Friday, March 18, 2011

தேர்தல் அறிக்கை - சாவுக்கு சலவை நோட்டு


ஒரு ஓட்டுக்கு கருணாநிதி எவ்வளவு பணம் கொடுப்பார், ஜெயலலிதா எவ்வளவு பணம் கொடுப்பார் என்று ஒவ்வொருவரும் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இன்று மதியம் தான் சாப்பிடவேண்டிய மாத்திரைக்கான பணத்திற்கு வழியில்லையே என்று புழுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பரிதாப ஜீவன்தான் கீழிருக்கும் புகைப்படத்தில் இருப்பவர்.




பெயர்: ராஜா முகம்மது.
வயது: 42
ஊர்: ஜெகதாப்பட்டிணம் (புதுக்கோட்டை மாவட்டம்)
தொழில்: இலங்கைக் கடற்படையினருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு நேர்ந்து விடப்பட்ட தமிழக மீனவன்.

சுடப்பட்டிருந்தாலும் எப்படி இது போன்ற தீப்புண்கள் என்று தோன்றலாம். ஆனால், இவர் தாக்குண்டது பெட்ரோல் குண்டு வீச்சில். உடலில் பற்றிய தீயோடு கடலில் நீந்தி கரை சேர்ந்த அவரை ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழக மீனவர்களை வைத்து நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு ஒரு காட்சி கிடைத்ததாக குதூகலித்தார். பால்வளத்துறை அமைச்சர் மதிவாணனையும், கூடவே சன் டி.வி. கேமராமேனையும் அனுப்பி, ஐம்பதாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கியதாகவும், ஆறுதல் கூறியதாகவும் ஒளிப்பதிவு செய்து, தங்கள் நாடகத்தின் காட்சியொன்றை தமிழகம் முழுக்க ஒளிபரப்பி தம்பட்டம் அடித்துக்கொண்டார். சாவுக்கு சலவை நோட்டு திட்டம்; காயத்திற்கு கரன்சி உதவி திட்டம் என்றெல்லாம் கூட அறிவிக்கலாம் அரசியல்வாதிகளும்; அவர்தம் நாடகங்களும்.

திமுகவினரின் அன்றைய நாடகக்காட்சி அவர்கள் அளவில் முடிவுற்றது. ஆனால், உடல் முழுக்க தீப்புண்களோடு மருத்துவமனையில் இருந்த ராஜா முகமதுவிற்கு அரசுப் பணம் யானைப் பசிக்கு சோளப் பொரியாகிப் போனது. உடல் தேறாமலே, கையில் பணமில்லாத நிலையில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டவர் இன்னும் படுக்கையில்தான் இருக்கின்றார்; தீக்காயங்களோடும், வைத்தியம் பார்க்க பணமில்லையே என்னும் மனக்காயங்களோடும்.

தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் கையிழந்து, காலிழந்து, தொழில் செய்ய வலுவிழந்து நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர். அந்நிய நாட்டுப் படையால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட தன் நாட்டு குடிமகனைக் காக்க வக்கில்லாத அரசு, தன் குடும்ப வளத்தை பெருக்குவதில் மட்டும் முழு கவனம் செலுத்தி வருகின்றது.

இதுபோன்ற தாக்குதல்களும் கொலைகளும் இனியும் நடைபெறக்கூடாது என்னும் நோக்கில் இணைய நண்பர்களால் முன்னெடுக்கப்பட்ட #tnfisherman போராட்டம், இணையம் கடந்து பல மட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றது. அதன் ஒரு முகமாக பல்வேறு இணைய நண்பர்கள், நாகப்பட்டிணம் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான மீனவப் பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை திரட்டி வந்துள்ளனர்.

இதுவரை நாம் மேற்கொண்ட செயல்களை பரிசீலிக்கவும் (Review), அடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை ஆலோசனை செய்யவும் வரும் ஞாயிறு அன்று #tnfisherman ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

நாள்: 20/03/2011
நேரம்: மாலை 5 மணி.
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்) மேற்கு KK நகர்.

அன்றைய கூட்டத்தின் திட்டம்:
1. முதல் ஆலோசனைக் கூட்ட முடிவுகளும், நடைமுறைப்படுத்தப்பட்டவையும் - அறிக்கை வாசிப்பு.
2. மீனவர்கள் வாழ்வில் - மீனவர் சங்கப் பிரதிநிதியின் உரை
3. மீனவர்கள் சந்திப்பு - பயணம் சென்ற நண்பர்களின் உரை.
4. மீனவர் ராஜா முகமது - நமது பங்களிப்பு என்ன?
5. ஆர்வலர்களின் கருத்துகளும், கலந்துரையாடலும்.

நம் சகோதரர்களுக்காக செயல்படும் நாம், அனைவரது கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிடும் இக்கூட்டத்திற்கு #tnfisherman ஆர்வலர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

www.savetnfishermEn.org சார்பாக
கும்மி.

12 comments:

நந்தா ஆண்டாள்மகன் said...

ஆதரவு எப்போதும் உண்டு.

ராஜ நடராஜன் said...

//சாவுக்கு சலவை நோட்டு திட்டம்; காயத்திற்கு கரன்சி உதவி திட்டம் என்றெல்லாம் கூட அறிவிக்கலாம் அரசியல்வாதிகளும்; அவர்தம் நாடகங்களும்.//

நச்:(

ராஜ நடராஜன் said...

கும்மி!சமூக களத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு அன்பும் ஆதரவும் வாழ்த்துக்களும்.

செந்தழல் ரவி said...

எமது பங்களிப்பும் இருக்கும் !!

கே.ஆர்.பி.செந்தில் said...

ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு அன்பும் ஆதரவும்...

கும்மி said...

ஒவ்வொரு மீனவருக்கும் பொருளாதார ரீதியாக உதவுவது என்பது நடைமுறை சாத்தியங்களற்றது. தற்பொழுது நம் கண் முன் தெரியும் ஒரு சகோதரரின் அவல நிலையைத் தீர்க்க ஏதும் செய்ய முடியுமா என்னும் நோக்கிலேயே அவருக்கு பணம் வசூலித்து உதவ முடிவு செய்யப்பட்டது.

இதுவரை Rs. 15000 சேர்ந்திருக்கின்றது. வரும் ஞாயிறு கூட்டத்திற்கு பிறகு சேரும் பணத்தையும் சேர்த்து திரு.ராஜா முகம்மது அவர்களுடன் சேர்ப்பிக்க உள்ளோம்.

பொருளாதார ரீதியாக பங்களிக்க விரும்புபவர்கள் பதிவர் மா. சிவகுமார் அவர்களை தொடர்பு கொள்ளலாம். ஞாயிறு கூட்டத்திற்கு பிறகு வேறு ஏதேனும் பங்களிக்கும் வழிமுறைகளையும் மேற்கொண்டால் அவற்றையும் குறிப்பிடுகின்றோம்.

திரு. ராஜா முகமது தற்பொழுது வசிக்கும் ஜெகதாப்பட்டிணம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பதிவர்கள் பணத்தை நேரில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ளலாம். மீமிசல், தொண்டி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம் பகுதிகளை அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆர்வமிருக்கும் பதிவர்கள் தகவல் தெரிவிக்கவும்.

விந்தைமனிதன் said...

நாளைய கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். நேரில் பேசுவோம்

மணிஜீ...... said...

ஞாயிறு நான் ஊரில் இல்லை..அண்ணன் உண்மைத்தமிழன் மூலமாக தொடர்பு கொள்கிறேன்...

ஜோதிஜி said...

சமூக களத்தில் ஆக்கபூர்வமாக செயல்படுவதற்கு ஆதரவும் வாழ்த்துக்களும்.

கும்மி said...

இதுவரை சேர்ந்திருக்கும் தொகை Rs.18500.

விபரங்களுக்கு மீனவர் ராஜா முகமதுவுக்கு உதவி செய்யும் நிதி விபரங்கள்

.

ஆர்.சண்முகம் said...

சாவுக்கு சலவை நோட்டு தலைப்பு சூப்பர் கும்மி

சாமக்கோடங்கி said...

சொல்வீரர்களை விட சில செயல்வீரர்கள் தான் நாட்டை வழி நடத்துபவர்கள்.. உங்களுக்கு ஆதரவு எப்போதும் உண்டு.