடுகிறது போல.

சந்தை நாளென்றால் விடியாலையே வந்துவிடுவான் லாரியோடு. மயங்காத்தாள் குடிசையை ஒட்டி நிறுத்திவிட வேண்டியது. தார்ப்பாய்களை எடுத்துக் கடை போடச் சொல்லி ஆட்களை அனுப்பிவிட்டால் ஆயிற்று. மகன் வந்து போனி தொடங்க எப்படியும் மணி எட்டு ஒன்பது ஆகிவிடும் அதுவரை மூடாக்குப் போட்ட லாரிக்குள் கிழட்டு மோளம் தான்.

லாரிக்கு நேரெதிர்  நிற்கும் புளிய மரக் கொம்பில் இந்தக்கூத்தைப் பார்ப்பதற்கென்றே சில்வண்டுகளின் கூட்டம் வேறு. சந்தையென்ன ஊரா, சேரியா? வாரமொருதரம் வந்து போகும் காடுதானே. அதனால் கிழவியையும் கேப்பார் மேப்பார் யாருமில்லை. கிழவனுக்கோ அவள் சாலைக்குள் கால் வைப்பது தான் அசிங்கமாய்த் தோன்றுமே அல்லாமல் குஞ்சு குளுவான்கள் பார்த்துச் சிரிப்பதில் எதுவும் பிரச்சனை இருந்ததில்லை.

மகன் வந்ததும் கடையில் சோளி... ஒன்றும் பெரிதாகப் புடுங்கப்போவதில்லை கிழவன். காசை எண்ணி எண்ணி வைப்பது மட்டும் தான். உச்சி ஏறிவிட்டதா… மீண்டும் சோத்துப்போசியோடு லாரிக்குச் சென்று கிடப்பு.  மயங்காத்தாளுக்கோ தனக்கென வரும் ஒரே கிராக்கியை விட்டு விடவும் மனசொப்பாது. ஊமைக்கோட்டானை தனியே விட்டாலும் பொழப்பு கிழிந்துவிடும் என்ற பயம்.  அதனால் அரிசிக்கடையில் போய் உக்காரச் சொல்லிவிடுவாள்.

அப்படி அரிசிக்கடையில் கிழவன் மகனைப் பார்த்துதான் ஆம்பிளை ஆசை முதல்முறை கிளம்பியது இவளுக்கு. விரைத்த சாமான் சிக்கிக்கொண்டால் பல்லை வெறுகி நிற்கும் நாயின் முகமாகத்தான் மீசை வைத்த எந்த முகமும்  அவளுக்குத் தோன்றியிருக்கின்றது. தன்னை அடிப்பதற்கும், உதைப்பதற்கும், புணர்ந்து புணர்ந்தே கொல்வதற்கும் உரிமை கொண்ட எசமானர்கள் என்பது தாண்டி அவள் ஆசைப்பட்ட ஒரே ஆண் அவன் தான்.

எத்தனையோ நாட்களாய் பொருமியிருக்கிறாள் மனதுக்குள். அவன் வந்து கையைப்பிடித்து இழுத்துப்போக மாட்டானா என்று. ஊமச்சியை மட்டும் சொல்லக்கூடாது. ஆசையை கிளப்பிவிட்டவனும் அவன் தான். முனுக்கு முனுக்குனு இருந்தாலும் முன்னூறு குசும்பு செய்வான். சொந்தக்காரக் கைத்தடி ஒருவன் கூடவே இருப்பான். அப்பவும் மூத்திரம் போக எழுந்தால் கூட  இவளைத்தான் உக்காரவைப்பான் கடை நடுவில். போகிற போக்கில் உரசுவதும், மூட்டை தூக்கித் தரச் சொல்லி முலைகளோடு முதுகையும் தோளையும் ஒட்டுவதுமாய்க் கிளப்பி விட்டிருந்தான்.  அவளுக்கென்னவென்றால், வான்னா வரப்போற தன்னையும் பாங்காப் பார்க்கிறானே மனுசன் என்று உச்சி குளுந்துபோகும்.  அரிசிக்கடையோரம் நிலைக்கல்லில் உட்கார்ந்து நேரம் போவதறியாது அவனைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சப்பணங்கால் போட்டு உட்கார்ந்து அவன் படியளந்து போடுகையில் கண்கள் சொக்கும் அவளுக்கு. சிவந்த உடம்பும், உடம்பெல்லாம் மயிருமாய் அவனுடம்பு ஊமச்சியைக் கட்டிப்போட்டிருக்கும்.புருவமிரண்டும் இடைவெளியில்லாமல் சேர்ந்திருக்கும் இடத்தில் முத்தமிடுவதாய்க் கற்பனை செய்துகொள்வாள். நெஞ்சின் மயிரை அளைவதாக இவள் விரல்கள் காற்றில் நெளிந்து கொண்டிருக்கும்.   காசை வாங்கி தொடைக்குக் கீழே சாக்கிற்குள் வீசும் ஒரு நொடி; விலகும் அவன் வேட்டியின் இருட்டினுள் தனக்கான சொர்க்கம் இருப்பதாய் உணர்ந்தாள்.அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே புழைக்கந்தின் முனையில் ரத்தம் பாயும் அவளுக்கு. 

அரிப்பைச் சொல்லக் கூசாத ஆட்களை பார்த்தவளுக்கு ஆசையைச் சொல்லத்தயங்குபவன் மேல் பிரியம் பொங்கியது. அவளுக்குச் சொல்ல முடியாதென்று விசனம்; அவனுக்கோ தான் சொன்னாலும் ஊமச்சிக்குப் புரியாதோ என்று விசனம். வயசென்று பார்த்தால் அவளை விட மூத்தவனாய் நிச்சயம் இருக்கமாட்டான் அவன். ஊர்ப்பேச்சுக்கு பயந்த சுபாவம். அப்பனைப்போல் இல்லை. கூழுக்கும் மீசைக்கும் ஆசை அவனுக்கு. ஆட்கள் கண்ணுக்கும் சிக்காமல் அப்பனுக்கும் தெரியாமல் அவளைப் புழங்கவேண்டும். கிழவியிடம் சொல்லிவிடுவாளோ என்றும் பயம். முன்னமே கிழவியையும் இவளையும் பற்றிக் கொஞ்சமாகக் கேள்விப்பட்டிருந்தான். அப்படியும் கூட, ஆவது ஆகட்டுமென முந்தின வாரம் ஒரு மாதிரியாகச் சொல்லியே விட்டான். அடுத்த சந்தையன்னைக்கு சாப்பிட வாரேன் என்று... 

ஊமச்சிக்கோ தலைகால் புரியவில்லை. மகள் போல வளர்த்தாள் என்றாலும் கிழவி தன் வீட்டு அடுப்படியை நெருங்கவிட்டதில்லை ஊமச்சியை. தனக்கும் புழங்காத சாதியோ கூட்டமோவென்று ஒரு சந்தேகம் தான். பருவம் வந்து அவளாய்ப் பழகிய வரையிலும் தனியே தட்டும், சொம்பும், உண்டு கழுவ ஒரு மூலையும் என்று ஒதுக்கித்தான் பார்த்தாள் கிழவி.

வளர்ந்த பிற்பாடு தான் தனியடுப்பு வைத்துக் கொண்டாள் ஊமச்சி., அவள் கை ருசி அவளுக்கே மிதப்பைத் தந்தது. கிழவியிடம் உண்ட சோறு மண்ணுக்கும் பொறாதது. கிழவியின் குழம்பும் ரசமும் கழுதை மூத்திரம் இதுதானோ என்றிருக்கும். பிறகு தான், கூழோ களியோ தனக்கென சமைத்துக்கொண்டாள். அதன் ருசி அவள் தவிர யாரும் அறிந்ததில்லை. நாய்க்கு வைப்பாள்; முழுசாய் நக்கிவிட்டு திரும்பிப் படுத்துக்கொள்ளும் அவளைப்போலவே. சோறு மீந்தால், கொட்டிவைத்து காக்கை தின்பதை வெறித்துப் பார்த்திருப்பாள். 

பொசுக்கென்று சோறுண்ண வாரேன் என்றல்லவா சொல்லிவிட்டான் பாவி. வேறென்ன வேண்டும் இனிமேல். அவன் உண்ணட்டும் அப்படியே அவன் கால் ரெண்டையும் பிடித்துக்கொண்டு அழவேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். அவன் தொண்டையில் முதல் கவளம் இறங்கும் போதே செத்துவிட்டாலும் பாவமில்லை என்று தோன்றியது. ஊமச்சிக்கு. 

அந்த வாரம் முழுக்க வந்தவனிடமெல்லாம் அவன் நினைப்போடே படுத்தெழுந்தாள். காய்ந்த மட்டை போலக் கிடக்கும் ஊமைச்சியா இதுவென்று வியந்து தான் போனான் ஒவ்வொருவனும். ஒரு நாளுமில்லாமல் காசு வேண்டுமென்று கேட்டாள் வந்தவனிடமெல்லாம். மறுப்புசொல்லாமல் கொடுத்தவன் நிறைய. காசுக்குத் தனியென்று மாரைக் கடித்தான் ஒருவன். ரத்தம் பீறிட்டது. காயம் வலிக்கவில்லை அவளுக்கு. ரத்தத்தின் சம்பளம் வலியை மறக்கடித்தது.

இன்னொருவன் சாராயம் குடித்தால் தானுண்டென்று காசைக்கண்ணில் காட்டியே குடிக்க வைத்தான். மயங்கியவளை என்ன செய்தானென்று தெரியவில்லை. உறுப்பெல்லாம் ரணமாக்கியிருந்தான். முட்புதருக்குள் அம்மணமாய்க் கிடக்கவிட்டு அப்படியே ஓடியிருந்தான்.

அத்தனையும் பொறுத்திருந்தாள் ஊமச்சி. சந்தைநாளும் வந்தது. உச்சிப்பொழுதுக்கு முன்னமே கிழவி போய்விட்டாள். வெளியடுப்பில் சமைக்க முடியாது., பார்த்தாலும் பார்த்துவிடுவாள் கிழவி. அத்தனை வருசத்தில் முதல் தடவையாக கிழவியின் அடுப்படியில் உட்கார்ந்தாள். பயம் பிடுங்கித்தின்றது. அரிசியும் பருப்புஞ்சோறு. ஆட்டுக்கறியும் சமைத்தானது. புதுசாய் வாங்கிய தூக்குப்போசியில் சோறும் கறியும் நிரப்பி வைத்தாள்.  பின் எல்லாம் கழுவிக் கவிழ்த்தினாள். அத்தனை வருட வலியும், காயமும் அந்தச் சோற்றுப்போசியில் நிறைந்திருந்தது போல் நினைப்பு. அதையவன் உண்டாலும் போதும் பொறந்த பொறப்பிற்கு அர்த்தம் என்று கொண்டாள். கிழவி திரும்பும் நேரம் ஆனதும் போசியை முந்தானையில் மறைத்துக்கொண்டு சாலையிலிருந்து வெளியே வந்தாள்.

அரிசிக்கடையில் ஆளைக் காணவில்லை. இவளுக்கு முன்பாக ஒத்தயடிப்பாதையில் காத்திருந்தான் அவன். சுற்றும் முற்றும் பார்த்தவள் வெடுக் வெடுக்கென ஓட்டமும் நடையுமாய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஏரிப்பள்ளத்தின் நடுவே கூட்டிப்போனாள். உச்சியில் இருந்தது வெய்யில்.மொட்டைப்பாறையின் ஓரமாகப் போசியை வைத்துவிட்டு உட்கார்ந்தாள். வேர்த்துப்பூத்திருந்தது உடம்பெல்லாம். அவனுக்கோ மேல் மூச்சு கீழ்மூச்சு. போசியைத் திறக்கப்போனவளை மறித்தவன் மாரைப்பிடித்து மேலே சாய்ந்துகொண்டான். நினைவே தப்பிவிட்டது அவளுக்கு. ஊமச்சியின் முனகலில் ஒரு கணம் பயந்துதான் போனான் அவன்.  காயம்பட்ட மாரைக் கசக்கிய கையைப் பற்றினாள். இன்னும் இன்னும் அழுந்தத் தேய்த்தாள்., வலியில்லை அதை வரம் என்று கொண்டாள்.

கால்கள் விரித்து அவன் கால்களொடு பின்னி, அவனைப் பின்னிருந்து அழுத்தினாள். ஏறி முயங்கத் தொடங்கியவனுக்கு பாறையில் தேய்ந்து முழங்கால் நோவது அறிந்தவள் சட்டெனத் தான் மேலேறினாள்; ஜென்ம வெறி. நனைந்து கசகசத்தது தேகம் இரண்டும். ரத்தம் கசிந்த முட்டிகளில் பாறைமணல் துகள் ஏறி நற நறவென்றரைந்தது. இன்னும் இன்னும்.. போதுமில்லை இருவருக்கும். பீய்ச்சிய நீரனைத்தும் சூல்பையில்  நிறையட்டுமென்று இறுக்கியணைந்தாள் அவன் மேல். அடித்த வெயிலில் கண்கள் திறக்கவழியில்லை. அவன் மாரின் மயிரெலாம் அளைந்தாள். கலவிக்கழிவை நாவால் துடைத்தாள்.  இடுப்பைப் பற்றிய கைகளை மெதுவாய் உதறி எழுந்தான் அவன். அப்படியே மல்லாந்து கிடந்தாள் ஊமச்சி. உடல் அவளிடமில்லை என்றானது. ஆசையென்றால் இன்னதென்றில்லை. அத்தனையும் தீர்ந்த திருப்தி.

புதர் மறைப்புக்குச் சென்றவன் உடுத்தித் திரும்பினான். உள்ளபடியே மயங்கிக் கிடந்தாள் அவள். எழுப்ப நினைத்தவன் சட்டெனத்திரும்பி நடக்கலானான். அவளுக்கோ எழ மனமில்லை. இன்னமும் மேலே படர்ந்திருக்கிறான் அவன் என்பதாய்ப் பிரமை. உள்ளே சேர்ந்த வெம்மை உடனே கைகால் முளைத்துப் புரள்கிறது அவளுள். சட்டென விழித்தாள்... சோறு?! விரசாய் எழுந்து ஒண்ணுக்கு ரெண்டாய்ச் சீலையச் சுற்றிக்கொண்டு போசியுங்கையுமாய்த் துரத்தினாள். அவன் தூரம் சென்றுவிட்டான். கூப்பிடு தூரம் தான். ஊமச்சி என்ன செய்வாள்? எந்த வலியிலும் குரலெடுக்க முயலாதவள் இரைந்து கூப்பிட்டாள். எவரையும் திடுக்கிட வைக்கும் சத்தமது.

திரும்பினான்., போசியைக்காட்டினாள். நின்றவனை நோக்கி ஓட்டமாய்ப் போயடைந்தாள். 

’சுத்தி வா இல்லாட்டி இங்கயே இருந்துட்டு பொழுதோட வா.. பொறவாலயே வராத....’ படபடவென்று பொரிந்து தள்ளினான்.

சரியென்று தலையாட்டிவிட்டு போசியை நீட்டினாள். வாங்கிக்கொண்டு விருவிருவென்று நடக்கத்தொடங்கிவிட்டான். அப்படியே அமர்ந்தவள் தான். நேரம் காலம் நகர்வது தெரியவில்லை. பொழுது சாயத்தான் திரும்பி வந்தாள். ஒத்தயடிப்பாதையினோரம் வெள்ளவேலாமரத்தடியில்  போசி வீசிக்கிடந்தது. கறுப்பெரும்புக் கூட்டம் படையெடுத்திருந்தது சோறெல்லாம்.

மூச்சடைத்தது அவளுக்கு. அழக்கூட முடியவில்லை. எறும்பெல்லாம் தலை திருப்பிப் பார்ப்பது போலிருந்தது. தன்னைப் புணர்ந்த ஒவ்வொரு முகமும் பல்லிளித்து அள்ளித்தின்றது சோற்றை. அடித்தொண்டையிலிருந்து கதறினாள். ஊமைச்சியின் பேச்சு அது. மனிதமிருகம் மறந்திட்ட உறுமல் அது. ஆயுசுக்கும் பொத்திவைத்த அழுகையெல்லாம் உடைந்து பெருகியது. மண்டி போட்டு விழுந்தாள். மண்ணையள்ளி அள்ளி வீசினாள் சோற்றின் மேல். எறும்புக்கூட்டம் சிதறிச்சென்றது.


மடலிட : rajan@rajanleaks.com

Saturday, May 11, 2013

அப்பா...


துருவேறிக்கிடந்த பழைய ட்ரங்குப் பெட்டியொன்றை பரணிலிருந்து இறக்கித் துழாவிக் கொண்டிருந்த போது அப்பாவின் எச்எம்டி ஒன்று அகப்பட்டது. டயல் மின்னல் பாய்ந்தது போல் சில்லு சில்லாய். அப்பாவின் பதின்ம வயதில் எடுத்த புகைப்படங்கள் ஒரு பையிலிருந்து கொட்டின. பெல்ஸ் தெரிய வேண்டுமென்பதற்காகவே ஃபுல் சைஸில் எடுக்கப்பட்டவை அவை. கோடு போட்டாற்போல் மீசையுடன் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள். அதனுடன் அந்தக்காலத்து லைசன்ஸ் அட்டை. எல்லாவற்றுக்கும் அடியில் நைந்து போன அந்த கரை வேஷ்டி கிடைத்தது. அதுவும் அப்பாவினுடையது தான். எனக்குத் தெரிய அதுபோல இரண்டு வேஷ்டிகள் வைத்திருப்பார் அப்பா. வேலைக்குப் போவது தவிர்த்து வேறெங்கு செல்வதானாலும் வேஷ்டி தான். அழுக்கேறிய வேஷ்டி. அடிப்பக்கம் அழுக்கேறினால் அதை இடுப்புக்கு வைத்து அழுக்கு குறைந்ததும் கசங்கியதுமான பக்கத்தை கீழ்ப்புறம் வைத்துக் கட்டிக் கொள்வார் அப்பா.

லேத்தில் வேலை செய்ய காக்கி பேண்ட், அதில் காக்கியைத் தேடவேண்டும் கறுப்புக்கு நடுவில். சின்னதும் பெரியதுமாகக் கட்டம்போட்ட சட்டைகள் நான்கு இருந்திருக்கலாம். வேஷ்டி கட்டும் போது போடுவதற்கென்றே வெள்ளைச் சட்டைகள் இரண்டு. எடுக்கும் போது என்ன நிறமிருக்கிறதோ அந்தப் பெயரே கடைசி வரை தங்கிவிடும் அப்பாவின் உடைகளுக்கு.

அப்பா வேஷ்டி கட்டினால் எனக்கு அவ்வளவு இஷ்டம். அதில் இருக்கும் கரை களின் மேல் அலாதி பிரியம். அப்படியும் முழுமையாகச் சொல்லமுடியாது. அதிலிருக்கும் கறுப்புக் கரை மேல் பிரியம். சிவப்பு ஏனோ கண்களை உறுத்துவதாகத் தோன்றும் எனக்கு. வேஷ்டி அணிந்தால் மொந்தமாக ஒரு துண்டு ஒன்றை கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்வார் அப்பா. அதிலும் அதே இரண்டு வர்ணக் கரைகள் உண்டு வேஷ்டியின் கரையைவிட இன்னும் சற்று பெரியதாக. அழுக்கு வெள்ளை உடைதான் என்றாலும் அப்பாவை அதில் பார்க்கத்தான் எனக்கு சந்தோசமாயிருந்திருக்கிறது. வெளியே கூட்டிப்போக மறுத்தாலும் தெருமுனை வரையாவது அப்பாவின் மணிக்கட்டைப் பிடித்துத் தொங்கியபடியே சென்று திரும்புவதுண்டு.

அப்படித்தான் ஒருநாள்… டவுசர் போட்டுத்திரிந்த நாட்கள். அரைப்பரிச்சை முடிந்த 12 நாள் லீவின் முதல் நாள் . வழக்கமாக முன்பெல்லாம் ஸ்கூல் விட்டு வந்தால் நீல டவுசரையும் வெள்ளைச் சட்டையையும் உருவி விட்டு வேறு உடை போடச் சொல்லிவிடுவாள் அம்மா. கொஞ்ச நாளாய் அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை. தினமும் நான்கைந்து பேரிடமாவது சொல்லிச் சொல்லி பழக்கமாகிவிட்டது இதை. ’அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை’. நானாகச் சொல்லமாட்டேன். டீச்சர்கள் சட்டையின் அழுக்கு பற்றி கேட்டாலும், முக்குக் கடைக்காரன் மீதி தொகை கேட்டாலும், பையன்கள் விளையாட வரச்சொல்லிக் கேட்டாலும் இதையேதான் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறேன். ’அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லை’.
உடம்புக்கு என்ன என்று கேட்டால் எனக்குச் சொல்லத்தெரியாது. 

உண்மையில் அம்மா உடம்புக்கு என்னவென்று எனக்கே தெரியாது. நாள் முழுவதும் படுத்துக்கொண்டிருக்கிறாள் எப்போது சாப்பிடுகிறாள் குளிக்கிறாள் எதுவும் தெரியாது. நான் பார்க்கும் போதெல்லாம் சுவற்றுக்கு முகத்தைக் காட்டி கேள்விக்குறி போல் சுருண்டு படுத்திருக்கிறாள். எனக்கு அவள் சோறு ஊட்டி விட்டு மாதக்கணக்காகி விட்டது. என்னோடு விளையாடுவதில்லை. பாடம் படிக்கச் சொல்லுவதில்லை. உடைமாற்றச் சொல்வதில்லை. திட்டுவதுமில்லை. நானும் அவளிடம் ஏனென்று கேட்கிறதுமில்லை.

முன் போல் இருந்தன இரவுகள் மட்டும் தான். தினமும் இரவில் அம்மாவோடு படுத்துக் கொள்வேன். தட்டிக்கொடுப்பாள். தலையை வருடுவாள். அம்மாவின் காதுக்கு பின்னால் ஒரு கற்றை முடியைப் பிடித்துக்கொண்டு ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டே தூங்கிப் போவேன்.

அப்பா காலையிலும் இரவிலும் அம்மாவுக்குக் கஞ்சி வைத்துக் கொடுப்பார். எனக்கு காலையில் இட்லி வாங்கக் காசுகொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார். இரவில் லேத்துக்கு வரச்சொல்லி அங்கேயே எதாவது வாங்கிக் கொடுத்துக் கூட்டி வருவார்.
வீட்டை இரண்டாய்ப் பிரிப்பது போல் ஒரு கொடி தொங்கும். கொடியே தெரியாத அளவுக்கு மூன்று பேருடைய ஆடைகளும் அதில்தான் தொங்கும். அன்றைக்கு காலையில் அந்தக் கொடியிலிருந்து கரை வேஷ்டியை உருவினார் அப்பா. எனக்கு ஆர்வம் கூடிக்கொண்டது. அம்மாவின் காதில் போய் கிசுகிசுத்தேன்.
’ம்மா அப்பா கட்சி ஆப்பீஸ்க்கு போகுதாம்மா என்னையும் கூட்டிப்போகச்சொல்லும்மா’

அம்மா நெளிந்துவிட்டு படுத்துக்கொண்டாள். உண்மையில் அப்பா கட்சி ஆபீஸுக்கு போவதென்றால் என்னைக் கூட்டிப்போக மாட்டார். கல்யாண மண்டபங்களில் நடக்கும் கூட்டங்களுக்குத்தான் கூட்டிப்போவார். அங்கேயும் மதியம் வரைதான் என்னைக் கூட வைத்துக் கொள்வார். சாப்பாட்டு நேரமானதும் சாப்பாட்டுப் பொட்டலங்கள் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்.
’சட்டையப் போடுடா நீயும் வருவியாம்’ என்றது மெதுவாய் ஒரு குரல் பின்னாலிருந்து.
அப்பா என்னையும் கூட்டிப்போவதாகச் சொல்லிவிட்டார். சட்டையை உருவிக்கொண்டேன் கொடியிலிருந்து. இன்னும் சில கந்தல்களும் சேர்ந்தே விழுந்தன. பட்டன்கள் இரண்டு இருந்தன. அதை மட்டும் போட்டுக்கொண்டேன். அம்மா கழுத்தில் மஞ்சக்கயிறில் கோர்த்திருந்த பின் ஊசிகள் இரண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வெளியே தாவினேன். அப்பாவின் தோல் செருப்புகளைக் காணவில்லை. தெருவில் நின்று பீடியைப் பற்றவைத்துக் கொண்டிருந்தார். அம்மாவைப்பார்த்தேன் அவள் விழித்திருப்பதாய்த் தோன்றவில்லை. தடுக்குக் கதவை மூடினாற்போல் வைத்துவிட்டு ஓடினேன்.

அப்பா கையை நீட்டினார். பின்னூசிகளைக் கொடுத்தேன்.. முட்டி போட்டு உக்கார்ந்தார் எனக்கெதிரில்.  பீடியை உதட்டில் கவ்விக் கொண்டு சட்டையின் பட்டன் பிய்ந்த இடத்தையும் பின் பக்க பட்டியையும் சேர்த்துப்பிடித்து உட்புறமாக பின்னூசியை விட்டு மாட்டிவிட்டார். சட்டைக்குள் கீழிருந்து அப்பாவின் கை நுழைந்ததில் கிச்சு கிச்சு மூட்டினாற் போலிருந்தது. கூச்சத்தில் சிரித்தேன். பீடியின் புகை முகங்களுக்கிடையில் நிறைந்திருந்தது. நான் சிரித்தை அவர் பார்த்தாரா தெரியவில்லை. இரண்டு பின்னூசிகளையும் குத்திவிட்டு தனது பாக்கெட்டிலிருந்து 5 ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
’3 இட்லி வாங்கிக் கொண்டு போய் அம்மா கிட்ட வெச்சிட்டு வா’ என்றார். இரண்டு வீடு தள்ளித்தான் கடை இருந்தது. வாங்கிக்கொண்டு திரும்பினேன். அப்பா அங்கேயே நின்று அடுத்த பீடியைப் பற்றவைத்துக்கொண்டிருந்தார்.

‘அப்பா மீதிக்காசு குடுக்கலப்பா.. கேட்டா மொறைக்கறாம்ப்பா’
‘சரி நீ போயி அம்மாட்ட வெச்சுட்டு வந்துடு’
நான்போய் அம்மா தலை மாட்டில் அந்தப் பொட்டலத்தை வைத்துவிட்டு ஓடிவந்து அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டு நடக்கத்தொடங்கினேன்.
‘நாம சாப்பிடலாம்ப்பா’
அப்பா சட்டென்று நின்றுவிட்டார். எதிரிலிருந்த சைக்கிள் கடைக்குப் போனார். நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். வாடகைக்கு சைக்கிள் எடுக்கக் காசு கொடுப்பார் முன்பெல்லாம். 7ம் நம்பர் சைக்கிள் எனக்குச் சரியாக இருக்கும். சிவப்பு நிற சைக்கிள். சைக்கிள் ஓட்டி வெகு நாட்களாகிவிட்டன. அப்பா சைக்கிள் கடையிலிருந்து வந்து என் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கத்தொடங்கினார்.

மளிகைக் கடையில் இரண்டு பழங்கள் வாங்கி என் கையில் கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு கடைப்பெண்ணிடம் ஒரு சொம்பில் தண்ணி வாங்கிக் குடித்தார். மீதமிருந்ததை எனக்காக கையில் வைத்து நின்றார்.
அப்பா காத்திருக்கிறார் என்றாலும் வேகமாக விழுங்கமுடியவில்லை. நல்ல பசி. காலையில் மட்டும் தான் பசி தெரிகிறது. மதியமும் இரவும் பசி என்ற நினைப்பே இருப்பதில்லை. மேலண்ணத்தில் பிசுபிசுபாய் ஒட்டிக்கொண்டது வாழைப்பழம். தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு எழுந்தேன். மீண்டும் நடக்கத் தொடங்கினோம்.

பள்ளிக்கூடத்தைத் தாண்டி மாரியம்மன் கோயில் முக்கைத்திரும்பினால் கட்சி ஆபீஸ். நிறையக் கூட்டமிருந்தது. மாரியம்மன் கோயில் வாசலில் உட்கார வைத்துவிட்டு அப்பா கூட்டத்திற்குள் கலந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பின் கார்கள் கிளம்பின. அப்பா கூட்டத்திலிருந்து ஓடி வந்து என்னைத் தூக்கிக் கொண்டு அப்போதுதான் கிளம்பிய டெம்போவை மறித்து ஏற்றிவிட்டுத் தானும் ஏறிக்கொண்டார். டெம்போவில் நிறையப் பேர் நின்றுகொண்டிருந்தோம். அப்பா போலவே வேஷ்டி கட்டியிருந்தார்கள் எல்லோரும். என்னை யாரும் எதுவும் கேட்கவே இல்லை. என்ன படிக்கறனு ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கேட்கும் மீசைக்கார மாமாவையும் காணவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டே நின்றேன் எல்லாக் கடைகளும் சரசரவெனப் பின்னால் சென்றன எங்களை விட்டு.

டெம்போ நின்ற இடம் புதிதாக இருந்தது எனக்கு. கோர்ட் இருந்தது அந்த வளாகத்தில். போலீஸ் ஸ்டேசனும் இன்னும் நிறைய கவர்மெண்ட் ஆபீஸ்களுமாய் இருந்தது. எல்லோரும் இறங்கினார்கள். அப்பா முதலில் டெம்போவிலிருந்து குதித்தார் பின்னர் என் இடுப்பைப் பிடித்து தூக்கி கீழே வைத்தார்.
ஒரு வேன் பூவரச மரத்தடியில் நின்றது. அதற்கு அருகில் கூட்டிப்போனார் அப்பா. உள்ளே எட்டிப்பார்த்தேன். நிறைய பொட்டலங்கள். தக்காளி சோறாப்பா என்றேன் அப்பாவிடம். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. இப்படித்தான் அப்பா நான் கேட்பவை பலவற்றிற்கு ஒன்றுமே சொல்ல மாட்டார்.
சாப்பாட்டு வேனின் நிழல் விழுந்த பக்கம் ஒரு கல்லை உருட்டிப் போட்டு என்னை உக்காரச் சொன்னார். உருட்டிப்போட்டதில் சேறான பக்கம் மேலே வந்து விட்டது. என் டவுசரில் சேறாகிவிட்டது. கொஞ்சம் காய்ந்த சேறுதான்; ஜல்லிக் கல் ஒன்றை எடுத்து சுரண்டி சுரண்டி எடுத்தேன். அப்பா இங்கேயே இரு என்பதாகக் கையமர்த்திச் சைகை செய்துவிட்டு கூட்டத்துக்குள் மீண்டும் புகுந்து கொண்டார்.

டீவிஎஸ் 50 ஒன்று வந்து அருகில் நின்றது. அதற்குப் பின் பக்கம் மட்டுமே மூன்று சக்கரங்கள். காலே ஊனத்தேவையில்லை. சுலபமாகக் கற்றுக்கொள்ளலாம் போலிருந்தது. எனக்கு டீவிஎஸ் 50 ஓட்டிப்பழகவேண்டும் என்று ஆசை. பெரிய சைக்கிள் அதுவும் தண்டு வைத்த சைக்கிள் என்றால்தான் குரங்கு பெடல். சின்ன சைக்கிளெல்லாம் சீட்டிலேயே உக்கார்ந்து ஓட்டமுடியும் அப்போது என்னால்.
அதிலிருந்த அண்ணன் கருப்பாக இருந்தது. ரொம்பக் கருப்பு. நான் அவ்வளவு கருப்பான ஆளைப் பார்த்ததே இல்லை. இடுப்பு வரை குண்டாகவும் இடுப்புக்குக் கீழே தொடை காலெல்லாம் சின்னதாக சூப்பிப்போயும் இருந்தன. ஒரு ரவுண்டு ஓட்டிப்பழக்கி விடச் சொல்லி கேட்கலாம் என்று நினைத்து பேசாமல் இருந்து கொண்டேன்.
பைக்குள் இருந்து ஒரு பரிட்சை அட்டையும் பேப்பர்களும் பேனாவும் எடுத்து கொண்டு ஒரு மூங்கில் தடியைப் பிடித்து இறங்கி இன்னொரு கல்லின் மேல் உட்கார்ந்தது அந்த அண்ணன்.
நான் அதையே பார்த்துக்கொண்டிருந்ததால் அந்த அண்ணன் என்னைப்பார்த்து ரொம்பவும் முறைத்தது நான் குனிந்து கொண்டேன். மீண்டும் பார்த்தபோது சிரித்துக் கொண்டிருந்தது. கிட்ட வா என்றது மெதுவாக.
அருகில் போய் நின்றேன்.
உன் பேர் என்ன என்றது அந்த அண்ணன்.
சொன்னேன்.
நான் அது பேரை கேட்கவில்லை.  ’என் பேரு என்னதெரியுமா’ என்று கேட்டது தலையசைத்தேன் குறுக்காக.
‘ம்ம்??’
‘தெரியாது’
அந்த அண்ணனுக்கு ஒரு கண் மாறுகண்ணாக இருந்தது. கொஞ்சம் தள்ளி வெறும் மண்ணைப் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசுவது போலிருந்தது
’எதுக்கு இந்த பேப்பர்’? என்றேன்.
’எழுதத்தெரியாதவங்கல்லாம் வருவாங்கல்ல. அவங்களுக்காக மனு எழுதிக்குடுக்க’
‘காசு குடுப்பாங்களா’
‘ம்ம்ம்’
’மனுன்னா என்ன லெட்டரா’
‘ம்ம்ம் ஆமா’
என்றுவிட்டு ‘நீ எதுக்கு வந்தே’ என்றது
’அப்பா கூட.. அப்பா உள்ள போயிருக்கார்… ஆமா உள்ள என்ன நடக்குது எதுக்கு கூட்டமா இருக்கு’
‘எலக்சன்ல நிக்கறதுக்கு இன்னைக்கு பேர் குடுப்பாங்க அதுக்குதான்.’
’ அப்பா கூட எலக்சன்ல ஓட்டு போடுவார்’ என்றேன்.
‘யாருக்கு’
‘அவருக்கு’ என்றேன் சுவரிலிருந்த போஸ்டர் ஒன்றைக் காட்டி. அதில் சிரித்துக் கொண்டிருந்த ஆளை அப்பா அண்ணன்னு கூப்பிடுவார். அவர் தான் அப்பா கட்சிக்கு தலைவர்னு நினைச்சுட்டு இருந்தேன் முதலில். அப்புறம் ஒருநாள் அப்பா சொன்னார் அவர் எங்க ஊருக்கு மட்டும் தலைவராம் எல்லா ஊருக்கும் தலைவர் இன்னொருத்தர் இருக்காராம் என்று.
’ம்ம் அவருதான் இப்ப எலக்சன்ல நிக்கப்போறாரு.. பேர் குடுக்கறதுக்காக எல்லாரும் வந்துருக்காங்க… உங்கப்பா கட்சில இருக்காரா?’
‘ம்ம்ம் ஆமாம் கட்சில இருக்காரு ரொம்ப நாளா இருக்காரு’
அந்த அண்ணன் ஒன்றும் பேசவில்லை. கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.

அந்த அண்ணனிடம் சில கிழவிகள் வந்து பேர் ஊரெல்லாம் ஒப்பித்து ஒரு பேப்பரில் எழுதி வாங்கிப் போய்க்கொண்டிருந்தனர்.
வெயில் நான் உட்கார்ந்திருந்த இடத்தைத் தொடத்தொடங்கியது. எழுந்து போய் நின்றுகொண்டேன் நிழலில். கூட்டத்தைப் பிளந்துகொண்டு  வெளியே வந்தார். ஒருவர். அப்பா ஓட்டுப்போடும் தலைவர். ஒரு கார் அவருக்கு அருகில் போய் நின்றது. ஏறிக்கொண்டார். கூட்டம் காரைச் சூழந்துகொண்டது. கூச்சலில் ஒன்றும் விளங்கவில்லை. அந்தக்கார் மெதுவாகக் கிளம்பத்தொடங்கியது. அவசர அவசரமாக சிலர் ஓடினர் கார்களிடம். இன்னும் சில கார்களும் தலைவரின் காரின் பின்னே சென்று காம்பவுண்டை விட்டு வெளியேறத் தொடங்கின. சாப்பாட்டு வேனையும் எடுக்க ஒருத்தன் வந்தான். அப்பா வேக வேகமாக என்னிடம் வந்து என்னைப்பிடித்து இடுப்போடு சேர்த்து நிற்க வைத்துக் கொண்டார். சாப்பாட்டு வேனும் கிளம்பியது.  சில டெம்போக்கள் மட்டும் நின்றன. 
எங்களைப்போலவே,டெம்போக்களில் வந்தவர்களெல்லாம் பூவரச நிழலில் ஒதுங்கினர். நான் ஒவ்வொருவராக எண்ணத்தொடங்கினேன். எல்லோரும் அப்பாவிடம் கூச்சலிட்டார்கள். அப்பா அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

கடைசியாகப் புறப்பட்ட கார் மரத்தினருகே வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆள் இறங்கினார். அப்பாவின்  தலைவர் போலவே இருந்தார். ஆனால் இவர் வேஷ்டி அல்ல பேண்ட் போட்டிருந்தார். அவரது விரல் ஒன்றில் கலர் கலராக கல்வைத்த மோதிரம் இருந்தது. கல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். கை போன பக்கமெல்லாம் என் கண்ணும் போனது. ரொம்பப் பெரிய மோதிரம். நானென்றால் மூன்று விரல்களை விடலாம் அதில்.
‘தலைவரே 3 டெம்போங்க எப்பிடியும் 100 பேர் இருப்போம்ங்க’ என்றார் அப்பா
அப்பாவின் தொடையைச்சுரண்டி ‘107 பேருப்பா’ என்றேன். அப்பா ஒன்றும் சொல்லவில்லை
‘அட நாமினேசன் பண்றது தான்யா இன்னைக்கி வேணாம்ன்றாங்க… நாளைக்கோ நாளைன்னைக்கோ மறுபடி வந்து பண்ணிக்கலாம்’ என்றார் காரிலிந்து இறங்கியவர்
‘அது சரிங்க எப்ப வேணாலும் பண்ணிக்கலாம்… இன்னைக்கி வந்ததுக்கு எதாச்சும் கவனிச்சு உடுங்க’
’அண்ணன் ஒண்ணும் சொல்லல. இப்ப கேட்டா நல்லாருக்காது. நீங்க சாப்புட்டு கெளம்புங்க.. சாய்ங்காலம் ஆபீஸ்ல வெச்சு கேட்டுட்டு சொல்றேன்’
‘இப்பிடி சொன்னா எப்பிடிங்க’
‘அட இருக்கற பிரச்சனைல நீங்க வேற ஏன்யா உயிர வாங்கறீங்க சாப்புட்டு கெளம்புங்கய்யா சாய்ந்தரம் பாக்கலாம்’
‘சாப்புடு சாப்புடுன்னா மண்ணையும் கல்லையுமாங்க திங்கறது.. சோத்து பொட்டலம் இருந்த வேன்காரன் என்னமோ அவங்கப்பனூட்டு சொத்து மாதிரி மொத ஆளா கெளம்பிட்டான் இப்ப நாங்க என்னத்த தான் திங்கறதுன்றீங்க… பொழப்பக் கெடுத்துட்டு வந்தமில்லீங்க எங்களச் சொல்லோணும்’
’பேச்சக் கொறச்சுக்க சின்னப்பொன்னா.. இப்ப என்ன இங்க சோத்துக்கா இல்லாமக் கெடக்குது. போ வெளில இருக்கற ஹோட்டலுக்குக் கூட்டியா எல்லாத்தையும் நான் முன்னாடி போறேன்’
எல்லோரும் நடக்கத்தொடங்கினார்கள்.
’தூக்கிக்கிட்டுமாய்யா’
‘வேணாம்ப்பா நடக்குறேன்’
‘செருப்பு போட்டுட்டு வர்றதுக்கென்னய்யா… பொடி சுடுல உனக்கு?’
‘இல்லப்பா’
பொடி சுட்டது ஆனால். அப்பாவின் நிழலில் தேடித்தேடிக் கால்வைத்து நடந்துகொண்டிருந்தேன் அப்போதும் சுட்டது. அந்த காம்பவுண்டுக்கு வெளியே ஒரு ஹோட்டல் இருந்தது. ஒரு கிழவன் பணம் வாங்குமிடத்தில் உட்கார்ந்திருந்தார் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார் மோதிரக்காரர். அந்தக் கிழவனுக்குப் பின்னால் ஒரு முருகன் படம் இருந்ததைப் பார்த்தேன். அதற்குக் கீழே ஒரு விளக்கு செம்புத்தகட்டிலிருந்து மினுக் மினுக் என ஆரஞ்சு நிறத்தில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. பிரேம் போட்ட கண்ணாடிச்சட்டத்துக்குள் விளக்கு எரிவதைப் பார்த்துக்கொண்டே உள்ளே போனேன். அப்பா கை கழுவுமிடத்திலிருந்து என்னைப் பேர் சொல்லிக்கூப்பிட்டார்.

நான்குபேர் உட்காரக்கூடிய மேசையில் ஒரு சேரில் என்னை உட்கார சொல்லிவிட்டு சப்ளை செய்யும் ஆசாமியைத் தேடினார் அப்பா. நானும் பின்னாலேயே ஓடினேன். எனக்கு பூரி வேண்டுமென்று சொல்வதற்காக. அப்பா என்னைக் கவனிக்கவில்லை. சப்ளை ஆள் சின்ன வயதாக இருந்தான். சாந்தி டீச்சர் பையன் போல. டீச்சர் பையன் 10 வது படிக்கிறான்.
‘தம்பீ சாப்பாடு ஒண்ணு பார்சல் பண்ணீரு தலைவர் பணங்குடுப்பாரு’
‘சாப்புடுங்கண்ணா 100 சாப்பாட்டுக்கு பணம் குடுத்துருக்காப்டி… மீதி இருந்துச்சுண்ணா பார்சல் பண்ணி அத்தனையும் உங்ககிட்டயே குடுத்துடறேன்’
‘அட அதுக்கில்ல… எனக்கு குடுக்கற சாப்பாட பார்சல் பண்ணிரு நான் வீட்டுக்குப் போயி சாப்புட்டுக்கறேன்.’
‘மொதல்ல இருக்கவங்க எத்தனபேருனு  பாக்கறேண்ணா அதுபோக இருந்தா பார்சல் போட்டுத்தரேன். நீங்க மொதல்ல போயி உக்காருங்க’
‘ஆள் 100க்கு மேல இருக்குய்யா நீ என் சாப்பாட்ட பார்சல் பண்ணிடு நான் சொல்லிக்கறேன்’
‘இருங்க அவர்ட்டயே சொல்லிரலாம் வாங்க’
‘ஏய்ய் என்னப்பா நீயி…. சரி போ வேணாம்.’
அப்பா திரும்பினார் பின்னால் நின்றிருந்த என்மீது அவரது முழங்கை யை இடித்துக்கொண்டார்
என் மோவாயில் அடிபட்டது.
 ‘ப்ச்… உன்னைய உக்காரச்சொன்னேன்ல’
அதற்குள் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தது. எங்களைப்போலவே நிறையபேர் ஆங்காங்கே நின்றபடி காத்திருந்தனர்.
‘எல்லாரும் சாப்புட்டுக் கெளம்புங்க சாய்ங்காலம் பாக்கலாம்’ என்றவாறு கிளம்பினார் மோதிரக்காரர்.
அப்பா வேகவேகமாக அவர் பின்னாலேயே சென்று வாசலோடு நின்றுவிட்டார். கார் கிளம்பியதும் திரும்பிவந்தார். கைகழுவ எழுந்து போகத் தொடங்கினர் சிலர். நானும் அப்பாவும் போய் உட்கார்ந்தோம்.
‘அப்பா பூரி வேணும்ப்பா’
‘இந்நேரத்துல பூரி இருக்காது சாப்பாடு சாப்பிடுவியாமாம் சரியா’
நான் ஒன்றும் சொல்லவில்லை.
இலை போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. சாப்பாட்டை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படி இலைநிறைய சாப்பாடும் பொரியல்களுமாய் நான் சாப்பிட்டதில்லை. மேசை வேறு என் கழுத்து உயரத்திற்கு இருந்தது. அப்பா எனக்கு ஊட்டி விடத்தொடங்கினார். அவர் இலையில் இருந்தவை அப்படியே இருந்தன. அம்மாவைப்போல மசியப் பிசைந்து ஊட்டத்தெரியவில்லை அப்பாவுக்கு. வயிறு நிறைந்ததும் போதும் என்றேன். 
‘ஒரு வாய்ப்பா கடசீ வாய்’
‘இல்லப்பா முடியல’

 கடைசியாய் பிசைந்த கவளத்தை வாயில் போட்டுக்கொண்டார். கூஜாவிலிருந்த  தண்ணீரை சட்டையெல்லாம் நனையக் குடித்துவிட்டு தன் இலையை அப்படியே மூடிவிட்டார். அப்பா.