Friday, August 12, 2011

பேரறிவாளனிடமிருந்து ஆறறிவாளர்களுக்கு...

மரணம் யார் அடைகிறார்கள் என்பதைப் பொறுத்து துக்கமோ ஆசுவாசமோ அடையும் மனித மனம் மரண தண்டனையையும் அதே நோக்கில் அணுகுகிறது. மரணம் எதைவிடவும் கொடுமையானது அல்ல; ஆனால் தண்டனையாக வழங்கும் மரணம் என்பது உச்சபட்ச சித்திரவதை. கழுவேற்றும் கணம் குறித்து சொல்லவில்லை அதற்காய் காத்திருக்கும் காலம் குறித்தே சொல்கிறேன். நீதி நியாயம் என்பவையெல்லாம் அப்பதங்களுக்குண்டான வரையறையினிமித்தம் வழங்கப்படுமானால் தண்டனைகளின் பொருட்டு இவ்வளவு விவாதங்கள் எழ வாய்ப்பற்றுப் போயிருக்கலாம். ஆனால் நிதர்சனம் அவ்வாறல்லவே. இன்று இந்திய அரசினால் மரண வாசல் நோக்கி நிறுத்தப்பட்டிருப்போரில் இருவர் பேரறிவாளன் மற்றும் அஜ்மல் கசாப்.

மேற்சொன்ன இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் வேறுபடலாம்; ஆனால், இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டபோது அவர்களது வயது 20க்குள். அஜ்மல் கசாப் விசயத்தில் இந்திய அரசு செலவிடும் பணம், மெனக்கெடும் விதம், அவற்றால் கண்ட பலன் முதலியவற்றைக் கருதி மீடியாக்களும் மக்களும் வெளியிடும் அதிருப்தி ஒரேவிதமானது. அதுவும் அதற்கடுத்த தீவிரவாதத் தாக்குதல் மும்பையில் நிகழ்த்தப் படுகையில் அஜ்மலை உடனடியாக தூக்கிலிடக்கோரிய வாதங்கள் வலுப்பெற்றன.

கோவையில் சிறுமியைக் கடத்திக் கற்பழித்தவனை என்கவுண்டரில் கொன்றபோது தோன்றிய நிம்மதி அஜ்மல் கசாப் விசயத்திலும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.பொதுமக்கள் அல்லது மக்களில் ஒரு சாரார் கொண்டுள்ள ஒட்டுமொத்த கோபமும் நீதித்துறையும் அரசும் வழங்கப்படும் தீர்ப்பில் தொனிக்க வேண்டும் என்றால் அது நீதியாக இருக்காது.

பேரறிவாளன் குறித்து பேசும் வேளையில் நாம் அஜ்மல் கசாபை நோக்கும் பார்வயில்தான் எஞ்சிய இந்தியா முழுமையும் பேரறிவாளனைப் பார்க்கின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கசாப் துப்பாக்கியால் அப்பாவிகளை சுட்டான் பேரறிவாளன் அப்படியா என்ற தர்க்க நியாயங்களை நாம் முன்வைக்கும் போது அதுபொழுதில் மரண தண்டனை என்பது நீதிக்கு வழங்கப்படுவதை உண்மை நிலை அறிந்த ஒவ்வொரு மனிதனும் உணரமுடிகின்றது. அதைத் தவிர்த்து கசாப் விசயத்தில் உடனடித் தீர்ப்பை மனம் தேடுகிறது. இங்கு அஜ்மல் கசாப்பிற்கு மரண தண்டனை வழங்கிவிட்டால் பயங்கரவாதிகள் நாசச் செயல்கள் புரிய பயப்படுவார்கள் என்று வாதிடுவோர் உளரெனில் அதைத் தாண்டிய முட்டாள்தனம் இருக்கவியலாது. 

பேரறிவாளன் குறித்து வாதிட நாம் உள்ளோம். தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய வழக்கு அது. எனவே அதன்பால் உள்ள நியாயம் குறித்து வெளிவரவாவது செய்கிறது. இன்றைக்கு இந்தியாவின் ஒரு கடைக்கோடி கிராமத்தின் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளரும் அப்பகுதியின் சாதி/அரசியல் பலம் பெற்ற ஒரு பஞ்சாயத்து தலைவரும் சாட்சி சொல்ல பத்து பேரும் இருந்தால் சில கொலைகளையும் கற்பழிப்புகளையும் செய்துவிட்டு ஒரு ஏழை அப்பாவியின் பேரில் வழக்குப் பதிந்து அவனை கொடூர கொலைகாரனாக நீதிமன்றத்தின் நிறுத்த முடியும் என்பதன் சாத்திய விழுக்காட்டினை கருதுக. எனில் இந்த சாதாரணின் நியாயம் எவர் கருத்துக்கு வருகிறது? இப்படியாக இதுகாறும் மரணித்தவர்கள் எத்தனை பேர்? ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதை முக்கிய எடுகோளாகக் கொண்டிருக்கும் ஒரு நீதி அமைப்பில் மரண தண்டனை என்று ஒன்று இருப்பதே முரணானது. 

உண்மையில் தவறிழைத்தவர்களுக்கு திருந்த வாய்ப்பளிப்பதற்கே தண்டனைகள் எனில் மரணத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டவனுக்கும் நீதிக்கும் கிடைக்கக் கூடிய பலன் என்ன? ஆயுள் தண்டனைக்குரிய குற்றத்தினை தைரியாமகவும் மரண தண்டனைக்குரிய குற்றத்தினை மட்டும் பயந்து ஒதுக்கியும் மக்கள் வாழ்வர் என்ற நினைப்பா? கண நேர உணர்ச்சியில் கொலைக் குற்றங்கள் புரிபவனாகட்டும், திட்டமிட்டுப் படுகொலைகள் புரிந்தவனாகட்டும், மனிதனே அல்ல இவன் மிருகம் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் விரல் சுட்டப்படுபவனாகட்டும் எவன் ஒருவனுக்கும் வழங்கப்படும் மரண தண்டனையின் போது அங்கு நீதியே மரணிக்கிறது என்பேன் நான். 

இன்று பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோர் தூக்குக் கயிற்றின் முன் நிற்கும் இந்நிலையில் அவர்களது குற்றம் இவ்விடயத்தின் பின்புல அரசியல் ஆகியவற்றைத் தாண்டி அவர்கள் மரணிக்கக் கூடாது என்று நினைப்பதற்கான காரணமாக மனிதத்தைக் கொள்ளுங்கள் தயவு செய்து... நாம் சார்ந்த அல்லது நம்மைச் சார்ந்த ஒருவருக்கு மரணம் அறிவிக்கப்பட்டு தண்டனையாக வழங்கப்படுவதன் கொடூரத்தை உணருங்கள். 


இந்திய நீதி அமைப்பில் மரணம் என்ற வாய்ப்புகளை மறுக்கும்/ நீதியை குழிதோண்டிப்புதைக்கும் தண்டனை முறையை ஒழிப்பதன் அவசியத்தை உணர இது தமிழர்களுக்கான தருணம். உணர்வு ரீதியாக இப்பிரச்சனையை நாம் அணுகும் விதத்திலேதான் ஒவ்வொரு மரணதண்டனைக் குற்றவாளியைச் சார்ந்தோரும் அணுகுவார்கள் என்பதை அறிய முனைவோம். மரணத்தை வழங்குவது என்பது தண்டனை அல்ல. சரிபாதி விழுக்காடு தவறாகக் கூடிய சாத்தியமுள்ள விசாரணை அமைப்புகளில் குற்றஞ்சாட்டப்படுபவருக்கு அவரது வாழ்வை முற்றுப் பெறச் செய்யும் நிகழ்வு மிகக் கொடூரமான ஒரு முட்டாள் தனம் என்றறியச் செய்வோம்.

இணையப் பயனாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடைமுறையை மத்திய அரசு  முன்னெடுத்திருக்கும் இச்சமயத்தில் மரண தண்டனையை கைவிடக் கோரும் பதிவுகளை இயன்ற அளவு தங்கள் சமூக வலைதளங்களின் மூலம் விரவச் செய்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்,


ராஜன்