
முதுகெலும்பு நிமிர்ந்து நடக்கத் துவங்கிய மனிதன் நாடோடி வாழ்வை விடுத்து ஆற்றங்கரை களிலும் , மலைக் குகைகளிலும் வசிக்கத் துவங்கியிருந்த நாட்களில் சூரியன்,மழை,மின்னல், இடி போன்றவை குறித்த ஆச்சர்யங்களும் தன் வலிமைக்கு மீறிய இயற்கை சக்திகளைக் கண்டு ஒருவித மிரட்சியும் ஏற்பட்டன . நெருப்பின் மீதும் மேற்சொன்ன அச்சம் நிலவியபோதும் தொட்டு ,சுடுபட்டு பின் மீண்டும் நெருங்கி பலவித பரீட்சார்த்தங்களுக்குப் பின்னர் நெருப்பின் உச்ச பட்ச வலிமையையும் அதனை அடிமையாக்கும் வித்தையையும் கண்டு கொண்டான் .
நெருங்க வியாலாத அதீத சக்தியுடைய இயற்கையை கண்டு அஞ்சிய மனிதன் தனது பயம் குறித்து சக மனிதர்களிடம் பகிர்ந்த விடயம் பரவி நீண்டதில் எதோ ஒரு முடிச்சில் தமக்கான கட்டுப் பாட்டு இயக்கத்தின் செயல் இவை என அவனுக்கு கற்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.
பிந்தைய நூற்றாண்டுகளில் உலகம் முழுமையும் இருந்த பழங்குடியினத்தவர்கள் தத்தம் இனக்குழுக்களுக்கென பிரத்யேக இறை அடையாளம் கொண்டிருந்தனர். பல்கிப் பெருகிய மனிதப் பெருக்கம் நிலப் பகுதியின் பெரும்பான்மையை அடைத்து வாழத் துவங்கிய காலத்தில் இன்றைய பெரு மதங்களின் தோற்றம் துவங்கின .

கம்பீரமாக உலா வரும் காளையினை ஏரில் பூட்டி உழவு செய்யப் பணிக்கக் கூடுமா ? கற்பனை செய்து பாருங்கள் ! - அதன் இயல்பான குணமே மேய்ச்சலும் ,புணர்ச்சியும் தான் ; அதனைக் காயடிக்கும் செயல் மூலமாக காளையினது இயல்பினைத் திரித்து ஏர் பூட்டி அதனை அடிமை செய்யும் நிகழ்வை மத நஞ்சு புகட்டப் பட்ட மனிதனுக்கு ஒப்பிடலாம் .
அவனை எது குறித்தும் ஆய்ந்தறிய முடியாத படிக்கு , காயடித்து ஆண்டவன் மீது வினா எழுப்பாது மண்டியிடப் பணித்து , நாளடைவில் மதம் ,இறைவன் குறித்து கேள்வியெழுப்பும் குணமே அற்றுப் போகும்படியாய் தகவமையச் செய்துவிட்டனர் . மத போதனாவாதிகளால் அது முழுமையும் கைக் கூடவில்லை. என்ற போதும் பெரும்பான்மை மனிதன் அவர்கட்கு இரையானான் . போதித்தவன் மறைமுகமாய் இறையானான்!
புதிதாய் ஜனித்த பிள்ளை தாயின் மார் தேடித் புசிக்கும் நிகழ்வைக் கூட இறைவன் திருவருளால் எனப் பெயரிட்டழைக்கும் முட்டாள் தனத்தை என்னென்று விளிப்பது? காணும் எதனையும் ஆய்ந்தறியும் இயற்கை குணத்திற்கும் , ஏதுமற்ற பெருவெளியில் இறைவனைக் கற்பனை செய்யும் மூடத் தனத்திற்கும் இடையில் துருவ வேறுபாடுகள் .
யார் சொல்லியும் ஆய்ந்தறியும் குணம் மனிதனுக்கு வந்ததில்லை , இங்கு எவர்க்கேனும் கடவுள் குறித்த பிரக்ஞை சுயமாய் வந்ததுண்டா? இதற்கும் ஆம் ! உண்டு என பதில் சொல்பவர்கள் இருப்பின் அஃதொன்றே சாட்சியம் கூறும் மூடத் தனத்தின் முத்தாய்ப்பே கடவுள் கோட்பாடு என்பதற்கு !
இன்றைய அறிவியல் யுகத்திலும் மர்மம் விலகாத, விடை காணப் படாத கேள்வ்கள் ஏராளம் விரவியுள்ளன . அவை போன்றே இறைவனும் என்றொரு வாதம் (விதண்டா) முன் வைக்கப் படுகிறது . புலப் படாதவற்றின் முன்பு பணிந்து விழுவது பகுத்தறிவுடைய மனிதர்க்கு அழகல்ல . எவனோருவனும் அடிமைஎனத் தனை நிலை நிறுத்துவதால் மனிதம் ஒரு போதும் வளர்வதில்லை . இயற்கையின் சூழலில் கோடிக் கணக்கான் உயிரினங்கள் சற்றேனும் கவளுய் கொள்ளாத இறை எனும் கோட்பாட்டின் மீது , தனித் தன்மை வாய்ந்த பகுத்தறியும் திறன் பெற்ற விலங்கான மனிதன் மட்டும் வணங்கிப் பணிவதும் அதன் பெயரால் சக மனிதரிடையே பகைமை பாராட்டுவதும் போரிட்டு மடிவதும் மனிதம் என்ற பதத்தினை பதம் பார்க்கும் கூர்முனை வாளன்றி வேறிலை !
இறை நம்பிக்கையினை மதம் என்ற பெயரால் ஊன்றச் செய்து பிரிவினை வாதத்தின் உயிர் நாடியாய் இதனை மாற்றியிருக்கும் ஒருவித வலையினை துரதிர்ஷ்ட வசமாக வலைக்குள் அடைபட்ட எவரும் உணர்வதில்லை !
தொடர்வோம் ...
அன்புடனும், கருணையுடனும் , கண்ணியத்துடனும்
இராஜன் இராதாமணாளன்









