Saturday, November 26, 2011

மயக்கம் என்ன! - A Film By Selvaragavan!

விஷூவல் மீடியம் கலை வடிவமான சினிமாவில், இந்தியப்படங்கள் தொட மறுக்கும் அழகுணர்ச்சியை வடிக்க பாலுமகேந்திரா போன்ற சிற்சில இயக்குநர்களே முயன்றிருக்கின்றனர். அவ்வகையில் சமகாலத்திய வெளிச்சம் செல்வ ராகவன். எல்லா படங்களிலும் End கார்டில் A Film By போட்டுக்கொள்கிறார்கள் தான், ஆனால் அதற்கெல்லாம் வக்கு இருக்கிறதா அந்தப் படங்களுக்கு என்றொரு கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் செல்வராகவன் படங்களின் நிறமும், அழகுணர்ச்சியும் இன்ன பிறவும் தனித்துவம் மிக்கவை.

செல்வராகவன் போன்ற இயக்குநரின் படங்களை மேற்கத்திய படங்களுடன் ஒப்பிட்டு குறைத்து எண்ணுவதும், சில பல மொக்கையர்களின் மொக்கைகளுக்கு ஜனரஞ்சகம் என்ற பெயரில் கிரீடம் சூட்டுவதும் என்னளவில் ஏற்புடையதாக இல்லை. 

ஒரு ஐரோப்பியன் பனி பொழியும் மலைச்சாரலை கேமராவில் படம் பிடிக்கிறான் என்றால் இங்கேயும் செட் போட்டு, தெர்மகோல் அட்டையை தூள் தூளாக்கித் தூவிக்கொண்டு அதைப் படம் பிடிப்பது மடத்தனம். கேமராவில் காட்சிப்படுத்த அவனுக்கு பனி மலை எனில் நமக்கு வறண்ட பாறையாக இருப்பதுதான் இயல்பான ஒன்று. பாவைக்கூத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் நமது சினிமா இருக்கும்! இருப்பது அழகு! பாடல்கள், நாடகத் தன்மை என நமது சினிமாவுக்கான வார்ப்பு சிதையாமல் இருப்பதே நல்லது என்பது என் துணிபு.

நம் வாழ்வியலை, அதன் நிஜத்துக்கு மிகவும் அண்மையில் காட்சிப்படுத்தும் கலை கைவரப்பெற்றவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் கிராமத்து மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த பூமி என படமாக்குபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். விதிவிலக்காக பாலு மகேந்திரா. மயக்கம் என்ன திரைப்படம் அவரது மாஸ்டர் பீஸ்களின் நிறத்தைக் கொண்டிருந்தது. நிஜத்துக்கு வெகு அருகில் நெருங்கி நின்றது என்றும் சொல்லலாம்.

மிகச்சிறந்த ஒரு நடிகனின் வெர்சடைல் ஆகிருதியை, திரையின் ஒரு மூலையில் தெரியும் தன் கண்களின் மூலம் கூட பார்வையாளனை கவர்ந்து ஈர்க்கும்; தன்னிடத்தில் ஒரு கூட்டத்தின் கருத்தை செறிவுடன்  நிற்கச்செய்யும் திறனை இதுவரை இல்லாத அளவு வெளிக்கொணர வாய்ப்பளித்திருக்கிறது கார்த்திக் கேரக்டர்! 

10 கதாபாத்திரங்களுடன் ஒரு ட்ராமா! யதார்த்தமான வசனங்கள், அழகிய கேமரா மொழி, வருடும் பின்னணி இசை, ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்கள். தனுஷ்-செல்வா காம்பினேஷன் - ஏமாற்றவில்லை.

மனதில் இருக்கும் ஸ்க்ரிப்டை போகிற போக்கில் ஷூட் செய்யும் செல்வராகவனின் வழக்கத்தாலேயே தென்படும் சிற்சில சொதப்பல்கள் மனதில் நிற்பதில்லை. 

படத்தின் மையம் தனுஷ்-ம் அவர் மூலம் வெளிப்படும் செல்வராகவனும் தான். வனவாழ்வு சார் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஹீரோ, மறுக்கப்படும் திறமை, காதல், சகிக்கவொட்டாத துரோகம், ஏமாற்றம், விபத்து, மனநிலை பிறழ்வு, காதலின் அரவணைப்பு, அதிர்ச்சி, மீட்சி, வெற்றி. இதுதான் கதைப்போக்கு! இதில் தனுஷ் மட்டுமின்றி ஏறக்குறைய எல்லோருமே நடிப்பில் சராசரிக்கும் மேலே! 


முதலில் தனது நடிப்பில் அன்னியமாகப் படும் ரிச்சா இரண்டாம் பாதியில் தனுஷுடன் போட்டி போடுகிறார். அதீத மனநிலை கொண்ட தனுஷால் கீழே தள்ளிவிடப்பட்டு கர்பம் கலைந்து ரத்தம் நிலமெல்லாம் பரவும் காட்சியில் தனுஷின் எக்ஸ்பிரஷன்ஸும் அதற்கடுத்து ரத்தக் கறை காய்ந்து படிந்த அந்த ஃப்ளோரை சுத்தம் செய்கையில் கதறும் ரிச்சாவின் நடிப்பும் அசாதாரணம். காய்ந்த ரத்தம் தனது குழந்தை என புரிந்து அழுவதுடன் மனச்சிதைவிலிருந்து மீள்கிறான் எனச் செல்கிறது திரைக்கதை.

டேட்டிங் காதலனின் நண்பனை நாயகி காதலிப்பது, நாயகனின் தங்கையை டேட்டிங் காதலன் கைப்பிடிப்பது போன்றவை வலிந்து திணிக்கப்பட்டவையாகவோ, விசித்திரமானவையாகவோ எனக்குத்  தோன்றவில்லை. இன்றைய நிதர்சனம் இதை ஒட்டியே இருக்கிறது.

விபத்தால் மனச்சிதைவில் இருக்கும் தனுஷின் மீது அன்பைச் சொரியும் ரிச்சா, அவ்விடத்தில் மிக அழகாய்ப் பொருந்தும் பிறைதேடும் பாடல், சைந்தவியின் குரல் ஆகியவை அன்பாய்(!)  இருக்கின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண வாழ்வை அசாதாரணமாக்கும் சில நிகழ்வுகளின் தொகுப்பாய் இந்தக் கதை மிக அழகான சினிமா! 

மனித மனத்தின் பக்கங்களை சினிமாவில் விரிக்கும் செல்வராகவனின் ரசனை, தெரிவு முதலியவை பாராட்டுதல்களுக்குரியவை. இறுதிக்காட்சிகளில் சுபம் போட மெனக்கெடுவது போன்ற கிளிஷேக்கள் செல்வராகவனின் நெகடிவ் கிளிஷேவைத் தவிர்த்த வகையில் ஓகே!


தனுஷைத் தவிர வேறெவரும் செல்வாவுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்! வெகுஜன ரசனைக்கு உகந்த படமாக இருக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்தப்படம் செல்வராகவன் பந்தயத்துக்கு விட்ட குதிரையாக இருக்காது என நம்புவதால் அதைப்பற்றிக் கவலை இல்லை.

வேறெதனுடனும் ஒப்பிட முயலவில்லை. ஒப்பீட்டளவில் சினிமா பார்ப்பது என் வழக்கமும் அல்ல. என் வரையில் மயக்கம் என்ன என்ற வினா வாக்கியத்தின் முடிவில் வினாக்குறியை அல்ல வியப்புக் குறியிடவே செய்வேன்! 

ராஜன்.