Thursday, September 22, 2011

பரிசுத்த வேதகாமம்!-சொல்லாதவை இல்லாதவை அல்ல!



தோழி-காதலி! இவர்களிடையிலான வேறுபாடு காதல் தான் எனவும், தோழியிடம் காதல் கொள்வதெனில் அவளைக் காதலி என்றே அழைக்கலாமே என்பதாகவும் ஒரு கருத்து டுவிட்டரில் தோழி ;-) ஒருவரால் முன்வைக்கப்பட்டது! 

காதலற்ற நட்பு ஆண்-பெண் தோழமையில் சாத்தியமே இல்லையா என்ற விதத்தில் மேற்சென்றது அவரது வாதம்!

இது குறித்த விவாதம் முற்றுப்பெற்றது என்று சொல்வதற்கில்லை; ஆனாலும் நெடுநேரம் தொடர்ந்த இந்த உரையாடல் குறித்தான என்புரிதலை மீள்நினைவேற்றவும், தொகுக்கும் பொருட்டுமே இப்பதிவு.

பொதுவாக ஆண்-பெண் உறவானது அவ்விருவருக்கும் விருப்பமான ஒன்றாகத் தொடரும் நேர்வில், அவர்களிடையே காதல் இழையோடுவதென்பது தவிர்க்கவே இயலாதது. இங்கு ஆண்-பெண் உறவில் காதல் இல்லாத நேர்வே இல்லையா என்ற வினா எழும்போதுகூட, தங்கை-அண்ணன்,அம்மா-மகன்,மகள்-அப்பா,அக்கா-தம்பி போன்ற பிறப்பு மற்றும் சமூகக் காரணிகள் சார்ந்த உறவுகளை மேற்கோள் காட்ட இயலுமே அல்லாமல் தோழமையில் காதலற்ற நட்பைத் தேடுவது அல்லது தோழமையிலிருந்து காதலற்ற நட்பை தனித்துப்பிரிக்க முயலுவது போன்றவை அர்த்தமற்ற செயல்களாகவே செய்கின்றன.


மேலும், மேற்சொன்ன உறவுகளிடையேயும் கூட 100 சதம் முழுமையாய் காதல் உணர்வெழ வாய்ப்பே இல்லையென அறுதியிட்டுக் கூறுவது இயலாத ஒன்று. அவ்வப்போது நாம் ஊடகங்கள் வழியே கண்ணுறும்செய்திகளான முறையற்ற உறவுகளனைத்தையும் பாலியல் வறட்சி என்ற ஒரே வகைமையின் கீழ் பொருத்துவதும் தவறாகிறது. பாலியல் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேறு வழி இல்லாத மனிதர்கள் மட்டுமா மேற்படி செய்திகளில் இடம்பெறுகிறார்கள்? அல்ல.


 உதாரணமாக, நாம் காணும் அண்ணன் - தங்கை அல்லது அக்கா -தம்பி உறவின்முறை ஆண்-பெண்களில் மிக நெருக்கமான, புரிதல் மிக்க, மடியில் கிடத்தி தலைகோதும் அளவு அன்யோன்யம் மிக்க ஜதைகளை கருதுவோம். அவர்களது வாஞ்சை நிறைந்த தீண்டலில் காதல் இல்லாமல் இல்லை; எதிர்பாலினம் மீதான இயல்பான கவர்ச்சியும், வேட்கையும் சற்றும் இல்லாமல், மனதிற்கு பிரியமான ஒருவரை மடியில் கிடத்தி வருடுவது என்பது எவ்வளவு சாத்தியம் என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்! 

அவர்களிடையே ஊடாடும் காதலானது, நெடுங்காலமாய் அழுத்தமுறப் பொதிந்து வைத்த கட்டமைப்புகளின் பேரில் மறுக்கப்பட்டும், அவர்களது கற்பிதங்களால் மறைக்கப்பட்டும் வருகின்றன. இயல்பான ஒரு உணர்வை வெளிச் சொல்லமுடியாதபடிக்கு புறக்காரணிகள் தடை செய்கின்றன.
முரண்பாலுறவு என்பது மனிதன் வேறொரு விலங்கினத்தை புணர முற்படுவதாய் வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, மனிதன் தனது எதிர்பாலினமான எந்த ஒரு ஆண்/பெண் மீது கொள்ளும் காதல் உணர்வானது இயற்கையைப் போன்றே இயல்பான தூய ஒன்று.
[ஆண்-ஆண் காதலையே கூட இயற்கைக்கு முரணானது என நிறுவுவது மிகச் சுலபமான ஒன்றல்ல என்பதையும் கொள்க.]

மிகக் கம்பீரமான விலங்கான மனிதன் குழுவாக வாழ்தலின் பொருட்டு, ஏற்படுத்திக் கொண்ட வரைமுறைகளால் காயடிக்கப்பட்டு,பாலுணர்வு குறித்த இயல்பான வேட்கைகளிலும், உணர்வுகளிலும் சரிபாதியை இழந்தும் மறுக்கப்பட்டும் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளான்.

புராதன கிரேக்க சமூகத்தில், பெண்ணானவள் பிள்ளை பெற்றுத்தரும் எந்திரமாக மட்டுமே பார்க்கப்பட்டிருக்கிறாள் ; சமூகத்தில் பிரதானமாக அவள் வைக்கப்படவில்லை. அதுநாட்களில் ஆண்-ஆண் இடையிலான தோழமையே மதிப்பிற்குரிய காதலெனப்பட்டது. ஒரு அறிவிற்சிறந்த ஆடவனுடனான காதலானது அவனது தோழனுக்கு பெருமை தரத்தக்க விடயமாக இருந்தது.

டெமஸ்தனிஸின் ஒரு மேற்கோள் பின்கண்டவாறு செல்கிறது!

‘’சுகத்திற்கு விலைமாதர்,
வாரிசுக்கு மனைவி, 
காதலுக்கு நண்பன்’’

மனித வரலாற்றின் முந்தைய பக்கங்களில் ஆண்-ஆணிடையிலான தோழமையிலேயே காதல் செறிந்திருக்கையில், எதிர் பாலினத்துடன் காதலின்றி தோழமைகொள்வது தான் செயற்கையானதாகவும் ஆய்வுக்குரிய ஒன்றாகவும் இருக்கவியலும். அதைவிடுத்து, காதலற்ற ஆண்-பெண் நட்பை தூயதென நிறுவ முயல்வது பொய்க்கு கிரீடம் சூட்டுவதாகவே இருக்கும்.

இங்கு மேற்சொன்ன கருத்துகளை மறுதலிப்பதற்கான காரணிகளில் முதன்மையானது, தடுக்கப்பட்ட/மறுக்கப்பட்ட ஒரு உணர்வினை ஆம் என ஒப்புக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல். சில உண்மைகளை சீரணிப்பதில் உள்ள சிரமங்களைக் கடந்தும் அவர்களது மனம் இக்கூற்றிலுள்ள உண்மையை அறியும் என்ற நம்பிக்கையுடன் திருப்தி கொள்கிறேன்.

கருத்தில் மாறுபடும் பெண்களைப் பொறுத்த மட்டில், ஆண்-பெண் தோழமையில் உள்ள காதலினை மறுதலிப்பதன் மூலம் இதனை நட்பின் ஒரு தூய வடிவமாக நிறுவ முயல்கின்றனர். காதலன் என்ற இடத்தில் ஒருவன் மட்டுமே இருக்க முடியும் எனவும், மீதமுள்ள தோழர்கள் அனைவரிடமும் காதலற்ற நட்புமட்டுமே பாராட்டுவதாகச் சொல்லும் இவர்கள் ஏனைய தோழர்கள் அனைவரையும் சகோதர்களாகக் கருதி அவ்விதமே அழைக்குமாறு கேட்டால் மனம் ஒப்ப மறுக்கின்றனர். அதாவது ஆண்-பெண் தோழமை வேண்டும்! ஆனால் அதில் காதலும் அடக்கம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாது! இதுவே அவர்களது நிலைப்பாடு! 

எண்ணிப்பாருங்கள்! இப்பரந்த சமூகத்தில் நமக்கான காதலைத் தருவதற்கும், நாம் காதலைப்பெறுவதற்கும் ஒரு சமயத்தில் ஒரு ஆண்/பெண் தான் உண்டென்று வரையறுத்தால் எந்த மனித மனம் தான் ஒப்புக்கொள்ளும்!? ஆக, தோழமையில் காதலற்ற வெறும் நட்பு எனும் பெண்ணின் எடுகோளானது எதிர்பாலிடமிருந்து காதலை நிபந்தனையற்ற வகையில் பெறும் சவுகரியத்தின் நிமித்தம் கைக்கொள்ளப்படுகிறது என்பது எனது புரிதல்! இது ஒருவிதமான தற்காப்பு நிலை. மேலும், தப்பித்துக்கொள்ள தயாராக உள்ள ஒரு ஆயத்த நிலையாகவே படுகிறது!

இவற்றையெல்லாம் தவிர்க்கும் வண்ணம் காதலற்ற தோழர்களை சகோதரர்கள் என அழைக்கவும் கருதவும் கோரும் வாதம் அஸ்திவாரத்தையே அசைக்கின்றபடியால் அதனை ஏற்க அவர்களது மென் மனம் துணிவதில்லை. 

சொல்லாதவை என்றும் இல்லாதவையாகிவிடுவதில்லை...

தொடரும்! ;-)

இன்றும், இன்னமும் உடன் வரும் தோழிகளுக்காக...


மிகுத்துச் செறிந்த வாஞ்சையுடன் ராஜன்!

Sunday, September 18, 2011

எங்கேயும் எப்போதும் - ஏர்பஸ்ஸுல ஏறாதீங்கப்பா!



ஒரு படத்துல இத்தன ஃபிகர்களைக் காமிச்சத இதுக்கு முன்னால எங்கேயும் எப்போதும் நான் பாத்ததே இல்ல!
சும்மா 10 செகண்டுக்கு ஒரு ஃபிகர் ஸ்க்ரீன்ல எண்ட்ரி ஆவுது! மங்கை மடந்தை பேதை பெதும்பை பேரிளம்பெண்ணுன்னு சும்மா வளச்சு வளச்சு படம் புடிச்சுட்டாங்க! நாம்போன நேரம் முந்தின ரோ பிந்தின ரோன்னு பொண்ணுக கூட்டம் செகண்ட் ஷோலயும் ரொம்பி வழிஞ்சுது! 

டைட்டில் கார்டுல 40 பேராச்சும் வரும்னு நெனைக்கிறேன்! மீறிப்போனா ஒரு 8 பேர்தான் நாம முன்னமே கேள்விப் பட்டிருப்போம். ஃபாக்ஸ்காரனை எப்பிடி முருகதாஸ் அண்ணன், அண்ட்கோவுக்கு புடிச்சார்னு தெரில! அதென்னவோ தொலையுது... நாம உள்ளார போவோம்.

டைட்டில் முடிஞ்ச அடுத்த நிமிசமே ஒரு எஸ் இ டி சி பஸ்ஸும் பிரைவேட் வால்வோ பஸ்ஸும் நேருக்கு நேர் மோதிக்குது; எப்பிடின்னா நேத்து (17.09.2011) காலைல நம்ம கார்க்கி மேல ஒன்வேல ஆப்போசிட்டா வந்த ஆட்டோ மோதுனா மாதிரி! பினாகுனா:சிறு சிறு சில்ற மொக்கை அடிகளுடன் கார்க்கி நல்லாதான் இருக்கான்! குஜராத்து பொண்ணு வந்து மாவுக்கட்டு மேல கெட் வெல் சூன்னு எழுதும்ற நப்பாசைல சும்மாச்சுக்கும் நொட்டாங்கைக்கு கட்டுப் போட்டுருக்கறதா கேள்விப்பட்டேன்! 

ஆங் எங்க உட்டேன்.... ச்சை அதில்லய்யா.... ம்ம் மோதிக்குது... கார்க்கி பைக்கு மாதிரியே ரெண்டு பஸ்ஸுக்கும் முன் பக்கம் முழுசா முண்டக்கலப்பையாகிடுச்சு! ரத்தம்,சதை,ஓலம்,கதறல் அழுவாச்சியோட ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக் அதாவது 4 மணி நேரம் முன்னாடி பஸ்ஸுகள வாட்டர் வாஷ் உட்டு, ஏர் பிடிச்சு கிரீஸ் ஆயில்லாம் டச் பண்ணி கிளுகிளுப்பா ஷெட்ட உட்டு ஸ்டாண்டுக்கு கொண்டு வர்றதுல ஆரம்பிக்குது அந்த ஃபிளாஷ் பேக்!


ஒரு பஸ் சென்னைல இருந்து திருச்சி போகுதுஅதுக்குள்ள அனன்யா மட்டும்தான் மெயின் கேரக்டர்! இன்னொரு பஸ் திருச்சில இருந்து சென்னை போகுது; அதுக்குள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி மற்றும் இன்னொரு பையன்! இந்த செவத்த பையன எதோ ஒரு படத்துல கமலினி முகர்ஜி கூட பாத்தாப்டி நியாபகம்! இப்ப நியாபகம் வரமாட்டீங்குது சரி உடுங்க! ஆக இந்த நாலு பேர்தான் மெயின் கேரக்டர்கள்! 

இப்ப அனன்யாவிடமிருந்து இன்னொரு ஃப்ளாஷ் பேக்!  திருச்சில இருந்து ஃபர்ஸ்ட் டைம் சென்னைக்கு மெட்ராஸ்போபியா பயத்தோட ஒரு இண்டர்வியூவுக்கு வர்ற அனன்யாவுக்கு அட்ரஸ் கண்டுபிடிக்க உதவும் பையன் தான் முந்தைய பத்தில சொன்ன செவத்த பையன்! அந்த அட்ரஸ் கண்டு பிடித்து இண்டர்வியூ அட்டன் பண்ணி மறுபடி அனன்யாவின் ஒண்னுவிட்ட அக்கா வீட்டில் சேர்ப்பது வரை ஒரு பொழுது முழுக்க அம்மணியுடன் சுற்றுகிறார் அம்பி! இதுக்குள்ள ரெண்டுபேருக்கும் லவ்வு பத்திக்குது ஆனா சொல்லிக்கறதில்ல!

அடுத்த ஃபிளாஷ் பேக் அஞ்சலி-ஜெய் ஜோடியோடது! திருச்சியில் பக்கத்து தெரு அஞ்சலியுடன் மொட்டைமாடி சைட்டு காதல் கதை! இந்த போர்ஷன் செம லோலாயம்! ஜெய் பட்டைய கெளப்பிருக்கார்! அஞ்சலி பேசறதுதான் கொஞ்சம் ஓவராப்போச்சுது! ஆனாலும் ஒண்ணும் பிரச்சனை இல்ல! தக்காளி பழம் கணக்கா அம்மணி தள தளன்னு இருக்கு! 



அனன்யாவுக்கு உதவி செய்த கையோடு கிளம்பிவிடும் செவத்த பையன்மீது அனன்யாவுக்கு காதல் வந்து அக்கா வீட்டில் சொல்லி ஒரு தினுசாக ஓகே ஆகிவிடுகிறது. அடுத்து அவனைத் தேடிப்பிடிப்பதற்காக சென்னை வந்து முதன் முதலில் சந்தித்த கோயம்பேடு மொஃபசல் பஸ் ஸ்டாண்டில் கால் கடுக்க காத்திருந்து விட்டு பின் ஊர் திரும்ப பஸ் ஏறிவிடுகிறார் அனன்யா! || இடைச் செருகல்:அம்மணி முகம் முத்தி விட்டது, சில மச்சங்ககளை மேக் அப் போட்டு மறைத்திருக்கலாம்! தோள் பட்டை எதோ ஹேங்கரில் தொங்க விட்ட ஆஃப் ஹேண்ட் காட்டன்சட்டை போல தூக்கிக் கொண்டிருக்கிறது||  




அஞ்சலி-ஜெய் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் என்ற நிலையில் ஜெய்யின் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு அஞ்சலியை அழைத்துச் செல்கிறார் ஜெய்! அனன்யா சென்னையில் தேடுவது போலவே, திருச்சியில் அனன்யாவைத் துழாவிவிட்டு ஏமாற்றத்துடன் ஜெய்-அஞ்சலி பயணிக்கும் பஸ்ஸில் ஏறுகிறார் செவத்தபையன். இரண்டு பஸ்ஸுகளும்தான் முதல் பாராவில் சொன்னாமாதிரி மோதிக்கொள்கின்றன! யார் யாருக்கு என்னென்ன ஆனதுன்ற கிளை மேக்ஸ் அழுகாச்சி எபிசோட்! 

என்னடா கதைன்றீங்களா! மொக்கையா இருக்கில்ல கேக்கறதுக்கு!? ஆனா பாக்க அப்பிடி இருக்காது! அங்கங்க நல்ல காமெடி! மொக்கை போடாத சீன்கள், அழகழகா ஃபிகர்கள்னு படம் ஜம்முனு போய்டுது! அப்பப்ப ஹைவேஸ்ல வால்வோ பஸ்ஸுகள் பண்ணும் சர்கஸ் அளப்பறைகளை டிடிஎஸ்ஸில் கதறவிட்டு மண்டை வலிக்க வைத்தார்கள்! நடிச்ச கூட்டத்துல அத்தனை பேரும் சூப்பர்... ஜெய்,அஞ்சலி ஜோடி நடிப்பில் டாப்! கவுதம் படம் கணக்கா புதுப்பொண்டாட்டிய ஓவரா கொஞ்சிட்டே வர்ற மாப்புளை டென்சன் பண்ணுனான்! அஞ்சலி கொஞ்சம் ஓவரா பேசி பிளேடு போட்டுச்சு! மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்ல!

டைரடக்கர் அவர் வேலைல பாஸ் ஆகிட்டார்!
கேமரா மேன் எதோ தேவையான அளவு பாத்துட்டார்!
இசை:பாட்டு ஒண்ணும் வெளங்கலைன்னாலும், எரிச்சலூட்டல! பேக்ரவுண்டும் அதே கணக்குதான்!

ரெண்டு லவ் ஸ்டோரிய மாத்தி மாத்தி காட்டி சூடேத்துற படம் திடீர்னு சாலை விபத்து சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு படமாமாறிடுது! மெசேஜ்லாம் டைரக்டா சொன்னா கதைல இருந்து தனிச்சு போயிடுது! ஆனா படம் தப்பு சொல்லமுடியாது! நல்ல டைம் பாஸ்!  என்னளவில் கொஞ்ச நாளைக்கு ஹெல்மெட்டையாவது உபயோகிக்க வைக்கும் இந்தப் படத்தோட பாதிப்பு.மத்தவங்களுக்கு ஏர்பஸ்னாலே இனி வவுத்த கலக்க வைக்கலாம்! 

டைட்டில் என்னத்துக்கு எங்கேயும் எப்போதும்ன்றதுதான் கடைசி வரைக்கும் புரியல!  

Tuesday, September 13, 2011

இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா?!


மேலே தலைப்பில் காணும் வாக்கியம் நம்மிடையே சரளமாகப் புழங்கும் ஒன்று. பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் சிலர் பலியானதை சாதியின் பெயரால் உச்சபட்ச வன்மத்தோடு அணுகும் சில இழிபிறவிகளின் செயல்பாடுகள் பின் வருமாறு:






நடந்து முடிந்த அல்லது தொடர்ந்து கொண்டிருக்கிற கலவரத்தின் பின்னுள்ள அரசியல் ஒருபுறம் இருக்க, தென்தமிழகத்தின் ஆதிக்க சாதியினர் என்பதை பெயருடன் இணைத்து பெருமை ததும்ப இணையத்தில் உலவும் இவர்களுக்கு உயிரிழந்தவர்கள் தலித்துகள் என்பதாலும் நீண்டகால எதிர்சாதியினர் என்பதாலும் அவர்களது மரணம் கொண்டாட்டத்தை அளிக்கிறது. இவர்களிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் தான் தலைப்பில் உள்ள வாக்கியத்தை அவ்வப்போது பிரயோகித்துக் கொண்டிருக்கிறோம்.