போர்த்துக்கீசிய நாடுகாண் பயணியான வாஸ்கோட காமா 1498, 1502 மற்றும் 1524 ஆகிய ஆண்டுகளில் கேரளாவிற்கு கடல்மார்க்கமாக வந்து, வைசிராயானது குறித்து நாம் அவ்வளவாக அறியாத விஷயங்களைப் பேசும் திரைப்படம் சந்தோஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘உருமி’ . தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாகக் கேள்வி. எப்போதென்று தெரியவில்லை.
பிரித்விராஜ் சுகுமாரன், பிரபுதேவா, ஆர்யா, நித்யா மேனன், ஜெனிலியா, வித்யாபாலன், தபு என ஒரு பெரும் நட்சத்திரப்பட்டாளமே இணைந்திருப்பது 15ம் நூற்றாண்டின் கதை பேசும் ஒரு பீரியட்
சினிமாவுக்காக! பெரும்பாலும் சரித்திரத்தின் சினிமா பதிவுகள்
டாக்குமெண்ட்ரியாகிவிடுவது வழமை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் தீபக் தேவ்
என்பவரது இசையும், அற்புதமான நடிகர்
குழுவும் உருமியை அவ்வாறன்றி நல்லதொரு சினிமாவாக மாற்றுகின்றன.
தமிழ் நாட்டைச் சார்ந்த சாதாரணனாக நான் அறிந்த வாஸ்கோடகாமா ஒரு பயணி!
இங்கு வந்து ஊர்சுற்றிப்பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருப்பார் என
அவதானித்திருந்தேன். ஆனால் உருமி அந்த வாஸ்கோ ட காமா குறித்த கறுப்புப் பக்கங்களைச்
சொல்கிறது.
ஒரு சினிமாவாக, உருமியை எதிர்மறை
விமர்சனம் செய்யவே இயலாது என்றல்ல; எனினும் நாம் சற்றும் அறியாத, நமக்கு காலத்தாலும், தொலைவாலும் மிக அருகில் நடந்த ஒரு சரித்திரத்தினை, அதன் சிலபக்கங்களை
நம்முன் திறக்கும் வகையில் உருமியை ஒரு முக்கியமான சினிமா பதிவாகக் கருதுகிறேன்.
உருமியைப் பொறுத்தல்லாமல், இதன் நடிகர்களில் மிகச் சிறந்த நடிப்பாற்றல் உடையவர் என நான்
கருதுவது பிரபுதேவாவை. நாயகனின் நண்பனாக கதை நெடுகிலும் உடன் வரும் வவாலி எனும்
பாத்திரம் அவருடையது. நிறைவான பங்களிப்பு. அரக்கல் சுல்தானாவாக வரும் ஜெனிலியாவும், கள்ளிக்கோட்டை சிரக்கல் ராஜாங்கத்தின்
படைநாயகனான கேளு நாயனாராக வரும் பிரித்விராஜும் மிகச் சிறந்த நடிப்பினை
வெளிப்படுத்தியுள்ளனர். பாரம்பரிய கேரள போர்க் காட்சிகளில் பிரித்வி ராஜுக்கு
இணையாக ஜெனிலியா உழைத்துள்ளதை அறியமுடிகிறது.
கேளு நாயரின் தந்தையாக சிரக்கல் கொத்துவால் பாத்திரத்தில் ஆர்யா. சில
நிமிடங்களே ஆயினும் நல்ல தேர்வு. தபு ஒரு பாடலுக்கு வருகிறார். நடிகர்கள் அனைவரும்
சமகாலத்தில் ஒரு பாத்திரமும் 15ம் நூற்றாண்டின் ஃப்ளாஷ் பேக்கில் ஒரு பாத்திரமுமாக
வருகின்றனர்.
சுமார் 30 கோடி உருமியின் பட்ஜெட் என்றறிகிறேன். கேரள சினிமாவில் இது
இரண்டாவது மெகா பட்ஜெட் படமாம்!
வாஸ்கோடகாமா குறித்து உண்மைத் தரவுகளை நான் சரிபார்க்கவில்லை. ஆனால்
உருமி - ஒரு ஃபிக்ஷனாக கேளு நாயரால் வெல்லப்படுவதாக சொல்கிறது.
உருமி என்பது கேரள களரிப் போர் முறையில் உபயோகப்படுத்தப்படும் ஒரு
வித வாள்! வளையும் தன்மையதான நீளமான வாள்! வடக்கு கேரளத்தில் உருமி எனவும் தெற்கில்
சுட்டுவாள் எனவும் குறிப்பிடப்படும் ஒன்று. கேளு நாயருடைய தங்க உருமியின்
பின்னணியில் உள்ள கதையானபடியால் இப்பெயர்.
இனி உருமி.....!
1498- வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியாக கள்ளிக் கோட்டையை முதன்
முறையாக அடைகிறான். கள்ளிக்கோட்டை மன்னர் சாமுதிரி தம்புரானிடம் மிளகு வணிகம்
குறித்து வாஸ்கோ முன்மொழிபவற்றை தம்புரான் மறுத்து ஒரு பிடி மிளகு மட்டுமே
கொடுத்தனுப்பி வைக்கிறார்.
லிஸ்பன் (போர்துகல்) திரும்பும் வாஸ்கோ 15 போர்க்கப்பல்களுடன் மீள
கேரளம் வருகிறான். அரபிக்கடலில் கேரளத்தினின்று மெக்கா யாத்திரை சென்ற மிரா எனும்
கப்பலை (400 பயணிகளுடன்) சிறை செய்கிறான். அக்கப்பலில் உள்ள பெண்கள்
தாமணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கொடுக்க முன்வந்தும் வாஸ்கோ ஒப்பவில்லை.
இந்நிலையில் கள்ளிக்கோட்டை சிரக்கல் கொத்துவாலின்(ஆர்யா) 8 வயது மகனுடன்
ஒரு பிராமணரை சமாதானம் பேச நடுக்கடலில் இருக்கும் வாஸ்கோவின் கப்பலுக்கு அனுப்பி
வைக்கின்றனர். வாஸ்கோ அந்த பிராமணனின் காதை அறுத்து அதற்கு பதில் நாயின் காதை
வைத்துத் தைக்கிறான். 400 பேர்களுடன் மிரா கப்பலை தீக்கிரையாக்குகிறான்.
காப்பாற்றச் சென்ற கொத்துவால் (ஆர்யா) வாஸ்கோவால் கொல்லப்படுகிறார்.
அங்கிருந்து தப்பிக்கும் சிரக்கல் கொத்துவால் மகனான கேளு எனும் 8
வயது சிறுவன் மனதில் இந்தக் கொடுஞ்செயல் ஏற்படுத்திய வடு வாஸ்கோவைப் பழிதீர்ப்பதே
தனது ஆயுளின் பயன் என அவனைக்கருதச் செய்கிறது. அதன் பின்னர் அவனது நண்பனான ஒரு
இஸ்லாமியச் சிறுவனுடன் அவனது வீட்டில் வளர்கிறான். மிரா கப்பலில் இறந்த பெண்கள்
வாஸ்கோவுக்கு கொடுத்து, அவன் மறுதலித்த பொன் நகைகளை உருக்கி ஒரு சுருள் வாள்
(உருமி) செய்கிறான். இதன் பின்னர் அவனது பயணம் வாஸ்கோவின் மரணத்தை நோக்கியது.
1502ல் காலனியாக்கம் துவங்கி
கோவா வரை போர்த்துக்கீசியர் வசமானதையடுத்து வைசிராயாக 1524ல் மீண்டும் கேரளா வருகிறான் வாஸ்கோ அவனது இரு
மகன்களுடன்.
இதனிடையில், நாடோடிகளாக அலையும் கேளுவும்(ப்ரித்விராஜ்) அவனது நண்பன்
வவாலியும் (பிரபுதேவா) சிரக்கல் மன்னரது
மனம் கவர்ந்து படை நாயகர்களாகின்றனர். சிறு சிறு ராஜாங்கங்களுக்கிடையிலான
பகைமையால் சிரக்கல் மன்னர் அரக்கல் சுல்தானாவான ஆயிஷாவை (ஜெனிலியா) சிறைப்பிடிக்க,
ஆயிஷாவின் பரங்கியர் எதிர்ப்பு நிலைபாட்டினாலும் அவள் மீதான காதலாலும் கேளு அவளைத் தப்புவித்து தஞ்சம்
தருகிறார். புத்தூரின் பழங்குடி மக்களை அணிதிரட்டி சுமார் 1000 பேர் கொண்ட படையினை
உருவாக்கி கேளு நாயர், வவாலி, ஆயிஷா ஆகியோர் வாஸ்கோவை பழிதீர்ப்பதாகச் செல்கிறது
உருமி.
உருமி
திரைப்பட்த்தின் ட்ரைலர் மற்றும் இதர விபரங்கள் இந்தச் சுட்டியில்












