Thursday, February 11, 2016

வழுவுச்சம்

முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போதையும் விட ஊற்று கொஞ்சம் அதிகமாகக் கசிந்துகொண்டிருந்தது. அதன் உச்சியில் மர அணிலொன்று நின்று எனை முறைத்துக்கொண்டிருந்தது. முன்புறச்சாலையை பக்கவாட்டுப்பாறை ஒன்று முழுவதுமாக மறைத்துக்கொண்டிருந்தது. ஜீப்பை விட்டுக் கொஞ்சம் முன்பக்கமாய் நடந்தேன். வளைவுக்கு முன்னால் சற்று தள்ளி   இரண்டு யானைகள் சாலையை மறித்தவாறு நின்று பாறையோர மூங்கில் மரங்களைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தன. 

என்னைக் கண்டதும் தாசில் தார் ஜீப்பின் டிரைவர் இறங்கிக்கொண்டான். பக்கத்து சீட்டில் பெருத்த உருவமொன்று தூங்கிக் கொண்டிருந்தது. 

“எறக்கத்துல இன்னும் ரெண்டு உருப்படி நிக்குமாட்டமிருக்குதுங்க”

நான் பதிலேதும் சொல்லவில்லை. இனி அவை சாலையை விட்டு இறங்கும் வரை காத்திருக்கலாம். ஜீப்பிற்குத் திரும்பினேன். இந்தக்காட்டின் மேல் முன்னெப்போதையும் விட பிரியம் மிகுந்திருப்பதாக நினைத்த மறு வினாடி அது நிஜமில்லை என்றும் தோன்றியது. இந்த ஒரு வருட காலத்தில் மீண்டும் இந்தக் காட்டுக்கு வருவது பற்றி ஒருமுறையேனும் யோசித்திருப்பேனா என்றால் கிடையாது தான்.

இங்கிருக்கும் எவரையும் வாழ்வில் இனி ஒருபோதும் சந்தித்திடக் கூடாதென்று நினைத்திருந்தேன். பின் அதில் எவரையுமே என்பதில் மட்டும் குழம்பி நிற்பதாய் ஆனது.  முதலில் நின்றிருந்த ஜீப்பிலிருந்து டிஎப்ஒ இறங்கி சினேகமாகப் புன்னகைத்தார். அவர் கண்களைச் சந்திக்காமலிருக்கத் திரும்பிய போது கலெக்டரின் காரிலிருந்து தபேதார் இறங்கி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தான்.

“அய்யா உங்கள காருக்கு கூட்டியாரச் சொன்னாருங்க”

“என் ஜீப்பு இருக்கே”

“அது நானு வேணா ஓட்டிட்டு வந்துர்றனுங்க”

கலெக்டரின் கார் மட்டும் உறுமிக்கொண்டிருந்தது. மற்ற ஜீப்புகளிலிருந்து அலுவலர்களும் டிரைவர்களும் சாலையோரம் இறங்கி நின்றுகொண்டிருந்தனர்.  காரை நோக்கிச் சென்றேன். சதாசிவம் ஐ ஏ எஸ். நான் சர்வீஸில் இருந்தபோது பயிற்சி கலெக்டராக ஏழெட்டு மாதங்கள் என்னிடம் இருந்திருக்கிறான்;  அந்த மரியாதைக்காகவே நான் சொன்னதும் இங்கே வர சம்மதித்திருந்தான். டிரைவர் இறங்கி கதவைத் திறந்து விட்டான். 

“உக்காருங்க சார்” என்று நகர்ந்து அமர்ந்து கொண்டான்.

“ம்ம்ம்…”

“காளியப்பன்.. போய் டிஎப்ஓவ வர சொல்லுங்க”

டிரைவர் இறங்கிச் சென்றான்.

“மனுவேல் எப்பிடி நீங்க இருக்கும்போதே பழக்கமா சார்”

“அதெல்லாம் இல்ல.. நான் இருக்கும்போது நேஷனல் பார்க் ஓபனிங்குக்கு பிஎம் வந்தாங்களே அப்ப மறியல்னு வந்து உக்காந்துட்டான் அப்பதான் முதல் தடவை பார்த்தது. ரிட்டயர்மெண்டுக்கு அப்பறம் ரெண்டு வருசம் இங்க தங்கீருந்தேன்ல அப்பப் பழக்கம். பழக்கம்னா ரெண்டொருதடவ சந்திச்சிருக்கேன். நல்ல பையன் தான்’’

“ஓஹ்”

“போனவாரம் உங்க கிட்ட மனு கொடுக்க வந்தானாம்… உங்களப் பாக்க முடியலைனு என்கிட்ட வந்து சொன்னான்.. என்னனு விபரம் கேட்டப்பதான் செட்டில்மெண்ட் பிரச்சனை.. கலெக்டர் ஒருதடவ வந்து பாத்தார்னா நல்லாருக்கும்னான்… ப்ச்.. சாரி அபவ்ட் தட்”
“பரவால்ல விடுங்க சார்… வந்த வேல நடக்கலைன்றது ஒண்ணு.. ஆனா அவங்களுக்காக மெனக்கெட்டு ஒரு கலெக்டர் வரானே இப்பிடிப் பண்ணக்கூடாதேனு  கூடவா தோணாது”

டிஎஓ வந்துகொண்டிருந்தார். மெதுவாக காரின் ஜன்னலருகே வந்து நின்றார் மனிதர். பணி ஓய்வுக்கு இன்னும் ஓரிரு வருடங்கள் இருக்கலாம். பழைய காலத்து கவர்மெண்ட் மிஷின். உள்ளே வரும்படி சைகை செய்தான் சதாசிவம். முன் சீட்டில் அமர்ந்துகொண்டு உடலைக் கஷ்டப்பட்டுத் திருப்பி அவன் பக்கமாக அமர்ந்தார். உடல்மொழி பணிவையும் தாண்டி மன்னிப்புக் கேட்கும் நிலையிலிருந்தது.

“சொல்லுங்க”

“சார்… ரொம்ப சங்கடமாப்போச்சு.. நான் நேர்லயே போய் சொல்லிட்டு வந்தேன் சார் நேத்தைக்கு… எல்லாம்  தலையத் தலைய ஆட்டிட்டு கடசில இப்படி பண்ணிட்டானுக சார்”

“அந்த அளவுக்கு இருக்கு அவங்க கூட உங்க டெர்ம்ஸ் இல்ல”

“ சார் அப்படிலாம் இல்லை சார்..”

“வேற எப்பிடி? எனக்கொண்ணும் இல்ல இன்னொரு மாசத்துல டிரான்ஸ்பர் வந்துடும் அப்பறம் நீங்களாச்சு வரப்போற ஆளாச்சு…”

“…..”

“இல்ல எனக்குப்புரியல… அந்த ஆள் சொல்றதுதான் அவங்களுக்கு வேதவாக்கா?”

“ஆள்லாம் இல்ல சார்.. சின்ன பையன். இருவத்தேழு இருக்கும் மீறிப்போனா; ஆனா உண்மைதான் சார்… அவன் சொல்றதுதான் அங்க எல்லாம்…ஜனங்கள்லாம் அப்பாவிக தான் சார். பட் இவன் டேஞ்சரஸ் சார்; போன மாசம் கூட நார்த் ஈஸ்ட்ல எல்லாம் சுத்திட்டு வந்துருக்கான் சார்…இப்பக்கூட வேணும்னேதான் சார் வராம இருந்திருக்கான்..”

“அதான் எதுக்குனு கேக்கறேன்” சதாசிவத்தின் குரல் கொஞ்சம் உயரவும் டிஎப்ஓ அமைதியாகியிருந்தார்.

டிஎப்ஓவைப் பார்க்கவும் பாவமாயிருந்தது.  நிலமையை இயல்பாக்க எண்ணினேன். 

“சதாசிவம்.. நான் அன்னைக்கே சொன்னேன்ல நீங்க மட்டும் வாங்க.. எல்லா டிபார்ட்மெண்ட்லருந்தும் கூப்பிட வேணாம்னு”  

“சார் அதெப்பிடி அந்த மாதிரிலாம் பண்ணமுடியும்.. உங்களுக்குத் தெரியாததா? இதென்ன பர்சனல் மீட்டிங்கா நான் மட்டும் வந்து பேசறதுக்கு?”

“சரிதான்.. ஆனா அந்த ஜனங்களுக்கு பிரச்சனையே ஃபாரஸ்ட் ஆளுக கூடதான்… அவங்கள வெச்சுகிட்டே எப்பிடி உங்ககிட்ட பேசமுடியும்? மனுவேல் பேசுவான் ஆனா மத்தவங்கள்லாம் பயப்படுவாங்கள்ல?”

“ அப்பிடியா சண்முகம்? பேசக்கூட விடாம பயமுறுத்தி வெச்சிருக்கீங்களா என்ன?”

டிஎப்ஓ எதோ சொல்ல வாயெடுத்தவர் நிறுத்திக்கொண்டார். 

“சரி  மனுவேல் என்னோட பேசணும்னா கூட்டி வாங்க”

“சரிங்க சார் திங்கக்கெழமைக்கு மேல கூட்டிட்டு…”

“வாங்க”

டிஎப்ஓ வணங்கிவிட்டு இறங்கி நடந்தார். முன்னாலிருந்த ஜீப்புகள் நகரத் தொடங்கின. கார் வளைவைத் தாண்டும்போது யானைகள் பள்ளத்தில் இறங்கிச் சென்றுகொண்டிருந்தன. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த யானையின் வாலின் மீது பார்வை பதிந்து கொண்டது. அது ஒரு கணம் சிறிய துதிக்கையாகத் தோன்றத்தொடங்கியது. ஏனோ யானைக்குப் பின்புறமும் ஒரு முகம் இருப்பதாகப் பட்டது. விழியில்லாத அந்த முகம் அசைந்து ஆடிப் பின் சென்று வேகமாய் மறைந்தது.“ரெண்டு மாசத்துக்குள்ள அவங்கள எல்லாம் காட்டுக்குள்ள இருந்து வெளிய அனுப்பியாகணும்னு இருக்கேன் சார்…  அவங்க சொல்ற காரணம்லாம் கவர்மெண்ட் ஒத்துக்கப்போறது கிடையாது. நான் மேல பேசின வரைக்கும் இதான் நிலமை. கன்வின்ஸ் பண்ணி அனுப்பிட்டா தலைவலி இருக்காது. இல்லைனா தேவையில்லாத பிரச்சனை. அதுக்காகதான் இவ்வளவு தூரம் மெனக்கெடறேன்”

“ம்ம்ம்”

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. சாலை முன்பை விட சேதமாகியிருந்தது. ஜீப்புகள் குண்டு குழிகளில் ஏறியிறங்கி வேகமாகச் செல்ல காரின் டிரைவர் முடிந்தவரை குழிகளைத் தவிர்த்துவிட்டு வளைத்து வளைத்து மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தான். வன அலுவலக வாசலை அடையும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. டிரைவரின் கண்கள் ரியர்வியூ மிரரில் நொடிக்கொருமுறை என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“கிளம்ப வேண்டியதுதானே சார்?” சதாசிவம் என்னைத்தான் கேட்கிறான் என்பது சில நொடிகளுக்குப் பிறகே உறைத்தது. கிளம்பவேண்டும் என்ற யோசனை உள்ளூர கொதிப்பை உண்டுபண்ணியது. பதில் வருமா வராதா என்று புரியாமல் சதாசிவம் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“இல்ல நீங்க கிளம்புங்க.. நான் இன்னைக்கு ஒரு நாள் இருந்துட்டு வரேன்
“ஓஹ்”

வன அலுவலக வாசலில் ரேஞ்சர், கார்டுகள், கூலியாட்களோடு பழக்கப்படுத்தப்பட்ட யானைகளிரண்டை நிறுத்தி வைத்திருந்தனர்.  கார் அங்கு சென்று நின்றதும் அலுவலர்களுக்கு முந்திக்கொண்டு அவை துதிக்கையைத் தூக்கிக் காண்பித்தன. வெயில் ஏறிக்கொண்டிருந்த போதும் வீசும் காற்றின் குளிருக்கு காதுகள் அடைத்துக்கொண்டன. 

டிஎப்ஓ ஓட்டமும் நடையுமாக வந்து மீண்டும் ஜன்னலருகே நின்றார்.

“எல்லாரையும் கிளம்பச் சொல்லிடுங்க… சார் இன்னைக்கு ஹால்ட். நீங்க லீவுக்கு ஊருக்கு போகலையா?”

“போகணும் சார்”  

“ம்ம்ம் சரி போய்ட்டு வாங்க..” 

டிஎப்ஓ வணங்கிவிட்டுத்திரும்பி நடந்தார். சட்டென எனக்குப் பழனியின் நினைவு வந்தது.

“பழனி இங்கதான?”

“அவன் இருப்பான் சார்”  

“வரச்சொல்றீங்களா”

“முன்னாடி இருக்கற பங்களா ரெடியா இருக்கு சார்” என்றார் டிஎப்ஓ.


“இல்ல நான் உள்ளயே தங்கறேன்.. ஏன்”

“அது…நீங்க வரதில்லனதும் அந்த பங்களா மெயிண்டனன்ஸ் எதும் பண்ணல சார்”

அதற்குள் பழனி வந்துவிட்டிருந்தான்.

“துரை வணக்கமுங்க” 

பழனி கொஞ்சம் இளைத்திருந்தான். வனக்காவலரின் பழைய நைந்த யூனிஃபார்ம் சட்டையையும் பழுப்பேறிய வேட்டியும் உடுத்தியிருந்தான். நாற்பது வயதுதான் இருக்கும் ஆனால் தோற்றம் பத்தைக் கூட்டிக் காண்பித்தது. 

“எப்பிடி இருக்க பழனி…”

“இருக்கனுங்க” மீண்டும் கும்பிட்டான்.

“உள்ள நம்ம பங்களா தங்கற மாதிரி இல்லையா இப்ப?”

“கொஞ்சம் குப்பையடிச்சிருக்குமுங்க.. நான் போன வாரம் போய் கொஞ்சம் சுத்தம் பண்டி வெச்சுட்டு வந்ததுதானுங்க..”

“பாத்துக்கலாம்… கிளம்பு”

“இந்தா ஆச்சு பாருங்.. நிமிசத்துல வரணுங்” உள்ளே ஓடினான்.  ரெவின்யூ ஆட்களிடம் ஏதோ பேசிவிட்டு டிஎப்ஓ திரும்பியிருந்தார்.  சதாசிவத்திடம் விடை பெற்றுக்கொண்டு இறங்கினேன். தபேதார் என் ஜீப் சாவியைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றான்.   எல்லா வாகனங்களும் கிளம்பத்தொடங்கின. இன்னமும் யானைகள் துதிக்கையை உயர்த்திக்கொண்டே நின்றன.


பழனி ஒரு சாக்குப்பையோடு ஓடி வந்தான். 

“புறப்படலாமுங்க”

ஜீப்பென்றால் பின் பக்கம் கீழே அமர்ந்துகொள்வது பழனியின் வழக்கம். சாலையிலிருந்து இறங்கி மண் பாதையில் நுழைந்து வளையும்போது கண்ணாடியில் பார்த்தேன். அவர்கள் வாகன வரிசை புள்ளியாகி மறைந்துகொண்டிருந்தது.

பழனியின் பூர்வீகம் ஆனை மலையல்ல. ஆனால் சிறுவயதிலேயே வந்து வனத்துறை ஆபிசில் வேலைக்கு இருந்து விட்டான். நான் ரிட்டயர்டானதெல்லாம் தெரியுமோ தெரியாதோ; ஆனால் இன்னமும் அவனுக்கு நான் கலெக்டர் தான். வனப்பாதைக்குள் ஜீப் புகுந்த போது புதுக்காற்றைச் சுவாசித்தாற்போல் இருந்தது. நிஜத்தில் எனக்கெப்போதும்  காட்டின் மேல் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை;  பயம் வேண்டுமானால் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. ஆனாலும்  இருட்டுக்குப் பயந்தால் இறுகக்கண்ணை மூடிக்கொள்வோமே அதைப்போல தனிமைக்கு பயந்து காட்டுக்குள் வந்து அடைந்துகொள்வதில்  கொஞ்சம் நிம்மதியிருந்தது. போகவும் இந்த பங்களா நான் இருந்த காலத்தில் பிரதம மந்திரி ஒரு நாள் வந்து தங்குவதற்காக பிரத்யேக கவனிப்புடன் கட்டப்பட்டது. அதன் பிறகு வாரத்தில் இரண்டு நாட்கள் இங்கே வந்து அடைந்து கொள்ளத் தொடங்கினேன். அந்நாட்களில்  கேம்ப் ஆபிஸை யானை முகாமிலேயே வைத்துக்கொள்கிறேனென்று மதறாசுக்கு மொட்டைக் கடிதங்கள் கூடப் போயிருக்கின்றன. 

ரேஞ்சர் அலுவலகத்திலிருந்து 6 கிலோமீட்டர் தாண்டி நடுக்காட்டில் இருந்தது அம்புலி இல்லம். ஜீப்புகள் மட்டுமே செல்லும் சிறிய மண் பாதை. பெரிய பெரிய கற்களும் குழிகளும் வண்டியின் அடிப்பகுதியைப் பதம் பார்த்தன. வனப்பாதையின் முதல் செக் போஸ்ட். நாமேதான் மூங்கிலைத் தூக்கி விட்டு கடந்துசெல்லவேண்டும்.  பங்களா வரை இது போல் ஆளில்லா  செக் போஸ்ட்டுகள் இன்னும் 2 உண்டு. பழனி இறங்கிச் சென்று  கல்லை ஒருபக்கம் வைத்து மூங்கில் கழியைத் தூக்கினான். ஜீப்  நுழைந்ததும் பழையபடி பாதையை அடைத்துவிட்டு வந்து ஏறிக்கொண்டான்.

“முருகன கூட்டி வந்துருக்கலாம்ல பழனி?”

“அவனும் கேட்டானுங்க… தாடிக்கார தொர வராராப்பானு… ஆனா அய்யா  தங்கறார்னு நானு கனாக்கண்டனுங்களா.. திடுதிப்புனு இருக்கறேன்னுபுட்டீங்க”

“ம்ம்ம்”

“ஆனா செம்பகத்துக்கு தெரிஞ்சிருக்குது பாருங்க… எனக்கு இப்பத் தானுங்க தோணுது”

இந்தப்பேச்சை வளர்ப்பதா நிறுத்துவதா என்று தெரியவில்லை. அவள் பெயர் மூளைக்குள் சுழன்றடங்கி விரிந்தது.

“ஏன் அவளுக்கென்ன?”

“பின்ன அதுதானுங்க சொல்லுச்சு… அது ஊருக்குள்ள அய்யா அவுகள்ளாம் வராங்கனு பேசிருப்பாங்களாட்டருக்குது, ஒடனே எம்படகிட்ட வந்து சொன்னுச்சுங்க .. போயி சுத்தம்பண்டி வெக்கலாமுன்னு”

“இப்ப அங்க இருப்பாளா”

பழனி பதில் சொல்லவில்லை. பெருங்குழி ஒன்றினுள் இறக்கி ஏற்றியபோது பின்புறம் இடதுபக்க வீல் மட்டும்  சறுக்கி இறங்கியது. காட்டுப்பாதையின் பழக்கம் விட்டுப்போயிருந்தது;  இறங்கிய வேகத்தில் ஆக்ஸிலரேட்டரை முழுவதுமாக மிதித்தேன்; புழுதியைக் கிளப்பிக்கொண்டு மேடேறிக்குதித்துச் சமநிலையடைந்தது. புதரொன்றில் மோதும் முன்னர் வண்டியை நிறுத்தித் திருப்பியெடுத்தேன் பாதைக்கு. 

“அய்யா பாத்துங்க… தடம் பூரா அரம்ம குழியாக்கெடக்குது”

அடுத்த செக் போஸ்ட்டுக்கு இறங்கிச் சென்று வந்தான் பழனி.

“செண்பகம் அங்க வருமா இப்ப”

என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை; மீண்டும் கேட்டுவிட்டு பழனியை ஒரு நொடி திரும்பிப் பார்த்தேன். 

“அது வராதுங்க தொர… குருதக்காரன் கூட நல்லபடியா இருக்குதுங்க இப்ப.. அவனும் பொட்டாட்டம் பாத்துக்கறானுங்க… அந்தப்புள்ளைக்கு அது தாங்க சரிப்படும்… இந்தப்பேச்ச எடுக்கவே கூடாதுனு நெனச்சிருந்தங்க… நாக்குல நெருப்பத்தான் கொண்டி வெக்கணும் எனக்கு. ஆனா நீங்க கொஞ்சம் அவசரப்பட்டுப்போட்டிங்க  சாமி.. மன்னிச்சிருங்க”

நன்றாக நினைவிருக்கிறது. இதே இடத்தில் தான் செண்பகத்தை முதன்முறை பார்த்தது. சுள்ளி பொறுக்கப்போகும் பெண்கள் அவளை விட்டுச் சென்றுவிட்டதால் தனியாகச் செல்ல பயந்து அங்கேயே நின்றிருந்தாள்; பழனிக்குத் தெரிந்த பெண் என்பதால் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய் விட்டதிலிருந்து பழக்கம். வனம்  உண்மையில் உள்ளிருக்கும் விலங்கைக் கொஞ்சம் உசுப்பிவிடக்கூடியதுதான். காட்டிற்கு வெளியே கந்தல் சேலையும் பரட்டைத்தலையுமாக ஒரு ஆதிவாசிப்பெண்ணைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்று இப்போது எண்ணிப்பார்க்கிறேன். ஆனால் அன்றைக்கு அவள் ஒரு யட்சியைப் போலத்தான் தெரிந்தாள். 

“ஏன் உனக்கு இப்பத்தான் தெரியுதா அது?”

“அய்யா எம்பட மேலயும் தப்பு இருக்குதுங்க… இல்லைனு சொல்ல மாட்டனுங்க நானு. நீங்க கேட்டதுயுமே நாஞ்சொல்லிருக்கணுந்தானுங்க… எதோ புத்தில போயி அவங்கப்பங்கிட்ட பேசிப்போட்டனுங்க.. அந்தத் திருவாத்தானுக்காச்சும் அறிவிருந்துக்கணும். உடுங்க ஆனதாச்சு உனி பேசி என்னாவப்போகுது”

வெளியே அவன் துப்பிய சத்தம் கேட்டது. பாதை செல்லச்செல்லக் குறுகிக்கொண்டே இருந்தது. ஜீப்பின் இருபக்கமும் புதர்ச்செடிகள் உள்ளே புகுந்து மேலே அடித்துக்கொண்டிருந்தன.

“ அய்யா முள்ளுமிருக்குமுங்க இவடத்தாலைக்கு ஒடிச்சே ஓட்டுங்க”

“அவளுக்குப் பிரியமில்லாமலா வந்திருப்பானு நெனைக்கற?”

“நானு உங்களுக்குச் சொல்லலாமானு தெரியலைங்க.. ஆனா அது பிரியமுனா நெனச்சிங்க… தொர கூப்புடறார்னு வந்து போடுச்சுங்க.. சின்னப்புள்ளதானுங்க; காருஞ்சீப்பும் பங்களாவும் பாத்தா பொறவுக்கே வந்துபோடறது… நாம தானுங்க ரோசன பண்டிருக்கணும். அது ஒண்ணுந்தெரியாத புள்ளைனெல்லாஞ்சொல்ல மாட்டனுங்க… ஆனா போறத ஆரும் புடிச்சி வெக்க முடியாது பாத்துக்கங்க.  என்னருந்தாலும் வயசுல அதுக்கு அப்பனாட்டமில்லைங்களா நீங்க?”

பழனி இப்படி முகத்தில் அடித்தாற்போல் பேசக்கூடியவனல்ல. ஸ்டியரிங்கில் இருந்த என் கைகளில் ஜீப்பின் அதிர்வினைச் சற்று அதிகமாகவே உணர்ந்தேன். 

“வயசு தான் பிரச்சனைனா..”

“அய்யா வயசுதான்னு சொல்லலைங்க. நீங்க சிறுத்தப்புலி நல்லா அழகா இருக்குதுனு புடிச்சிக் கட்டி வெச்சுக்கலாமுன்ற மாதிரி பாக்குறீங்கய்யா… அது மனுசியில்லைங்களா. அத சரிக்குச் சமமா நீங்களும் பாக்க முடியாதுங்க அவளும் பாக்க முடியாதுங்க” 

“நான் நல்லா வெச்சுக்கல அதனால குதிரக்காரன் கூடப்போயிட்டா அப்பிடித்தான?”

“எனக்கு சொல்லத்தெரிலங்க… ஆனா காட்டுத்தேனப் பாத்தா அப்பிடியே கைய விட்டு எடுக்கலாம்னு தாங்க தோணும். ஆனா அது பசியில பண்றதில்ல பாருங்க. அப்புடிலாம் எடுத்து யாரும் குடிக்கவும் முடியாதுங்க சாமி. எதோ நீங்க ஆசப்பட்டுப்போட்டீங்க… அவங்கப்பனும் கட்டிக்குடுத்துட்டான்; ஆனா அதுக்கு நீங்க நெனைக்கறாப்ல பிரியமெல்லாம் கிடையாது பாத்துக்கங்க. இத்தனைலயும் நாம பண்டுனதுதான் தப்புனு சொல்லுவனே தவுர அது போனது… அதுவும் அவங்கூடப்போனது தப்புனே சொல்ல மாட்டனுங்க”

அடையைப் பிழிந்தால் கையெல்லாம் வழியும் அடர்த்தியான மலைத் தேனின் மனச்சித்திரம் ஏனோ தோன்றியது. கடைசித் திருப்பத்தில் வளைத்து பங்களா வாசலில் கொண்டு போய் நிறுத்தினேன். பெரிய மாற்றம் எதுவுமில்லை. முன்புறத் தோட்டம் மட்டும் காய்ந்து போயிருந்தது. இறங்கிக் கொண்டேன். பழனி ஓடிப்போய் கதவைத் திறந்து வைத்துவிட்டு வந்து என் பெட்டியையும் அவன் கொண்டு வந்த சாக்கு மூட்டையையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். சன்னல்கள் வழி பாதி வீட்டுக்கு வெயில் நீண்டிருந்தது. 

“ மேல் ரூம்புல கொண்டி வெச்சிரலாங்களா “

“இங்கயே வெச்சிடு… சேர் எங்க?”

ஹாலில் இருந்த பெரிய மேசையின் மீது பெட்டியை வைத்துவிட்டு உள்ளே சென்று ஈசிச்சேரை இழுத்து வந்து மேசையருகே போட்டுவிட்டுச் சமையலறைக்குச் சென்றான். சேரில் அமர்ந்த போது வனப்பறவை ஒன்றின் சத்தத்துடன் இறுகியது அது. பெட்டியிலிருந்து மது பாட்டிலை எடுத்துத் திறந்தேன். கார்க்கு பாட்டிலின் வாயிலிருந்து விடுபடும் ஒலி கேட்டிருக்க வேண்டும்.,  கழுவிய கண்ணாடி தம்ளர் ஒன்றை உதறிக் கொண்டு வந்து மேசை மீது வைத்தான் பழனி. விளிம்பிலிருந்து கீழ் நோக்கி வழிந்துகொண்டிருந்தது நீர்.

“மறுக்கா அந்தப்புள்ளையக் கூட்டிகிட்டு போலாம்னு கீது வந்துருக்கீங்களாய்யா”

வழக்கமாக ஊற்றும் அளவில் நிறுத்த மறந்து தம்ளரின் முக்கால்வாசிக்கு நிறைத்துவிட்டிருந்தேன். அவன் பார்வை என் முகத்திலேயே நின்றிருப்பதை உணர முடிந்தது. நான் பதில் எதுவும் சொல்லவில்லை. முழுக்கவும் நிரப்பிக்கொண்டேன். கண்களில் நீர்முட்டத்தொடங்கியது; ஒரே மிடறில் அந்தத் தம்ளரைக் காலி செய்து வைத்துவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டேன். மீண்டும் அதே அளவு நிரப்பி வைத்துக்கொண்டு பழனியைப் பார்த்தேன். கெஞ்சும் தோரணையில் நின்றுகொண்டிருந்தான். கைகள் கூப்பத்தயாராக இருந்தன.

“வேணாங்கய்யா… அது மண்ணாந்தையாட்ட புள்ளைங்க… நீங்க அத எதோ பெருசா மனசுல நெனச்சிகிட்டீங்க. அதுக்குல்லாம் உங்க மனசு புரியாதுங்க துரை. அந்தப்புள்ள புத்தி நெனப்புக்கு அவன் போதுங்கய்யா… போச்சாதுனு உட்டுருங்க”
யோசிக்கையில் உண்மையில்லாத எதையும் அவன் சொல்லவில்லை. இதில் எனக்குத் தெரியாத விஷயம் என்றும் ஒன்றுமில்லை. மது இறங்கிய பாதை எரிந்து கொண்டிருந்தது.  மீண்டும் ஒரே மிடறில் பருகிவிட்டுச் சாய்ந்தேன். இன்னமும் அங்கேயே நின்றுகொண்டிருந்தவன் நான் தலையசைத்ததும் மெதுவாக உள்ளே சென்றான்

நெருப்பையள்ளிப் பருகியதைப் போலிருந்தது. தலை பாரமாகிப் பின்புறம் இறங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். கண்களை இறுக மூடிக்கொண்ட போது கரும்பாறை ஒன்றின் மேல் ரேகைகள் அசைந்து நகரும் காட்சியொன்று தோன்றியது. ரேகைகள் மடிப்புகளாகின; அவற்றின் நகர்வில் ஒரு சுழற்சியிருந்தது. அச்சுழலின் தொடக்கம் எதுவெனத் தேடித்தொடர்ந்து கொண்டிருந்தது மனம். மையம் உள்ளிறங்குகிறதா மேலேறிவருகிறதா என்று தெரியாதபடிக்கும் வேகம் பிடிக்கத் தொடங்கியபோது ஓர் இருள் வந்து மூடியது மொத்தத்தையும்.

செம்போத்தின் சத்தத்திற்குத் தூக்கம் கலைந்தபோது பின்பக்கம் ஏதோ பேச்சுக்குரல் மட்டுப்பட்டது.  எழுந்து செல்வதற்குள் மனுவேலும் பழனியும் வந்து நின்றனர். 

“தொர வணக்கங்க”

சவரம் செய்த முகம் அவனது கருநிறத்தை இன்னமும் எடுப்பாகக் காட்டியது. சிறிய உருவமும் உள்ளடங்கிய கண்களும் இறுகிய உடலும் ஒவ்வொரு முறையும் யாரையோ நினைவு படுத்துகிறது.

“இங்க இருக்கேன்னு யாரு சொன்னா பழனியா”

“இல்லைங்க நானே காலைலயே நீங்க காட்டு பங்களாவுக்கு வர்றதப் பாத்தேன்”

பழனியைப் பார்த்தேன். இயல்பாகவே நின்றிருந்தான். மனுவேல் காலையில் வராதது குறித்து உண்மையில் எந்தக்கோபமும் என்னிடம் இல்லை. ஆனால் சினேகமாகப் பேச முடியவில்லை. மனம் தகித்துக்கொண்டிருந்தது. இதற்கு இவனும் பழனியும் எதோ ஒரு விதத்தில் காரணம் என்று நம்பச் சொல்லியது.

“தலை விண்ணு விண்ணுனு இருக்கு பழனி”

“தூக்கம் பத்திருக்காதுங்க.. இன்னுஞ்சித்தங்கூறு படுங்க இல்லாட்டி”

மதுவை நிரப்பிக் கொண்டேன். மனுவேல் நானாகப் பேசட்டுமென்று நின்றுகொண்டிருப்பதாய்ப் பட்டது.  பழனி பின்பக்கம் போய் இரண்டு கொலுமிச்சைகளைக் கொண்டுவந்து வெட்டி வைத்தான். விஸ்கியின் சுவை உறக்கக் கசப்பையெல்லாம் அடித்திழுத்துக்கொண்டு உள்ளிறங்கியது.


பழத்தின் சாற்றை உறிஞ்சிக்கொண்டு எழுந்தேன். கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. புட்டியில் சரி பாதி காலியாகியிருந்தது. 

“குடிக்கறியா”

“குடிச்சதில்லைங்க”

“அப்பிடியா பழனி”

“நெசந்தானுங்க”

“உக்காரு வந்துர்றேன்” 

வாசலருகே இருந்த சிறு தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. முகத்தைக் கழுவிக்கொண்டு வந்த போது மனுவேல் மேசைக்கருகே வந்து நின்றிருந்தான். குனிந்து நிமிர்ந்ததில் தலை சுற்றல் கொஞ்சம் அதிகமாயிருந்தது. 

“என்ன பழனி? மன்னிப்புக் கேக்கணுமாமா?” 

பழனி கைகளைக் கட்டிக் கொண்டான். மனுவேல் அவனாகவே தொடங்கினான்.,

“அப்பிடியில்லீங்க தொர. மரியாதைக்கு ஒரு பேச்சு பாத்துட்டு போயிரலாம்னு தோணுச்சுங்க” 

“மரியாதை என்ன மரியாதை. நன்றி  விசுவாசம்ல வேணும். மரியாதையெல்லாம் அடுத்ததுதான்”

வாய் குழறவில்லை என்றாலும் வார்த்தைகள் கட்டுப்பாடின்றி வெளியேறிக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது. மனுவேல் எதுவும் பேசவில்லை. அந்தி சாயத் தொடங்கியிருந்தது. 

“லேட் ஆகிடுச்சோ… பழனி வா ஒரு நடை போயிட்டு வந்துடலாம்”

“அய்யா நானு வரணுங்க” மனுவேல் கிளம்பினான்.  பழனியைப் பார்த்தேன்.

“படுக்கற ரூம்பு தூசியடிச்சுக் கெடக்குது. கொஞ்சம் சுத்தம் பண்டி வெச்சிர்றனுங்க. நீங்க பேசிட்டே போயிட்டு வந்துர்றீங்களாய்யா”

பழனி இல்லாமல் நான் காட்டுக்குள் சென்றதில்லை இதுவரை. மாலை மங்குவதற்குக் கொஞ்சம் முன்பே கூட்டிச்சென்றுவிட்டு இருள் கவிவதற்குள் அழைத்து வந்து விடுவான். இப்போதும் கூட இன்னொரு முறை கூப்பிட்டால் வந்துவிடுவான் தான். ஆனால் கூப்பிடத் தோன்றவில்லை. 

மனுவேல் முன்னே நடந்தான். வழக்கமாக நடக்கும் பாதையின் தடம் முழுக்கவும் மறைந்திருந்தது. நானும் பழனியும் நடந்தே உருவான ஒற்றையடிப்பாதை அது. பங்களாவிலிருந்து வண்டிப்பாதைக்கு எதிர்ப்புறமாக காட்டுக்குள் சென்று திரும்ப எப்படியும் ஒருமணி நேரம் பிடிக்கக் கூடியது. மனுவேல் எனக்காகக் கொஞ்சம் மெதுவாக நடந்துகொண்டிருந்தான். நான் அவனுக்குப் பக்கவாட்டில் வந்ததும் சற்றுப் பொறுத்து பின் தொடர்ந்தான். பின்புறம் திரும்பி ஒரு முறை பங்களாவைப் பார்த்தேன். பெருமரம் ஒன்று பகுதிக் கட்டிடத்தை பார்வையிலிருந்து மறைத்துக்கொண்டிருந்தது.  மனுவேலும் நின்றுவிட்டான். அம்மரத்திலிருந்து பழுத்து உதிர்ந்த இலை ஒன்று மெதுவாய் அசைந்தாடி இறங்கிக் கொண்டிருந்தது. காட்டின் பேரமைதியை, அசைவறு நிலையை உடைத்திறங்கிய அவ்விலை இடையில் அந்தரத்தில் நின்றுகொண்டது. மனுவேலைப் பார்த்தேன். 

“செலந்தி வலையா இருக்கும்ங்க”

இருக்கலாம். மீண்டும் நடக்கத்தொடங்கினேன். 

“அய்யா கோவிச்சிகிட்டீங்கனு நெனைக்கறேன். ஆனா டிஎப்ஓ இருக்கைல எங்க சனங்க பேசப் பயப்படுதுங்கய்யா”

“ம்ம்ம்… நான் எதுக்கு இருக்கேன் அப்போ”

“ஒவ்வொரு தடவைக்கும் உங்கள எதிர்பாத்துகிட்டு இருக்க முடியாதில்லைங்களே”

“சரி சொல்லு… நான் பாத்த காலத்துலருந்து நீங்க காட்டுக்கு வெளிய தான இருக்கீங்க… இப்ப என்ன காட்டுக்கு செட்டில்மெண்ட்?”

“அய்யா இப்ப இருக்கற எடத்துல ரெண்டு தலமுறையாத்தாங்க இருக்கோம். கெணத்துல தண்ணி வத்துச்சுனு எங்க தாத்தன் காலத்துல வந்து தங்குன எடமுங்க இது. இன்னும் காட்டுக்குள்ள செட்டில்மெண்டு கேக்கற எடத்துல மூணு கெணறு, ஒரு கோயிலுனு செதஞ்சு கெடக்குதுங்க”

“இப்பவும் இருக்கா”

“இருக்குதுங்க”

“அப்பிடியே இருந்தாலும் அந்தக்காலம் வேற… இப்ப அது முழுக்க காப்புக் காடு. அங்க சுள்ளி பொறுக்கக் கூட யாருக்கும் அனுமதி கெடையாதுன்றதுதான் சட்டம்”

“செட்டில்மெண்ட்டும் சட்டம் தானுங்களே.. அதுக்குத்தான் கேக்கறமுங்க”

கால்கள் வலிக்கத் தொடங்கின. பேசிக்கொண்டே நடக்கச் சிரமமாயிருந்தது. மதுவின் விசை மூளைக்கேறத் தொடங்கியது. நடையின் வேகத்தைக் குறைத்துக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவனோ முன்னே நடக்கத் தொடங்கியிருந்தான்.

“சரி இப்ப இருக்கற எடத்துக்கு என்ன பிரச்சனை?”

“அதுவும் காடுதான்னுட்டு வெரட்டுறாங்கய்ய்யா. எங்க ஊரு இருக்கற எரநூத்து எழுவத்து எட்டு ஏக்கர் காப்புக்காட்டுக்கு வெளியதான் இருக்குனு தாசில் தாரு அறிக்க குடுத்துருக்காருங்க ஆனா 1905ல சர்வே  பண்டி தீர்வ செய்யாத தரிசுனு போடறக்கு பதிலா ஒதுக்கப்பட்ட வனம்னு மாத்தி ஒரு ரெஜிஸ்டருல பதிவு பண்ணிப்போட்டாங்களாம். அதனால கிராம கணக்குல அந்த நெலம் வரல அவ்வளவு தானுங்க.. மத்தபடிக்கு அது காட்டு நெலம் இல்லைனு ஃபாரஸ்ட்டுக்காரங்களுக்கே தெரியும்ங்கய்யா”

 “அவங்க கிட்ட ரிசர்வ் ஃபாரஸ்ட்ன்றதுக்கு ஆதாரமில்ல அதே மாதிரி உங்க கிட்ட தரிசு நெலம்ன்றதுக்கு ஆதாரமில்ல.”

“ஆமாங்க ஆனா தரிசுதான்னு கோர்ட்ல போட்டு வாங்கிக்கலாம்னு இருக்கோம் தொர”

“அதப்பண்ண வேண்டியதுதான… அப்பறமும் ஏன் காட்டுக்குள்ள இருக்கற பழைய ஊருக்கு செட்டில்மெண்ட் கேக்கறீங்க?”

“இப்ப இருக்கற ஊர்ல காடு கிடையாதுங்களே… பொழப்புக்கு என்ன பண்ணுவம்ங்கய்யா? காடு ஒண்ணுதானுங்களே எங்க சனத்துக்கு இருக்கற ஒரே பொழப்பு”

பொழுது விழுந்திருந்தது. பழனியையும் கூட்டிவந்திருக்கவேண்டும் என்று தோன்றியது. வழக்கமாக நடந்து திரும்பும் இடத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தோம். முதலில் ஆளுயரப் புற்றுகள்  சற்று தூரத்திலிருந்தன. எனக்கோ அவை அழைப்பதாகத் தோன்றியது. அங்கு வந்தடைந்ததும் தூரத்தில் பட்டுப்போய் விழுந்த மரமொன்று பிரசவத்துக்கு முக்கும் பெண்ணின் உருவத்தில் கிடந்தது. அதனை நோக்கிக் கால்கள் நடக்கத்தொடங்கின.   

“உனக்கு நல்லவிதமாச் சொன்னாப் புரியறதில்ல. அது ஆகாத காரியம். நீ சொன்னது மாதிரி கேஸ் போட்டு இப்ப இருக்கற எடத்தக் காப்பாத்திக்கப்பாரு அது ஒண்ணுதான் நான் சொல்ல முடியும். இப்பவே காட்ல உங்க ஆளுக சும்மா இருக்கறதில்ல. இதுல செட்டில்மெண்ட்டும் குடுத்துட்டா அப்பறம் காடே இருக்காது”

“என்னங்கய்யா நீங்களும் அவிங்களாட்டமே பேசறீங்க? எங்காளுக மரத்த வெட்டுறமுங்களாய்யா? மரத்த வெட்டி மேல ஏறிங்களா நாங்க உக்காந்துக்க முடியும்? யாருக்கு வெட்டிக் குடுக்கறம்னு உங்களுக்கு தெரியாதுங்களாய்யா? ஊருக்கு நாலு பேரு பண்ற தப்புக்கு மொத்த சனத்தையும் சொன்னா எப்பிடிங்க?”

“காடு மனுசனுக்கு கெடையாது மொதல்ல அதப்புரிஞ்சிக்க… அது மிருகங்க நிம்மதியா வாழறதுக்கு மட்டும் தான்.”

“மனுசன் மிருகமில்லைங்களா? மனுசங்காலுப் படாத காடுனு ஒண்ணு ஒலகத்துல உண்டுமுங்களா”

பாதத்திற்கடியில் மிதிபட்டு நசுங்கி எழமுடியாது சாய்ந்திருக்கும் செடிகளை நின்று திரும்பிப் பார்த்தேன். 

“இந்த விசயத்தப் பொறுத்த வரைக்கும் மனுசன் மிருகமில்ல போதுமா?”

“ஆனா இந்த ஒரு விசயத்துல தானுங்கய்யா மல சனத்த நீங்கள்லாம் மனுசன்னு ஒத்துக்கறீங்க”

நாவறண்டிருந்தது. இளைப்பு வாங்கத் தொடங்கியது. அவனோ இன்னமும் என்னைச் சீண்டத்  தயாராய் நின்றான். 

“உங்கள மனுசன்னு மதிச்சிப்பேசுனேன் பாத்தியா அதான் நான் பண்ண தப்பு”

அவன் சிரித்துக் கொண்டான். 

“பாருங்க… நாங்க எங்களுக்குப் பாத்தியப்பட்டதக் கேட்டாக்கூட பிச்சபோடற மாதிரிதான் பேசறீங்க. உங்களுக்கும் அந்த ஆபிசருகளுக்கும் எந்த வித்தியாசமுமே இல்லைங்களேய்யா”

“உங்களுக்கு  நல்லது சொல்றேன்ல… அப்பிடித்தான் தெரியும்.”

“சொல்றேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க தொர. உங்களுக்குப் புரியாதுங்கய்யா… நாங்க நெனைக்கறது புடிக்கறது எதுவுமே உங்களுக்குப் புரியாதுங்க. உங்க பிரியத்துக்கு எங்களப் போட்டுப் படுத்திட்டு நல்லதுக்குத்தான் செய்யறோம்ங்கறீங்க. நல்லது எதுனு எங்களுக்குத் தெரியாதுங்களாய்யா… இப்பத் தெரியுதுங்களா அந்தப்புள்ள ஏன் போயிருச்சுனு”

இவனிடமிருந்து நான் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. கழுத்திலிருந்து மார்பு வரை மரத்துப் போய்விட்டதாகத் தோன்றியது. அதற்குமேல் அவனது கண்களைச் சந்திக்க வலுவில்லை.

“நீ போகலாம்.. இதான் நான் உன்னையப் பாக்கறது கடைசியா இருக்கணும்.” நான் கத்தி நிறுத்தியதும் மெலிதாய் எதிரொலித்து அடங்கியது. காடு நான் சொன்னதைத் திரும்பச் சொன்னதாய்ப்பட்டது. 

மனுவேலின் முகத்தில் சலனமேதும் இல்லை. இருவரிடமும் குரூரமான திருப்தி மிஞ்சியதாய்ப் பட்டது.

“பங்களா வரைக்கும் கூட வர்றனுங்க”

“எனக்கு வழி தெரியும் நீ கிளம்பலாம்”

மனுவேல் சில நொடிகள் நிலம் பார்த்து நின்றவன் பின் வனத்துக்குள் புகுந்து மறைந்தான். பங்களாவின் மேற்கூரை விளக்கு வெகுதூரத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது. நிலவில்லாத வானம். நட்சத்திரங்களின் வெளிச்சம் நிலம் தொட வாய்ப்புண்டா? இருளுக்குப் பழகிய கண்கள் இன்னும் கூர்மையாய்த் தேடத் தொடங்கியிருந்தன. வறண்டு பாளம் பாளமாகப் பிளந்திருந்த நிலம் ஒன்று சற்று தூரத்திலிருந்து அழைத்தது. மரங்கள் உரித்திழுக்கப்படும் சப்தம் அருகில் எங்கிருந்தோ துல்லியமாய்க் கேட்டது. எதிரில் அடர்ந்த வனம் ஆயிரம் வாசல்களைத் திறந்து வைத்திருந்தது; அதனுள் புழுதியப்பிய ரேகைகள் அசைந்து கொண்டிருந்தன. ராஜன் ராதாமணாளன்

Mail ~   rajan@rajanleaks.com