Friday, April 22, 2011

போப்பாண்டவர் போட்ட கூப்பாடு!


போப்பாண்டவர் XVI பெனடிக்ட் இன்று ஒரு கூப்பாடு போட்டுக் கூவியுள்ளார். என்னவென்றால் கிறிஸ்தவத்தின் மீதான நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கே குறைந்து வருகிறதாம். அதற்குக் காரணம் என்னவென்றும் அந்த அப்பாட்டக்கர் கண்டு பிடித்துவிட்டார். மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கும் நாடுகள் தான் கிறிஸ்தவத்தின் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாம்! அதுவும் கிறிஸ்தவ மதத்தை வேராகக் கொண்டிருக்கும் நாடுகள் பலவும் தற்போது தமது பண்பாடு நம்பிக்கை இத்யாதிகளைத் துறந்து மதச்சார்பின்மை எனும் லுச்சாத்தனத்தால் பீடிக்கப்பட்டுள்ளனவாம்!


புனித வியாழன் தினத்தில் யாரோ பன்னிரண்டு பேரின் காலைக் கழுவிக் காயவைக்கும் சடங்கு ஒன்று நடந்திருக்கிறது! போப்பாண்டவர் அதில் கலந்து, கழுவிக் காயவும் வைத்து விழாவைச் சிறப்பித்திருக்கிறார். வருசா வருசம் இதெல்லாம் நடக்கறதுதான் ஆனால் இந்தவாட்டி நாக்குக்கு நடுவுல அரிப்பெடுத்துருக்கும் போல, அண்ணாத்த சும்மா வடிவேலு கணக்கா ஒளறித் தள்ளிப்புட்டார்!

வரும் மே ஒண்ணாம் தேதி மறைந்த போப்பாண்டவர்களை நினைவுகூரும் தினமாம்! அதுக்கு 3 லட்சம் கத்தோலிக்கர்கள் ரோமில் கூடுவார்கள் எனக் கருதப்படுவதால் கிறிஸ்தவத்தை மீட்டெடுக்க அன்றைய தினம் அடிக்கல் நாட்ட உள்ளாராம்!

இந்த சந்து கேப்புல ஆண்டவர் ஐய்யா உலகம் ஃபுல்லா இருக்குற பாதிரிகள் ஆங்காங்கே குழந்தைகளிடமும் பெண்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு செருப்படி வாங்குவதும், இதனால் மானம் கோவணமாய் பறப்பதும் அதை மறக்கடிக்கவும் சபையின் பெருமையை மீட்டெடுக்கவும் தாம் பிரயத்தனப் படுவதாகத் தெரிவித்திருக்கிறார்!

அமெரிக்கா போன்ற கிறிஸ்தவ வேர் கொண்ட (வல்லரசு அல்லது பெரிய )நாடுகள் மதச்சார்பின்மையைத் துறக்க வேண்டுமாம்! ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளை மத அடிப்படையில் பலப்படுத்த வேண்டுமாம்! மதச்சார்பற்ற பெரிய நாடுகள் கிறிஸ்தவ நாடுகளா மாறிட்டாலே தொங்கிக் கெடக்கும் சர்ச்சின் பெருமை தொன்ணூறு டிகிரில தூக்கிட்டு நிக்க ஆரமிச்சுடுமாம்!

மதச்சார்பின்மை என்பது ஒரு கிறுக்குத் தனம் எனவும் கண்டிப்பாக ஒவ்வொரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுவது அவசியம் என்பதும் போப்பாண்டவர் கூவலின் சாரம்!

கெழவனுடைய ஏத்தத்துக்கு அளவே இல்லாமல் போய் விட்டது! ரோமின் கலைஞ்சராக இருப்பார் போலிருக்கிறது!

சின்மயிக்கு வாழ்த்துக்கள்...



FORTUNE/U.S. State Department Global Women’s Mentoring Partnership Program


மேலே சொன்ன அவார்டை வாங்கிய சின்மயிக்கு வாழ்த்துக்கள். இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, மீனவர் பிரச்சனை என்று தமிழர்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளிலும் தமிழர்கள், தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான கருத்தை கொண்டிருந்தாலும், இப்படியான ஒரு ‘புத்திமதி’ (மெண்டர்ஷிப்) ப்ரொக்ராமுக்கு செலக்ட் ஆனதுக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா கடை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, April 20, 2011

ஆப்பைத் தேடிச் சென்று, தானே உட்கார்ந்த தானைத் தலைவன் தங்கபாலு.

பட்டாப்பட்டி கோபம் கொண்டாலும் பரவாயில்லை என்று, முதலில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திரு. தங்கபாலு அவர்களுக்கு நன்றியை தெரிவித்து பதிவைத் தொடங்குகின்றோம்.

இம்மாதம் 2 ம் தேதி அன்று ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் நால்வர் காணமல் போயினர். TN / 10 / MFB / 262 என்ற எண்ணுள்ள விசைப்படகில் சென்ற நால்வர்: விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோர். சில நாட்கள் கழித்து யாழ்ப்பாணம் அருகே இருக்கும் நெடுந்தீவு அருகே விக்டஸின் உடல் கரை ஒதுங்கியது. மேலும் சில நாட்கள் கழித்து தொண்டி அருகே இரு உடல்கள் கரை ஒதுங்கின. இந்த உடல்கள் அனைத்திலும் மிகப்பெரும் காயங்கள் இருந்தன.

கடைசியாக, கோட்டைப்பட்டிணம் அருகே கரை ஒதுங்கிய உடலைக் கண்டவர்கள் பதைபதைத்தனர். தலை துண்டிக்கப்பட்டு, ஒரு கை வெட்டப்பட்டு கரை ஒதுங்கிய உடலைக் கண்டு அனைவரும் அரற்றினர். ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்களும் உறவினர்களும் வந்து உடலை அடையாளம் காட்டியபின்பு அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இதற்கு முன்னர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இன வெறி பிடித்த சிங்களக் கடற்படை, கடந்த சில மாதங்களாக மிகவும் குரூரமான முறையில் தமிழக மீனவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் ஒரு மீனவரை சுருக்கிட்டுக் கொன்ற கொலைவெறிக் கடற்படை தற்பொழுது கழுத்தைத் துண்டித்துக் கொன்றுள்ளனர்.



தமிழக மீனவர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்ற சோனியாவின் வாக்குறுதி காற்றில் கரையும் முன்னரே, குரூரக் கொலைகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. இதனை வைத்து ஒவ்வொரு அரசியல்வியாதியும் தமது கட்சிக்கு ஏதேனும் ஆதாயம் இருக்குமா என்னும் நோக்கில் பலவித குட்டிக்கரணங்களை அடிக்கத்தொடங்கினர்.

இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்னர் தங்கபாலுவும் தன் பங்குக்கு போராட்டம் என்னும் பெயரில் ஒரு நாடகத்தை நடத்தினார். தன் கட்சியினரின் உள்ளடி வேலைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப இதனை அவர் மேற்கொண்டிருந்தாலும், வசமாக மாட்டிக்கொண்டார். இப்போராட்டத்தை நடத்தியதன் மூலம், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தனது குடிமக்களை காக்கத் தவறிவிட்டது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டு விட்டார்.


இந்தச் சூழலில் மீனவர் சங்கத் தலைவர்கள் நேற்று தங்கபாலுவின் கூற்றை அடிப்படையாக வைத்து தங்களது போராட்டங்களை இன்னும் கூர்மைப்படுத்தினர். சென்னையில், அனைத்திந்திய வானொலி நிலையத்தின் வாயிலருகே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரினர். அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி மீனவர் சங்கத் தலைவர்கள் ரூபேஷ், தயாளன், கபடி மாறன் உள்ளிட்ட பலர் வானொலி நிலைய வாயிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். எப்பொழுதும் இல்லாத ஆச்சரியமாக சில விஷயங்கள் நடந்தேறின. பெரும்பாலான ஊடகங்கள் இந்த நிகழ்வை படம்பிடித்தன. பொதுவாக மீனவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதாகும். ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டால், சென்னையில் இருக்கும் மீனவர்கள் போராட்டம் செய்வதில்லை என்றும் கூறுவர். ஆனால், உண்மை அப்படியில்லை. இவர்கள் நடத்தும் போராட்டங்களை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விடுகின்றன. நேற்று பல்வேறு தொலைக்காட்சிகளிலும் இந்தப் போராட்டம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கல்லுளி மங்கண்களான சகோதரர்களின் தொலைக்காட்சியிலும், கலைஞருக்கு சற்றும் தொடர்பே இல்லாத, ஆனால் அவரது இரண்டாவது மனைவியும், மூன்றாவது மனைவியின் மகளும் பங்குதாரர்களாக இருக்கும் தொலைக்காட்சியிலும், வழக்கம்போல் இந்தப் போராட்டம் பற்றிய செய்தி இடம்பெறவில்லை.

தனது குடிமக்களைக் காக்கத் தவறிய மத்திய அரசே பதவி விலகு என்னும் கோரிக்கையோடு இன்னும் முனைப்போடு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் மீனவர்கள். தங்கபாலுவின் கூற்றை அடிப்படையாக வைத்தே இனி வரும் போராட்டங்கள் அமையும் என்று மீனவர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் மேலிடம், தானே ஆப்பு அடித்துக் கொண்ட தங்கபாலுவின் ஆப்பை இன்னும் பலமாக அடிக்கும் நிலையில் உள்ளது.

கீறல் விழுந்த ரெக்கார்டைப் போல் சொன்னதையே சொல்லும் வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ், இன்று தனது திருவாய் மலர்ந்து "எந்தச் சூழலிலும் மீனவர்கள் கொல்லப்படக்கூடாது" என்னும் அதே டயலாக்கை 543 வது முறையாக அருளியுள்ளார்.

மீனவர் படுகொலையில் இருக்கும் வேறு சில உள் விவகாரங்களையும் பத்திரிகையாளர், போராளி திரு. TSS மணி அவர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்.

மீனவர் பிரச்னை தொடர்பான அனைத்து விஷயங்களும் www.savetnfishermEn.org தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. தளத்தோடு தொடர்பிலிருப்போம்; மீனவர்களோடு இணைந்திருப்போம்; படுகொலைகளைத் தடுத்திடுவோம்.

Saturday, April 9, 2011

சென்னை வந்தார் அன்னா ஹஸாரே!

நேரம் : மாலை 5 மணி
இடம்: நந்தனம் சிக்னல் அருகில்

பச்சை சிக்னலுக்காக காத்திருந்த வாகனங்களுக்கு இடையில் நமது நண்பர் தேவ் இன்னொரு நண்பரோடு தனது பைக்கில் காத்திருந்தார். அருகில் காரில் அமர்ந்திருந்த ஒரு குடும்பத்தினர் இவர்கள் கையில் இருந்த பதாகையைப் படித்து சற்று குழப்பமாக இவர்களை ஏறிட்டனர். அவர்களிடம் ஊழலுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்னும் சிறிது நேரத்தில் மெரினாவில் நடைபெறும் நிகழ்வு பற்றியும், தங்களுக்கு விருப்பமிருப்பின் கலந்து கொள்ளுங்கள் என்றொரு கோரிக்கையும் நமது நண்பர்கள் வைத்தனர். நிச்சயம் வருகின்றோம் என்று கூறிய அந்தக் குடும்பத்தினர் மெரினாவிற்கு வந்து நிகழ்வில் கலந்து கொண்டனர். முதலில் அவர்களை திரும்பி பார்க்க வைத்த அந்தப் பதாகையில் இருந்த வாக்கியங்கள்

I AM ANNA HAZARE




ஜன் லோக்பால் சட்ட முன்வரைவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவரது கையிலும் இது போன்ற பதாகைகளே இருந்தன. அங்கு இருந்த ஒவ்வொருவரும் தம்மை அன்னா ஹஸாரே என்றே உருவகித்துக்கொண்டனர். நாம் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது நேற்று (08/04/2011).

நேற்று காலையில் இருந்து தக்கர் பாபா வித்யாலாயா பள்ளியில் இருந்த ஆர்வலர்கள் பல்வேறு எதிர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்தனர். காலை அமைதியாக அமர்ந்திருந்த ஆர்வலர்களிடம் வந்த காவல்துறையினர், அனுமதியின்றி கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறினர். அனுமதி கோரியபோது மறுத்து விட்டீர்கள்; அதனால் வேறு வழியின்றி அனுமதியின்றி கூட்டம் நடத்துகிறோம் என்று ஆர்வலர்கள் கூறினர். இது சட்டத்திற்கு புறம்பானது; நாங்கள் உங்களை கைது செய்கின்றோம் என்றனர் காவல் துறையினர். நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; நாங்கள் எங்கள் கடமையை செய்கின்றோம்; கைதாவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூறிய ஆர்வலர்கள் தாமே சென்று காவல் துறை கொண்டு வந்திருந்த வாகனங்களில் ஏறி அமர்ந்தனர்.

அங்கிருந்த ஒரு கல்யாண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆர்வலர்கள் அங்கும் அமைதியாக அமர்ந்திருந்தனர். இடையிடையே சில கோஷங்களையும் எழுப்பினர். 15 நிமிடங்கள் கழித்து காவல் துறையினரே மீண்டும் அவர்களை அழைத்து வந்து அதே பள்ளியில் விட்டுச் சென்றனர். அமைதி வழியில் தமது ஆதரவை தெரிவித்த ஆர்வலர்கள் கைதுக்கு அஞ்சவில்லை என்பதை இச்செயல் உரக்க வெளிப்படுத்தியது.




மாலையில் மெரினாவில் கூடுவதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். ஆனால் தடை மீறிதான் நாம் அங்கு செல்கின்றோம். கைதும் செய்யப்படலாம். எனவே அதற்கு தயாராக இருப்பவர்கள் மெரினாவிற்கு வாருங்கள் என்று மாலையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கிருந்த அனைவரும் கைதிற்கு தயார் என்று ஒருமித்து குரல் எழுப்பினர்.

அங்கிருந்த கிளம்பி மெரீனா சென்று சேர்ந்த போது பெரும் போலீஸ் பட்டாளம் அங்கு காத்திருந்தது. ஆனால், வந்திருந்த ஆர்வலர்கள் யாரிடமும் அச்சமில்லை. காந்தி சிலை அருகே ஒன்று கூடிய ஆர்வலர்கள் அச்சமில்லை அச்சமில்லை என்று உரக்கக் குரல் எழுப்பினர். ஊழலுக்கு எதிராகவும், போராட்டத்தை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வந்திருந்த அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தினர். காந்தியின் உதவியாளர் கல்யாணம் வந்து சிறு உரையாற்றினார். அங்கிருந்த மாணவர்கள் ஊழல் பற்றிய ஒரு சிறு நாடகம் நடத்தினர். மெரினாவிற்கு வந்திருந்த வேறு பலரும் இவற்றைக் கண்டு அவர்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர். நேரம் செல்ல செல்ல கூட்டமும் குரலும் உயரத் தொடங்கியது. போலீசாருக்கு வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.



இரவு 8 மணிக்கு கலைந்து செல்லும் முன், அரசு அண்ணா ஹஸாரேயின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட செய்தி கிடைத்தது. அதனை கூறியதும், அனைவரும் மகிழ்வுற்றனர்.

இதே நேரத்தில் கோவையில் காவல் துறை அனுமதியோடு வ.ஊ.சி. பூங்காவில் பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி தமது ஆதரவை தெரிவித்தனர். அங்கிருந்த ஆர்வலர்கள் அனைவரும் மெழுவர்த்தி ஏந்தியிருந்தனர்.

------------------------------------------------------------------------------

ஊழலற்ற இந்தியா என்னும் நெடும்பயணத்தில் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி இது. சில நண்பர்கள் இப்போராட்டத்தை பற்றியும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களை பற்றியும் சில மாற்றுக் கருத்துகள் கொண்டுள்ளனர். ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது; சிறுகச் சிறுகதான் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு நடைபெறுபவற்றையும், மாற்றத்தையும் நாம் ஆதரிக்கின்றோம். இந்த முதல் அடி அடுத்தடுத்த அடிகளுக்கு ஊக்கமாய் அமையும். ஒன்றுபடுவோம்; தொடர்ந்து பயணிப்போம்.

Friday, April 8, 2011

அன்னா ஹஸாரே - தமிழகத்திலும் தொடங்குவோம்

சென்னையிலும், கோவையிலும் மற்ற பகுதிகளிலும் நடப்பது என்ன?

வட இந்திய ஊடகங்கள் பொதுவாக ஈரை பேனாக்கி, பேனை பெருமாள் ஆக்கும் வேலையை செய்வார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக அவர்கள் செய்யும் ஒரு விஷயம் ஒரு நல்ல நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படுவதை கண்டு மகிழ்கின்றோம். என்ன நடக்கிறது என்று முழுமையாக ஆராயாமல், சில முக்கியமான விஷயங்களை மட்டும் பார்ப்போம்.

1.76 லட்சம் கோடி. சமீபத்தில் நாம் கேள்விப்பட்ட தொகை இது. இது தவிர இதற்கு முன் நாம் கேள்விப்பட்ட வேறு சில வார்த்தைகள் தொலைபேசி துறையில் சுக்ராம், போபார்ஸ், கார்கில் சவப்பெட்டி, CWG, ஆதர்ஷ். இந்த வார்த்தைகளும், இந்தத் தொகைகளும் குறிப்பிடுவது என்ன? அரசியல்வாதிகள் எவ்வளவு ஊழல் செய்தாலும் தண்டனைகள் பெறுவதில்லை. இவற்றைக் களைய ஒரு அமைப்பு இருந்தால் எப்படி இருக்கும் என்னும் எண்ணத்தின் வடிவமே லோக்பால் என்னும் சட்ட முன் வரைவு. கடந்த 1968 முதல் பல்வேறு முறை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படாமல் கிடப்பில் இருக்கும் இன்னொரு முன் வரைவுதான் இது.

இந்த முன்வரைவினை சிறிது மாற்றி பொது மக்களும் சட்டம் இயற்றும் குழுவிலும், பிரதமர் உள்ளிட்ட மந்திரிகளின் ஊழல்களை விசாரிக்கும் அமைப்பிலும் இடம்பெற வேண்டும் என்னும் கோரிக்கையோடு அண்ணா ஹசாரே என்னும் சமூகப் போராளி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். முக இருந்த உண்ணாவிரதம் போலன்றி நிஜமான அக்கறையோடு 'நிஜமாகவே' உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்ணா ஹசாரேவிற்கும், ஜன் லோக்பால் சட்ட முன் வரைவிற்கும் ஆதரவு பெருகி வருகின்றது.

சென்னையில்:
தி.நகரில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்ள விருப்பமிருப்பவர்கள் தங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் இதில் கலந்து கொள்ளலாம்.

கோவையில்:
இன்று மாலை 5 மணிக்கு சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு கோவை வ.ஊ.சி பூங்காவில் நடைபெறுகின்றது.

ஊழலுக்கு எதிரான குரலை ஓங்கி ஒலிக்கும் நேரமிது. சிறிது நேரமேனும் நிகழ்வுகளில் பங்கெடுத்து அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை புரிய வைப்போம்.

தொடர்புக்கு:
கோவை: ராஜன்: 98431 20797
சென்னை: தேவ்: 98400 29617