Monday, December 19, 2011

முல்லைப்பெரியாறு அணையைக் காக்க சென்னையில் ஒன்றுகூடல்.

நேற்று காவிரியை மறுத்தார்கள்; இன்று முல்லைப் பெரியாறை மறுக்கிறார்கள். நாளை பாலாறு, பவானி ஆறு மறுக்கப்படும். தமிழகம் பாலையாகும்; தமிழன் தமிழ்நாட்டிலேயே அகதியாவான்.



நேற்று தமிழீழத்தில் 1.5 லட்சம் தமிழர்களும், தமிழகக் கடற்கரையோரங்களில் 543 மீனவர்களும் கொல்லப்பட்டனர். இன்று கேரளாவாழ் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். நாளை தமிழகத்தில் வாழும் நாமும் தாக்கப்படலாம். நம் தமிழனைக் காக்க, தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க, நம் வாழ்வின் ஒரு மணி நேரத்தை நாம் ஒதுக்கமாட்டோமா?

நம் தமிழ் சொந்தங்களுக்காக வரும் டிசம்பர் 25 ஞாயிறு அன்று மெரீனா கடற்கரையில், நீதி கேட்ட கண்ணகி சிலை அருகே மாலை 3 மணிக்கு ஒன்று கூடுவோம். கம்பம், போடி, தேனி மக்களுக்காக துணை நிற்போம்

Tuesday, December 6, 2011

சொல்வதெல்லாம் உண்மை - ஆக்சன் அன்லிமிடெட்!!!

நம்மூர் கொசுக்கள் 'ஆல் அவுட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி' எனுமளவு  கொசுவிரட்டிகளின் ஆற்றல் நீர்த்துப் போனது போல தமிழக தாய்க்குலங்களின் கண்ணீரை சுரக்கச் செய்யும் திறத்தை தொலைக்காட்சி சீரியல்கள் இழந்து விட்டன என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அஜால் குஜால் கள்ள உறவு தொடர்பான அதிசுவாரசிய காட்சிகள் நிறைந்து இருந்த போதிலும் எல்லாம் நாடகம் தானே என்று இப்போதெல்லாம் தாய்க்குலங்கள் சுரத்தே இல்லாமல் சீரியல்களைக் காணும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.

எனவேதான் நமது டிவி சேனல்கள் புரட்சிகரமான நிகழ்ச்சிகளைக் கொண்டுவரத் தீர்மானித்தனர். சமூகத்தின் எந்த மூலையில் பிரச்சனை என்றாலும் அவர்களை ஸ்டுடியோவுக்கு கூட்டிவந்து அவர்கள் பிரச்சனையைக் கேட்டறிந்து தீர்வு சொல்வதுதான் இந்தப் திட்டத்தின் ஒன் லைன்!



அமெரிக்காவில் வெற்றிபெற்ற டிவி ரியாலிட்டி ஷோக்களை உடனுக்குடன் சுட்டு ஹிந்தியில் ஸ்டார் குழுமம் படம் காட்டுவதும், அதே சூட்டில் ஸ்டார் விஜய்க்கு ரீமேக் செய்யப்படுவது மரபு! 

அந்த விஜய் டிவி சில வருடங்கள் முன்பு நடிகை லட்சுமியை வைத்து சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற வகையில் ‘கதையல்ல நிஜம்’ என்று கடை விரித்தது நினைவிருக்கலாம். 

 சின்ன வயதில் காணாமல் போன குழந்தைகள், பிரிந்து சிதறிய குடும்பம் இவற்றை கதையல்ல நிஜம் குழு இணைத்து வைப்பது போன்ற அட்டகாச திரைக்கதைகளுடன் மிக நல்ல டி ஆர் பி ரேட்டிங்கில் இருந்த அந்நிகழ்ச்சி ஒரு கட்டத்தில் பார்ப்பவர்களுக்கு போரடித்து போனதால் நிறுத்தப்பட்டது. சில மாதங்கள் முன்பு மீண்டும் தூசி தட்டியும் போனியாகாமல் இழுத்து சாத்தப்பட்டது. இதற்குக் காரணம் கதையல்ல நிஜத்தின் கண்ணீர் நிறைந்த  மூக்குச் சிந்தல் ரக திரைக்கதைகளின் தெரிவுதான். 

இவர்களது திரைக்கதை ஓட்டைகளை டிங்கரிங் செய்து கார சாரமான ஒரு ரியாலிட்டி ஷோவுடன் களமிறங்கியது Zee தமிழ் தொலைக்காட்சி! சூப்பர்ஸ்டார் சாம் ஆண்டர்சனின் மாஸ்டர் பீஸான ‘யாருக்கு யாரோ’- ஸ்டெப்பு நீ திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை வைத்துள்ள ஒரே தமிழ் தொலைக்காட்சி நிறுவனம்! மேற்படி திரைப்பட ஒளிபரப்பு தவிர இன்னொரு சிறப்புக்குரிய நிகழ்ச்சியையும் சில நாட்களாக நடாத்தி வருகின்றனர்! 

அதுதான் சன் நியூஸ் ‘வண்ண்ண்ண்ண்ணக்கம்’ புகழ் நிர்மலா பெரியசாமி அவர்கள் முன்னெடுத்து நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ 

நாம் மேலே கண்ட கதையல்ல நிஜம் கான்செப்ட் தான் என்றாலும் சொல்வதெல்லாம் உண்மை திரைக்கதை தேர்வில் கில்லாடிகள்! சுவாரசியம் மிகுந்த கள்ளத் தொடர்புகளை மிகச் சிறந்த வல்லுனர் குழுவைக் கொண்டு தேர்வு செய்து அமர்க்களப்படுத்துகிறார்கள்! இந்த நிகழ்ச்சிதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் தண்ணீர்க்குழாயடி! ஒரு தெருவிலிருக்கும் அக்கம்பக்க வீடுகளின் அந்தரங்கங்களை வெகு ஆவலுடன் கதை கேட்பவர்களா நீங்கள்!? வாரமலரில் முதல் வேலையாக அன்புடன் அந்தரங்கம் படிப்பவரா நீங்கள்?! அடுத்தவன் வீட்டுப் பிரச்சனையை அசை போடுவதில் அலாதி சுகம் காண்பவரா நீங்கள்!? ஆம் எனில் இதோ வந்துவிட்டது உங்களுக்கான பிரத்யேக நிகழ்ச்சி! சொல்வதெல்லாம் உண்மை! 

விஜய் டிவியின் கதையல்ல நிஜம் லட்சுமி ஒரு தோளில் டவல் போடாத விசு! பொசுக் பொசுக் என கண்ணீர் விட்டு விடுவார்! ஆனால் நம் நிர்மலா அக்காவோ செம கெத்து! ஓங்கி அறைஞ்சா ஒன்றரை டன் வெயிட்றா என்பது போல திண்ணமாக நின்னு ஆடும் பர்சனாலிட்டி! தனது வெண்கலக் குரலால் அதட்டுகையில் பொண்டாட்டிக்கு துரோகமிழைக்கும் கணவர்கள் அனைவருக்கும் ‘மணியேஏஏஏ மணியின் ஒலியேஏஏஏஏ’ என உள்ளூர அசரீரி கேட்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒப்பிடுகையில் வேறெந்த ரியாலிட்டி ஷோவையும் விட சொல்வதெல்லாம் உண்மை பக்கா மசாலா! இதன் காலத்திலேயே, இதே போல மற்றுமொரு மொக்கை சேனலான பாலிமரில் ஆரம்பிக்கப்பட்ட சக்திகொடு நிகழ்ச்சி இப்போது அட்ரஸின்றிக் கிடக்கிறது. இத்தனைக்கும் தமிழ்நாடு காவல் துறையையும் நீதித்துறையும் ஒரு சேர அலறவைத்த புரட்சித்தலைவி திருமதி.வனிதா விஜயகூ Sorry ஆகாஷ் / ராஜன் ஆனந்த் / மீண்டும் ஆகாஷ் அவர்களது இரும்புக் கரங்களால் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் சக்தி கொடு! ஆனால் சக்தியின்றி சவலையாகிவிட்டதுதான் மிச்சம்.

பெரும்பாலும் சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், கோவை, ஈரோடு புறநகர் பகுதிகளிலிருந்தும் வாதி பிரதிவாதிகள் அழைத்து வரப்படுகிறார்கள்! ஏனென்றால் கழுவிக் கழுவி ஊத்த கோவை ஸ்லாங்கும், மெட்ராஸ் ஸ்லாங்கும் தானே வக்கனையாக இருக்கும்! 

ங்கோ.. ங்கொ போன்ற ஜாக்கி ஸ்டைல் பொன்மொழிகளுக்கு பஞ்சமே இல்லை நிகழ்ச்சி முழுவதும்! சில நாட்களாக கெட்டவார்த்தைகளுக்கு க்கீங்ங்ங்ங்ங்ங்ங்.. என ஒலியெழுப்பிவிடுகின்றனர். அவ்வப்போது ஸ்டுடியோவுக்குள்ளேயே இருதரப்பும் மாறி மாறி அடி பிரித்து மேய்ந்து கொள்கின்றனர்! அது போன்ற ஆபத்துக்காலங்களில் அக்கா நிர்மலாவைப் பாதுகாக்க ஸ்டார் ஹோட்டல் பார்களில் இருக்கும் பவுன்ஸர்கள் போன்ற புஜபல பராக்கிரமசாலிகளும் உள்ளனர்! சண்டையில் யார் வாயிலாவது ரத்தம் வந்தவுடன் மேற்சொன்ன பவுன்ஸர்கள் சண்டையைத் தடுத்து சில நிமிடங்களில் ஷோபாக்கள், பூந்தொட்டிகளை ஒழுங்கு படுத்தி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தோதாக ஸ்டுடியோவைத் தயார் செய்து விடுகின்றனர்! 

நான் பார்த்த வரையில் ஒரு புருசன் பொண்டாட்டியைக் கூட அக்கா நிர்மலா பெரிய சாமி சேர்த்து வைக்கவில்லை. சில பல மாதங்களாக பிரிந்து வாழும் ஜோடியைக் கூட்டி வந்து, ஸ்டுடியோவில் சண்டை வைத்து, எபிசோடு முடியும் போது ரெண்டு பேருக்கும் ஒத்து வரலை பிரிஞ்சுடறது நல்லதுன்னு சொல்லிடறாங்க! நமக்கென்ன டவுட்டுன்னா அவுங்க ஆல்ரெடி பிரிஞ்சுதான இருந்தாங்க! இந்தக்கா என்னத்துக்கு கூட்டிட்டு வந்து மறுக்கா அத்து உடுதுன்னுதான்!  சரி என்னவோ கெரகம். நமக்கு செம டைம் பாஸ்! 

கண்ணீர் சொரியச் செய்யும் கதைகளை சம்மந்தப்பட்டவர்கள் வாயிலாகவே சொல்கையில் ஒரு பேக்ரவ்ண்ட் மீசிக்கை ஆன் செய்து விடுகிறார்கள்! அப்பப்பா! கல் நெஞ்சையும் கரைந்து வழியச் செய்யும் இசை அது! 

எதிர் / அண்டை வீடுகளில் உள்ள ஆன்ட்டிகளும் சொல்வதெல்லாம் உண்மையை தவறாமல் பார்க்கின்றனர் என்பதை இன்று காலை பேச்சுவாக்கில் அறிய நேர்ந்த போது வியப்புற்றேன்! ஒரு ஆன்ட்டி பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ‘சொல்வதெல்லாம் உண்மை பாக்கறீல்ல... அப்பிடில்லாமா கொடும படுத்தறான் உன்ற புருசன்? கொஞ்சம் நீதான் கண்ணு அனுசரிச்சுப் போகோனும்’னு சொல்லுச்சே பார்க்கணும்! இத்தனைக்கும் அவர்களெல்லாம் ஹார்ட்கோர் சீரியல் ரசிகைகள்! எப்படி சீரியலை விடுத்து நிர்மலாக்காவை நாடினர் என்பதை ஆராய்கையில் தான் ஹீட்டு தான் ஹிட் ரகசியம் என்பது புலப்பட்டது.

இதன் மாட்சிமைக்கு ஒரு சாம்பிள் பீஸ் வருமாறு!




தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஸீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை தான் சீரியல்களிடமிருந்து நமது தாய்க்குலங்களை மீட்டெடுக்கும் ஒளி விளக்கு! இதை உங்கள் வீட்டு மங்கைகளுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!(இதுவரை பார்க்காமல் இருந்தால்!) 
வருங்கால பெண்ணினத்தை வலிமையுடையதாக்குங்கள்!